
சென்னை புறநகர் ரயில்களில் சில பயணிகளின் விரும்பத்தகாத செயல்பாடுகள் சகபயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருப்பதோடு பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுகிறது. இதை சுட்டிக்காட்டி தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் ரயிலில் நாகரிகத்தையும், தூய்மையையும் ஒழுக்கத்தையும் கடைபிடிக்குமாறு பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. புறநகர் ரயில்களில் ஏற்படும் சில ஒழுங்கீனமான செயல்களை குறிப்பிட்டும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளையும் தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது அது குறித்து இப்பதிவில் காண்போம்.
இருக்கையில் கால்களை வைத்தல்
தங்களுக்கு எதிரே உள்ள காலி இருக்கைகளில் பயணிகள் கால்களை வைப்பதால் அந்த இருக்கைகள் அசுத்தமாவதுடன் மற்றவர்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றன.
இருக்கைகளை இடம் பிடித்து வைத்தல்
ரயிலில் ஏறி வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்காக இருக்கைகளைப் பிடித்து வைப்பதால், முதலில் வரும் மற்ற பயணிகளுக்கு இருக்கை கிடைப்பதில்லை
ரயில் வாசல் பகுதிகளில் அமர்வது
ரயில் பெட்டிகளில் நுழைவாயிலில் பயணிகள் அமர்ந்து மற்ற பயணிகள் ஏறுவதற்கு இறங்குவதற்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
ஓடும் ரயிலில் ஏறுவது
ரயில் முனையங்களில் ரயில் முழுமையாக நிற்பதற்கு முன்பே, இருக்கைகளைப் பிடிப்பதற்காக ஓடும் ரயிலில் ஏறுவதும், இறங்குவோருக்கு இடையூறு செய்வதும் விபத்துகளுக்கு வழிவகுக்கிறது.
மேற்கூறிய செயல்கள் அனைத்தும் ஒழுங்கீனமான செயல்களாக இருப்பதால் மற்ற பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ரயில்வே கேட்டுக்கொண்டுள்ள அறிக்கை பின்வருமாறு…
* ரயிலில் உள்ள இருக்கைகள் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதால் அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஏறும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இடம் பிடிக்கும் வேலையை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
* எதிரில் உள்ள காலி இருக்கைகளில் மற்றவர்களுக்காக இடம் பிடிப்பதும் கால்களை வைத்து அசுத்தப் படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
* ரயில் பெட்டியில் நுழைவாயிலில் அமர்வது ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இடைஞ்சலாக இருப்பதோடு பாதுகாப்பற்றது. மேலும் சம்பந்தப்பட்ட பயணிகளுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் நுழைவாயிலில் அமர்வதை தவிர்க்கவேண்டும்.
பாதுகாப்பான மற்றும் இனிமையான பயண அனுபவத்தைப்பெற அனைத்து ரயில் பயணிகளும் பொறுப்புடனும் கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வலியுறுத்தி கூறியுள்ளது. இனிமேல் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும்போது மேற்கூறிய விரும்பத்தகாத செயல்களைச் செய்யாமல் பயணிக்க முயற்சி செய்யுங்கள்.