பெரும்பாலான மக்கள் பயணம் செய்வது பேருந்தில்தான். இதற்கு அடுத்தபடியாக ரயில் பிரயாணம். பேருந்தில் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரப்பயணம் என்றால் பரவாயில்லை. ஆனால் பேருந்தில் பல மணி நேரம் பயணிப்பவர்கள் ஏராளம். பேருந்திலேயே ஒரு வாரம் பத்து நாள் சுற்றுலா செல்பவர்களும் உண்டு. இப்படியான பயணத்தின்போது என்ன செய்ய வேண்டும் என்பதை அலசுகிறது இந்த பதிவு.
பேருந்துப் பயணத்தில் முன்கூட்டியே திட்டமிட்டு செல்லுவதற்கும் திரும்பி வருவதற்குமான டிக்கெட்டுகளை முறையாக முன்பதிவு செய்து கொள்ளுங்கள். தற்போது ஆன்லைனில் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. முறையாக முன்கூட்டியே இருவழிப் பயணத்திற்கும் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொண்டால் உங்கள் பயணம் டென்ஷன் இல்லாத மகிழ்ச்சியான பயணமாக இருக்கும்.
நீண்ட தொலைவு பேருந்து பயணத்தின்போது மறக்காமல் சற்று பெரிய பாலீதீன் பைகளை கொண்டு செல்லுங்கள். பேருந்து பயணத்தில் பலருக்கு வாந்தி பிரச்னை இருக்கிறது. பேருந்து பயணத்தின்போது வாந்தி வந்தால் இதைப் பயன்படுத்தி வாந்தி எடுத்து ஜன்னல் வழியே தூக்கி எறிந்து விடலாம். இதனால் யாருக்கும் எந்த சிரமமும் ஏற்படாது. அருகில் இருப்பவர்களுக்கு வாந்தி வந்தாலும் அவர்களுக்கும் நாம் பாலீதின் பைகளைக் கொடுத்து உதவலாம்.
கூடுமானவரை அதிக அளவில் தங்க நகைகளை அணிந்து கொண்டு செல்லாதீர்கள். பேருந்தில் இரவு நேரங்களில் அசந்து தூங்கும்போது திருடு போக வாய்ப்பு இருக்கிறது.
பேருந்துகளில் பயணித்து சுற்றுலா செல்லும்போது சிறிய ஏர்பேகுகளைக் கொண்டு செல்லுங்கள். அதை அமரும் இடத்திற்கு மேலே உள்ள லக்கேஜ் வைக்கும் இடத்தில் சுலபமாக வைத்துக் கொள்ளலாம். அவ்வப்போது எடுப்பதும் சுலபம். பெரும்பாலோர் டிராலி பேகைக் உடன் எடுத்துச் செல்லுவார்கள். அத்தகைய பெரிய பெட்டிகளை பேருந்தில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் வைக்கமுடியாது. வழியிலும் வைக்க முடியாது. அனைவரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும்.
எளிமையாக உடை உடுத்துவது நல்லது. நிறைய உடைகளைக் கொண்டு சென்றால் அதை சுமந்து கொண்டு செல்லுவதும் கஷ்டம். குளிர்பிரதேங்களுக்குச் செல்லும்போது நிச்சயமாக காட்டன் உடைகளைக் கொண்டு செல்லாதீர்கள். துவைத்துப் போட்டாலும் உலர்வதற்கு மிகுந்த நேரத்தை எடுத்துக் கொள்ளும். அதேபோல வெப்பமான பிரதேசங்களுக்கு சுற்றுலா சென்றால் பாலியஸ்டர் உடைகளைக் கொண்டு செல்லாதீர்கள். டீசர்ட் அல்லது காட்டன் உடைகளைக் கொண்டு செல்லுங்கள்.
ஓர் இரவுப் பயணம் அல்லது ஒரு நாள் பயணம் என்றால் கூடுமானவரை உணவுகளை வீட்டிலிருந்தே தயாரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது பிரட் ஜாம் சப்பாத்தி போன்றவற்றை கொண்டு செல்லுங்கள். பேருந்துகளை வழியில் பயணிகள் சாப்பிடுவதற்கென்றே இருக்கும் உணவகங்களில் நிறுத்துவார்கள். இத்தகைய இடங்களில் கண்டிப்பாக சாப்பிவதைத் தவிர்க்க வேண்டும். உணவு தரமற்றதாக இருப்பதோடு விலையும் மிக அதிகமாக இருக்கும். இத்தகைய உணவுகள் உங்கள் வயிற்றைக் கெடுத்து உங்கள் பயணத்தை மிகவும் சிக்கலானதாக ஆக்கி விடும். தரமான தண்ணீரையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலான சிக்கல்கள் தரமற்ற தண்ணீரினால் ஏற்படுபவையாகும்.
பேருந்தின் வலது பக்க ஜன்னல் இருக்கைகளில் அமர்ந்து பயணிப்பவர்கள் இரவு நேரங்களில் வலது கையை முழுவதுமாக உள்ளே வைத்துக் கொண்டு பயணியுங்கள். தூங்க வேண்டும் என்றால் ஜன்னல் கண்ணாடியை முக்கால்வாசி மூடிவிட்டுத் தூங்குங்கள்.
பவர் பேங்க்கை எடுத்துச் செல்லுங்கள். உங்கள் மொபைல் போனை சார்ஜ் செய்ய உதவும். உங்கள் மொபைல் போனும் பத்திரமாக உங்களுடனே இருக்கும். பேருந்துகளில் பெரும்பாலும் சார்ஜிங் பாயிண்ட் வசதிகள் இருக்காது.
உங்கள் பேருந்துப் பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்.