
பிள்ளையார் நோன்பிற்கெனச் சிறப்பாகச் செய்யக்கூடிய திரட்டுப்பால்கூட (அதனைச் சீம்பால் என்று பிற பகுதிகளில் கூறுவார்கள்) இருந்தது. நகரத்தார்கள் பாரம்பரிய வழக்கப்படி பிள்ளையார் படத்திற்கு மாலை சாற்றி ஐந்து வகையான பொரிகள் பொரித்து முறையாக இழைமாவு பிடித்துவைத்து இழை எடுத்தது பாராட்டும்படி இருந்தது. பிள்ளையாருக்குச் சாற்றக்கூடிய ஆவிரம்பூ மட்டும் இல்லை. தமிழ்நாட்டில் அல்லது சிங்கப்பூர், மலேசியாவில் தமிழர் விழாக்களைக் கொண்டாடுவது ஒன்றும் பெரிதல்ல. காரணம் அங்கு தமிழர்கள் எண்ணிக்கையில் அதிகம்.
மேலும், அரசாங்க அங்கீகாரமும் அவர்களுக்குண்டு. இவை எதுவும் இல்லாத ஆஸ்திரேலியாவில் இவ்வாறு பழைமை மாறாது ஒரு சமய விழாவைக் கொண்டாடுவது என்பது வியப்பிற்குரியதன்றோ! அனைவரும் இரவு உணவு உண்ட பின்னர் குழுவாகப் புகைப்படம் ஒன்று எடுத்துக்கொண்டோம். பின்பு இரவு 9.30 மணியளவில் நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம்.