அமெரிக்காவின் நியூஜெர்சியில் படித்துக் கொண்டிருக்கும் இரண்டு இந்திய மாணவிகள் ஒரு கடையில் சில பொருட்களுக்கு பணம் செலுத்தாமல் வெளியேற முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இரு மடங்கு தொகையை வழங்க முன் வந்த மாணவிகள், மீண்டும் இந்த தவறை செய்ய மாட்டோம் என்று கெஞ்சிய போதிலும், போலீசார் அவர்களை கைது செய்தனர் என்ற செய்தி சமீபத்தில் பத்திரிகைகளில் வந்தது. படிப்பு, வேலை நிமித்தமாக மற்றும் சுற்றுலாவாக பலர் வெளி நாடுகளுக்கு செல்கிறார்கள். அவ்வாறு செல்லும்போது அந்நாட்டின் சட்ட விதி முறைகள், பழக்க வழக்கங்களை தெரிந்து கொண்டு. அதற்கேற்றார்போல் மாற்றிக் கொள்ள வேண்டும்.
சிங்கப்பூரில் குப்பைகளை கண்ட இடங்களில் வீசி எறிந்தால் உடனே தண்டனை கிடைக்கும். ஜப்பானிய மக்கள் தன் நாட்டை சுத்தமாக வைப்பதை தங்கள் கடமையாகக் கருதுவர். அங்கு ஒருமுறை விமான நிலையத்தில் ஒருவர் காபியைக் கடையிலிருந்து வாங்கிக் கொண்டு வருகையில் சிறிது கீழே சிந்தி விட்டது. உடனே கடையில் இருந்தவர் விரைவில் அந்த இடத்துக்கு வந்து சுத்தப் படுத்தியதைப் பார்க்க வியப்பாக இருந்தது. அவர் அது துப்புரவுப் பணியாளர் வேலை என விட்டு விடவில்லை அவ்வாறே ரயில், பஸ் பயணங்களில் சத்தமாகப் பேசுவதை அவர்கள் விரும்புவதில்லை. நாமும் அந்தந்த நாட்டிற்கு ஏற்றவாறு நம் பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் வளர்ப்பு நாயை வெளியில் அழைத்து செல்கையில் அதன் கழிவுகளை அகற்ற ஒரு பையை எடுத்து செல்ல வேண்டும்.
ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளில் கழிவறைகள் புதிய டெக்னாஜியைப் பயன்படுத்தி வடிவமைக்கப் பட்டிருக்கும். அதை உபயோகிக்கும் முறைகளை தெரிந்து கொண்டு பயன் படுத்தினால் சுலபமாக இருக்கும்.
ஹோட்டல்களில் உணவு உண்ணும் போதும் சில ஒழுக்க முறைகளை கடை பிடிக்க வேண்டி வரும். சிலி (chile) போன்ற இடங்களில் பர்கராக இருந்தாலும் கையினால் சாப்பிடுவதை அவர்கள் விரும்புவதில்லை. தென் கொரியாவில் விருந்துகளுக்கு சென்றால் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருக்கும் வயதில் பெரியவர் சாப்பிட ஆரம்பித்த பின் தான் மற்றவர்கள் சாப்பிட வேண்டும். பிரிட்டனில் டீயைக் கலக்கும் போது பக்கவாட்டில் ஸ்பூன் இடிக்கும் சப்தம் வராமல் கலக்க வேண்டும். கலந்த பின் ஸ்பூனை சாஸரில் வைக்க வேண்டும். போர்ச்சுக்கல் நாட்டில் ஹோட்டலில் சாப்படும் போது செஃபிடம் உப்பு, மிளகு பொடி கேட்கக் கூடாது. தாய்லாந்தில் உணவை முள் கரண்டியால் எடுத்து நேராக வாய்க்கு கொண்டு போகாமல் ஸ்பூனில் தள்ளி ஸ்பூனால் சாப்பிட வேண்டும்.
இவ்வாறு அந்தந்த நாடுகளின் விதி முறைகள், பழக்கங்களுக்கு ஏற்றார் போல் நம்மை மாற்றிக் கொண்டால் பிரச்சனைகள் ஏதும் வராமல் அங்கு நிம்மதியாக இருக்கலாம்.