

சில மாதங்கள் அமெரிக்காவில் தங்கி இருக்க, அமெரிக்காவுக்கு வந்துள்ள என் கணவரும் நானும், இங்குள்ள கலாச்சாரப்படி தேங்க்ஸ் கிவ்விங் டே விடுமுறையில் குடும்பத்தோடு சுற்றுலா செல்ல திட்டமிட்டோம். நாங்கள் வசிக்கும் போத்தெல் (Bothel) நகரிலிருந்து 'ஆர்காஸ் தீவு' (Orcas Island) க்கு சென்று வர முடிவெடுத்தோம்.
அன்று காலை ஒன்பது மணிக்கு காரில் புறப்பட்டு ஒன்றரை மணி நேரம் பயணித்து அனகார்ட்டஸ் (Anacortes) என்ற பயணப்படகுத் துறைமுகம் (ferry terminal) சென்றடைந்தோம். ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த, ஃபெர்ரியின் கார் டெக்(car deck) பகுதியில் காரை பார்க் செய்து விட்டு, இரண்டாவது தளத்தில் அமைந்திருந்த பயணிகள் இருக்கைகளில் சென்று அமர்ந்து கொண்டோம். அங்கிருந்த ரெஸ்டாரன்ட்டில்
சாண்ட்விச், பர்கர், பாப்கார்ன் போன்ற உணவுகளை வாங்கி சாப்பிட்டபடி கடலையும், கடலுக்குள் அங்கங்கே உயர்ந்து நின்ற மலைக் குன்றுகள், அவற்றின் மீது வளர்ந்துள்ள காடுகளையும் ரசித்தபடி சென்று சுமார் ஐம்பது நிமிடங்களில் ஆர்காஸ் தீவில் இறக்கி விடப்பட்டோம். பின் எங்கள் காரிலேயே 'வெஸ்ட் பீச் ரிசார்ட்ஸ்' (West Beach Resorts)ஸை நோக்கிப் பயணித்தோம்.
வழியில் ஒரு ரெஸ்டாரன்ட்டில் சென்று லஞ்ச்சை முடித்துக் கொள்ளலாம் என்று போனபோது வேகவைத்த உருளைக் கிழங்கை ஸ்டஃப் செய்து தயாரிக்கப்பட்ட ரோல் மட்டுமே கிடைத்தது. அதையே சாப்பிட்டுவிட்டு, எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஓஷன் வியூ கேபின் (Ocean-View Cabin) உள்ளே சென்றோம். வெளியிலிருந்து பார்க்கையில் ஒரு குடில் போல் தோற்றமளித்த அந்த கேபின் உள்ளே, முன் பகுதியில் இரண்டு சோபா, ஒரு டீ டேபிள், டைனிங் டேபிள், நான்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதையடுத்து ஒரு டபுள் டோர் ஃபிரிட்ஜ் மற்றும் மேடையில் நான்கு எலக்ட்ரிக் பர்னருடன் அடுப்பு, பாத்திரம் கழுவ சிங்க், டிஷ் வாஷர், அலமாரிகளில் சமைக்கவும் சாப்பிடவும் என அனைத்துப் பாத்திரங்களும், டீ தூள், காப்பித் தூள், குறைந்தபட்ச மசாலா தூள் என அனைத்தும் அழகுற அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. வலது பக்கம் இரண்டு படுக்கை அறைகள். பாத்ரூம் டாய்லெட் என அனைத்து வசதிகளும் ஒரு நவீன பங்களாவில் உள்ளதுபோல் இருந்தன.
