
மூன்று சகோதரிகள் அல்லது நீலமலை
இன்று எங்கள் பயணத்தின் ஆறாவதுநாள். தனியாகப் பணம் கட்டி எங்கள் குழுவில் இருந்த பலருடன் புளூமவுண்டன் என்றழைக்கப்படும் நீல மலையைப் பார்க்கப் புறப்பட்டோம். காலை முதல் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. முந்தைய நாள்(நேற்று) பெற்ற அனுபவத்தை மனதிற் கொண்டு முன்னெச்சரிக்கையாக ரெயின்கோட், குடை, குளிர்ச்சட்டை முதலிய தற்காப்பு ஆயுதங்களோடு புறப்பட்டோம்.
நீண்ட நேரப் பேருந்துப் பயணத்திற்குப் பின் மலையேறும் இடத்தினை அடைந்தோம். வழியிலேயே மழை வந்துவிட்டதால் பேருந்தைவிட்டு இறங்கியதும் மழைக்கோட்டை அணிந்துகொண்டோம். சுற்றுலா வழிகாட்டி நுழைவுச் சீட்டுகளை வாங்கித் தந்தார். பேருந்து ஓட்டுநர் எவ்வாறு செல்லவேண்டும் என்ற வழிமுறைகளைக் கூறினார். அதன்படி (Scenic Railway) கீழ்நோக்கிச் செல்லும் ரயிலில் பயணம் செய்தும் பின்(Scenic Cableway) கம்பி வண்டி மூலம் பயணித்தும் சிறிது தூரம் நடந்தும் இறுதியாக (Scenic Skyway) ஆகாயமார்க்கமாகவும் பயணம் செய்து இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்தோம். கொட்டும் மழையில் ஆங்காங்கே புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும் எங்கள் பயணத்தை முடித்தோம்.