
மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பிரபலமான மலை வாசஸ்தலமான லோனாவாலாவில், பார்க்க வேண்டிய பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அழகிய நீர்வீழ்ச்சிகள், வசீகரமான ஏரிகள், கோட்டைகள் என பட்டியலிடலாம்.
1) டைகர் பாயிண்ட்:
இந்த 650 மீட்டர் உயரம் உள்ள மலை உச்சியில் பசுமையான பள்ளத்தாக்குகள், ஏரிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளின் பரந்த காட்சியை காணலாம்.
இதன் அருகாமையில் மேகங்கள் உயர்ந்து பசுமையான காட்சிகள் பார்ப்பதற்கு ஆனந்தமாக, வியப்பாக இருக்கும். குறிப்பாக பருவ மழையின்போது இந்த டைகர் பாயிண்ட் உள்நாட்டில் வாக் தாரி என்று அழைக்கப்படுகிறது. குதிக்கும் புலியின் வடிவத்தை ஒத்து இருப்பதால் இந்தப் பெயர் வந்தது. சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் அற்புதமான காட்சிகளை இங்கு பார்க்கலாம். இந்த காட்சிக்கு அருகில் ஒரு சிறிய நீர்வீழ்ச்சி உள்ளது. இது மழைக்காலங்களில் மட்டுமே விழுகிறது. நீர்வீழ்ச்சிகள் மற்றும் பிரமிக்க வைக்கும் பள்ளத்தாக்குகளை பார்ப்பதற்கு இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவும், ரம்மியமாகவும் இருக்கும்.
2) கர்லா குகைகள்:
கர்லா குகைகள் இந்தியாவில் மிகவும் பார்க்கக்கூடிய ஒற்றை குகை மற்றும் மிகப்பெரிய பழமையான பிரார்த்தனை மண்டபம், சன்னதி ஆகியவற்றைக் கொண்டு உள்ளது.
இதில் ஒரு முனையில் ஸ்தூபி உள்ளது. கர்லாகுகைகள் சத்வாகன ஆட்சியின் போது கட்டப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய கோயில் ஆகும். 2000 ஆண்டுகள் பழமையான மரக்கட்டைகள் சில இன்னும் இங்கு உள்ளது. செங்குத்தானபாதையில் ஏற கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் ஆகும். உபதேசிக்கும் புத்தரின் சிற்பம் உள்ளது. பாஜா கிராமத்திலிருந்து 400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 22 பாறைகளால் வெட்டப்பட்ட குகைகளின் கட்டிடக்கலையின் அதிசயமாகும்.
இந்தப் பாறையில் வெட்டப்பட்ட குகைகளை விகாரைகள், ஸ்தூபிகள் மற்றும் சைத்தியங்களைக் கொண்டு பயணிகளின் தங்கும் இடமாக கட்டி உள்ளனர். இந்த குகைகள் இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை.
3) புஷி அணை
இந்திராயணி ஆற்றின் மீது கட்டப்பட்ட புஷி அணை லோனாவாலா மற்றும் ஐஎன்எஸ் சிவாஜி இடையே மலைப்பாங்கான நிலப்பரப்பின் பின்னால் உள்ளது. இந்த அணை வசீகரிக்கும் நிலப்பரப்புகள் மற்றும் பாறை நிலப்பரப்புகளால் சூழப்பட்டுள்ளது.
பிரபலமான மற்றும் அழகிய சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்றாகும். அருகாமையில் அழகான நீர்வீழ்ச்சி உள்ளது. மலைகளால் சூழப்பட்ட இந்த அணையில் இருந்து பாயும் நீர் ஒரு பெரிய இயற்கை நீர் பூங்காவை உருவாக்கி உள்ளது. இது சுற்றுலா வருபவர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுப்பதுடன் மனதையும் மயக்கும்.
4) டியூக்ஸ் நோஸ் பாயிண்ட்
லோனாவில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் இதுவும் ஒன்றாகும். இது வெல்லிங்டன் பிரபுவின் பெயரை பெற்றது. பிரபுவின் மூக்கு உள்நாட்டில் நாக் பானி என்று அழைக்கப்படுகிறது.
இதன் அழகிய இடம் அமைதியான சூழல், அழகான பள்ளத்தாக்கு, பசுமைக்கு பெயர் பெற்றது.
உச்சியில் உள்ள சிவன் கோயில் பிரார்த்தனை செய்வதற்கும், அழகான காட்சிகளை அனுபவிக்கவும் ஏற்ற இடம் ஆகும். இங்கு மலையேற்றம், நடைப்பயணம், பாறை ஏறுதல் முதலியவற்றுக்கு பிரபலமான இடம் ஆகும். குறிப்பாக பாறை நிலப்பரப்பு மற்றும் அடர்ந்த காடுகளில் வளைந்து செல்லும் நீண்ட குறுகிய பாதைகள் காரணமாகும்.
5) மெழுகு அருங்காட்சியகம்
லோனாவாலாவில் சுனிலின் பிரபல மெழுகு அருங்காட்சியகம் சுற்றுலா தலங்களில் பார்க்க வேண்டிய ஒன்றாகும். இங்கு சுமார் 100 தேசிய மற்றும் சர்வதேச பிரபலங்களின் சிலைகள் உள்ளன. மெழுகு அருங்காட்சியகம் டோல் பிளாசாவிற்கு அருகில் வர்சோலி ரயில் நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சுனில் கண்டல்லூரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் மெழுகு சிற்பங்களில் சமூக சேவை, வரலாறு, கலை, இலக்கியம், மற்றும் பாப் இசை போன்ற துறைகளை சேர்ந்தவர்களின் மெழுகு சிற்பங்கள் உள்ளன. சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி ,பி .ஆர் .அம்பேத்கர், கபில்தேவ் ,சார்லி சாப்ளின், நரேந்திர மோடி , ,சதாம் உசேன் ,சத்ரபதி சிவாஜி, சீரடி சாய்பாபா ஆகியோரது சிலைகள் இங்கு உள்ளன. லோனாவாலா சென்றால் இதனை பார்க்கத் தவறாதீர்கள்.