
பருவ மழை என்பது பயணிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து விடுபட உற்சாகமான பருவமாகும். இந்த சமயத்தில் சாகச ஆர்வலர்கள் பல மலைகள் மற்றும் மலைத்தொடர்களில் மலையேற்றம் செய்வதற்கு விரும்புகிறார்கள். மழைக்காலங்களில் மலையேற்றம் செய்ய விரும்புவதன் காரணங்கள்- குறைவான கூட்டம், புதிய பசுமையான நிலப்பரப்புகள், வியத்தகு வானிலை மற்றும் மேக விளையாட்டு, மலிவான தங்கும் இடங்கள் ஆகியவையே காரணங்களாகும்.
இருப்பினும் மழைக்காலங்களில் மலையேற்றம் செய்வது வேடிக்கையாக இருந்தாலும், கொஞ்சம் ஆபத்தானதாகவும் இருக்கலாம். எனவே அதற்குத் தகுந்த பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொண்டு செல்வது நல்லது.
மழைக்காலத்திற்கேற்ற வசதியான, எளிதில் உலரக்கூடிய ஆடைகளை எடுத்துச் செல்லவும். எப்போதும் மழைக்கால உபகரணங்களை நீர் புகா கவர்கள் எடுத்துச்செல்லவும்.
பருவ மழையின்போது குளிர் மற்றும் காற்றில் இருந்து பாதுகாக்க நல்ல தரமான மழைக்கோட்டுகள் அல்லது பொன்சோஸ் (Ponchos) அவசியம். (நீர் புகார் தன்மை கொண்ட ஒரு வகை மேலங்கி). இது உடலை மறைத்து மழையிலிருந்து பாதுகாக்கிறது.
எப்போதும் பவர் பேங்குகள் மற்றும் ஆஃப்லைன் வரைபடங்களை எடுத்துச் செல்வது சிறப்பு.
மலையேற்றத்தின்போது பாறைகள் வழுக்கும் மற்றும் பாதை சேறும் சகதியுமாக இருக்கும். எனவே கவனமாகவும், மெதுவாகவும் நடக்கவும். வழுக்காத, நன்கு கிரிப் கொடுக்கும் மலையேற்ற காலணிகளை அணியவும்.
அட்டைப் பூச்சிகளை சமாளிக்க உப்பு அல்லது தெளிப்பான்களை எடுத்துச் செல்லவும்.
கடினமான பாதைகளுக்கு உள்ளூர் வழிகாட்டிகளை பின்பற்றவும். அனுபவம் வாய்ந்த உள்ளூர் வழிகாட்டியை உடன் அழைத்து செல்லவும். அவர்கள் பாதையை நன்கு அறிந்திருப்பார்கள் மற்றும் அவசர காலங்களில் உதவவும் செய்வார்கள்.
நிலச்சரிவுகள் ஏற்பட்டால் இமய மலைப் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும். சில பகுதிகள் நிலச்சரிவுகளை எதிர் கொள்ளலாம் அல்லது சாலைகள் மூடப்படலாம்.
முதலுதவி பெட்டி, போதுமான தண்ணீர், உணவு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச்செல்வது அவசியம்.
பயணம் செய்வதற்கு முன்பு வானிலை அறிக்கையை சரி பார்க்கவும். அதிக மழையின்போது சில மலையேற்றப் பாதைகள் ரத்து செய்யப்படலாம். எனவே வானிலை முன்னறிவிப்பை தெரிந்து கொண்டு செல்வது நல்லது.
திடீர் நிலச்சரிவுகள் அல்லது வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ள ஆபத்தான பகுதிகளை மழைக்காலங்களில் தவிர்ப்பது நல்லது.
தனித்து மலையேற்றம் செல்வதைவிட நண்பர்களுடன் குழுவாகப் பயணம் செய்வது பாதுகாப்பு மற்றும் சுவாரஸ்யம் நிரம்பியதாக இருக்கும்.
மலையேற்றத்திற்கு முன்பு நம் பயணத் திட்டத்தை குடும்பத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது நல்லது.
முக்கியமாக நம் உடல் நலத்தை கவனத்தில் கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். உடல்நிலை சரியில்லாத பொழுது மலையேற்றம் செய்வதை தவிர்க்கவும்.
பெரும்பாலான மலையேற்ற சாகசங்கள் பிரதான நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள பாதைகளை தேர்ந்தெடுப்பதை உள்ளடக்கி இருப்பதால், பருவமழை காலங்களின் பொழுது தேவை ஏற்பட்டால் அனைத்து அவசர தொடர்புகள் மற்றும் எண்களையும் குறித்து வைத்துக்கொள்வது அவசியம்.
பருவ மழை காலத்தில் மலையேற்றம் செய்வதற்கு முன்பு அந்த இடத்திற்கு பொருத்தமான நேரத்தை (பார்வையிட சிறந்த நேரம்) பற்றி அறிந்திருப்பது அவசியம். பகல் நேர மலையேற்றம் பொதுவாக இரவு பயணத்தைவிட பாதுகாப்பானது.