விரைவில் ஃபிரஷ்அப் பண்ணிக்கொண்டு அருகில் அரை மைல் தூரத்தில் உள்ள அருவிகளில் ஒன்றிரண்டைப் பார்த்து வர காரில் புறப்பட்டோம். பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு 'ரஸ்டிக் ஃபால்' என்ற அருவி கொட்டும் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். உயர்ந்து அடர்ந்த மரங்களாலான மலைச் சரிவில், மரங்களின் வேர்களைத்தாண்டி தட்டுத் தடுமாறிச் சென்று பார்க்கையில் ஒரு சிறிய நீர்வீழ்ச்சியிலிருந்து தண்ணீர் கொட்டி, ஓடைபோல் ஓடிக்கொண்டிருந்தது. குளிர் சீசனாக இருந்ததால் ஆள் நடமாற்றமின்றி அச்சமூட்டும் சூழல் நிலவியது. வேகமாக அங்கிருந்து கிளம்பி ஒரு பார்க்கில் அமர்ந்து, குழந்தைகளை விளையாடவிட்டோம். பின் டின்னர் வாங்கிச் செல்ல ரெஸ்டாரன்ட் சென்றோம். அங்கு சீஸ் பிரட், மஃப்பின், சூப், பிஸ்ஸா மற்றும் காலை உணவுக்கு செரியல், பால் போன்றவற்றை வாங்கிக் கொண்டு ரிசார்ட் வந்தோம்.
மறுநாள் காலையில் அனைவரும் கேபின் முன்புறம் அமைந்துள்ள ஃபயர் பிட் (Fire Pit) டில் குச்சிகள் மற்றும் கட்டைகளை அடுக்கி நெருப்பு பற்றவைத்து குளிர் காய்ந்தோம். குழந்தைகள் நெருப்பின் பயன்பாட்டையும், அபாயத்தையும் அறிந்துகொள்ள சொல்லிக் கொடுத்தோம். அங்கு, அருகில் கடலோர நீரில் கூட்டமாக வந்து குளித்துக் கும்மாளமிட்டுக்கொண்டிருந்த பறவைகளையும் கண்டு ரசித்தோம்.
பின் அங்கு பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்றான மோரன் ஸ்டேட் பார்க் (Moran State Park) சென்றோம். அங்கே படகு சவாரி, மீன் பிடித்தல், மலையேற்றம் போன்ற பல வகையான பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. அந்தப் பார்க்கிலிருந்து சுமார் 2,400 அடி உயரமுள்ள மவுண்ட் கான்ஸ்டிடியூஷன் (Mount Constitution) என்ற மலை உச்சிக்கு காரில் சென்றோம்.
அங்கிருந்து மேலும் சிறிது உயரத்திற்கு நடந்து சென்றோம். அங்கே நான்கு மாடி உயரத்திற்கு கருங்கற்கள், வலுவான மரத்துண்டுகள் மற்றும் இரும்புக் கம்பிகளையும் இணைத்துக் கட்டப்பட்டிருந்த, காலத்தால் அழிக்க முடியாத, கட்டிடம் ஒன்றின் உச்சிக்கு சென்றோம். அங்கிருந்து தீவின் மொத்த அழகையும், கடலையும் கண்டு மகிழ்ந்ததோடு, குளிரில் நடுங்கும் கைகளில் மொபைல் போனை இறுகப்பற்றி, படங்களையும் பிடித்துக்கொண்டு கீழிறங்கினோம்.
சுற்றுலாப் பயணிகளுக்காகவென்றே நடத்தப்படும் ரெஸ்டாரன்ட்களில் நாம் விரும்பும் ஃபிரைட் ரைஸ், சப்பாத்தி போன்ற உணவுகள் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. பிரட் புட்டிங், தோட்டத்து ஃபிரஷ் கீரைகள், கிழங்குகள் மற்றும் முட்டை சேர்த்து தயாரித்த ஃபிரிட்டாடா (Frittata) ஆகியவற்றை மதிய உணவாய் எடுத்துக்கொண்டோம். பின் தீவின் முக்கிய தெருக்களில் உள்ள கடைகளில் ஷாப்பிங் சென்று விட்டு, தீவின் வரலாறு கூறும் சிறிய ம்யூசியம் ஒன்றையும் பார்த்தோம். பிறகு, தீவிற்கு செல்வதற்கு பயணித்த மாதிரியே திரும்பி வருவதற்கும் பயணம் செய்து இரவு சுமார் ஏழு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.