சேலம் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது மாம்பழங்கள்தான். சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட சுற்றுலாத்தலங்கள் பார்த்து ரசித்து வியக்கக்கூடிய அளவுக்கு உள்ளன. அப்படிப்பட்ட சேலத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் என்னென்ன என்பதை இப்பகுதியில் பார்ப்போம்.
சேலத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்திலும், மேட்டூரில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது இந்த பூலாம்பட்டி ஆறு. கடல்போல் காட்சியளிக்கும் காவிரி ஆற்றின் ஒரு பகுதியில் இயற்கை மலைகள் சூழ்ந்த இடத்தில் பூலாம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. பூலாம்பட்டி, “குட்டி கேரளா” என்றும் அழைக்கப்படுகிறது. அதேபோல் ஆற்றில் படகு சவாரி செய்வதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
விசைப்படகில் சென்று வர நபர் ஒருவருக்கு ரூபாய் 30 மட்டுமே கட்டணமாக பெறப்படுகிறது. அதேபோல் குழுவாகவோ, குடும்பமாகவோ மொத்த இயற்கை அழகையும், மலைகளையும் ரசித்து பார்ப்பதற்கு ரூபாய் 300 இல் இருந்து ரூபாய் 500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல் இங்கு வாய்க்கு ருசியாக மீன் உணவுகளும் கிடைக்கிறது.
சேலத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் ஈரோட்டிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த சங்ககிரி மலைக்கோட்டை அமைந்துள்ளது. இந்த மலைக்கோட்டைகளில் ஒன்பது கோட்டைகள் உள்ளன. விஜயநகர பேரரசுகள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த கோட்டைகளானது கட்டப்பட்டன.
இந்த கோட்டையை பார்வையிட, காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. என்ன ஒரு சிறப்பு என்றால் நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது. கோட்டையில் உள்ளே ஹிந்து, முஸ்லிம் போன்ற வழிபாட்டு தளங்கள் உள்ளன. இந்த சங்ககிரி மலையில்தான், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1805 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை ஐயா தூக்கிலிடப்பட்டார். மலைக்கோட்டையில் இருந்து பார்க்கும் பொழுது இயற்கையழகும், அந்த மலைத் தொடர்களும் உள்ளங்களை வருடி செல்லும்.
சேலம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் கல்லாநத்தம் கிராமத்தின் வடக்கு பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் முட்டல் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி பரந்து விரிந்த இயற்கை அழகுடன் காணப்படும். படகு சவாரி செய்வதற்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆத்தூரில் இருந்து முட்டல் பகுதிக்கு செல்வதற்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன கட்டணம் ரூபாய் 12 ஆகும். அதேபோல் இந்த ஏரியிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் ஆனைவாரி நீர்வீழ்ச்சி காணப்படுகிறது. மழைக்காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் போன்ற மாதங்களில் மட்டும்தான் நீர்வீழ்ச்சியில் குளிக்கலாம்.
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் சாலையில் உள்ள கோரிமேட்டில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும், இந்த பூங்கா அமைந்துள்ளது. இந்த குரும்பம்பட்டி பூங்காவனது 78 1/2 ஏக்கரில் அமைந்துள்ளது. புள்ளிமான், கடமான், நரி, குரங்கு, முதலை, ஆமை, மயில், மலைப்பாம்பு, வெளிநாட்டு நீர் பறவைகள் உட்பட 22 வகையான உயிரினங்களை இப்பூங்காவில் காணமுடியும்.
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து குரும்பட்டிக்கு தினமும் காலை 4:45 மணி முதல் மாலை 6:30 மணி வரை டவுன் பஸ்கள் ஒரு நாளைக்கு 12 முறை இயக்கப் படுகின்றன. கட்டணமாக பெரியவர்களுக்கு ரூபாய் 50, 6 வயது முதல் 12 வயது உட்பட்டவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் ரூபாய் 10 வசூலிக்கப்படுகிறது.
காவிரி ஆற்றுக்கு இடையே கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் மேட்டூர் அணையும் ஒன்றாகும். 1934 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்ற மற்றொரு பெயரும் இந்த அணைக்கு உண்டு. சேலத்தில் இருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலும், ஈரோட்டில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும், இந்த மேட்டூர் அணை அமைந்துள்ளது.
இதற்கு பஸ் கட்டணம் ரூபாய் 32. அணையின் வலது கரை நுழைவு வாயில் பகுதியை பார்வையிட ரூபாய் 10ம், பவள விழா கோபுரத்தில் லிப்டில் சென்று மேட்டூர் அணையின் மொத்த இயற்கை எழில் தோற்றத்தை கண்டு ரசிக்க ரூபாய் 30-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அருகிலேயே அமைந்துள்ள அணைப் பூங்காவுக்கு நுழைவு கட்டணம் ரூபாய் 10. அதேபோல் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவிலும் மேட்டூர் அணைக்கு அருகிலேயே உள்ளது.
ஏற்காடு ஒரு அழகான மலை வாழிடம். சேலத்திலிருந்து 31 கிலோமீட்டர் தொலைவில் ஏற்காடு அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இடமாகும், பசுமையான காடுகள், அருவிகள் மற்றும் ஏரிகள் உள்ளன.
கிள்ளியூர் அருவி, லேடி சீட், பகோடா முனை, யானைக்கல் குகை போன்ற இடங்கள் ஏற்காட்டைச் சுற்றி அமைந்துள்ளது. மலைகளில் இருந்து பார்க்கும் பொழுது ஏற்காட்டின் ரம்மியமும் இயற்கை அழகும் எழில் கொஞ்சும் அளவுக்கு காணப்படும்.
சேலத்துக்கு போனா மேல சொன்ன இடங்களுக் கெல்லாம் மிஸ் பண்ணாம போயிட்டு வந்துடுங்க..! எவ்வளவு செலவாக போகுது நாலு பேர் கொண்ட குடும்பமா போனீங்கன்னா போக்குவரத்து, சாப்பாடு இதர செலவுன்னு ஒரு 5000-குள்ள ஆகும். அப்புறம் என்ன யோசிக்கிறீங்க அடுத்த வாரமே ஒரு சுற்றுலாவ போட்டுருங்க..!