
முதலாம் உலகப்போரில் ஆஸ்திரேலியா தன்னிச்சையுடன் போரில் ஈடுபட்டது. `கலிபோலி` போரில் (இதன் விளக்கத்தைப் பின்னர்க் காண்போம்) ஆஸ்திரேலிய ராணுவத்தினரின் பங்களிப்பு அந்நாட்டவரின் முதலாவது பெரும்போர்ப் பங்கெடுப்பாகும். அப்போரில் ஆஸ்திரேலியப் படை தோல்வியடைந்தாலும் அந்நாட்டு மக்கள் அப்போரினைத் தம் நாட்டின் பெரும் எழுச்சியாகவே கருதினர். இரண்டாம் உலகப்போரின்போது ஐக்கிய ராஜ்யத்தின் (யுனைட்டெட் கிங்டம்) அதிர்ச்சித் தோல்விகளும் ஜப்பானியர்களின் முற்றுகையும் ஆஸ்திரேலியாவை ஐக்கிய அமெரிக்காவுடன் அணிசேர வாய்ப்பை ஏற்படுத்தியது. 1951ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமெரிக்காவுடன் `அட்சசு` என்ற பாதுகாப்பு உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டது.
இரண்டாம் உலகப்போரின் பின்னர் ஐரோப்பாவிலிருந்து மக்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற வாய்ப்பளிக்கப்பட்டது. 1970ஆம் ஆண்டு சுமார் 70 ஆண்டுகளாகக் கட்டிக்காக்கப்பட்ட வெள்ளை ஆஸ்திரேலியக் கொள்கை முடிவுக்கு வந்தது. 1970க்குப் பின்னர் ஆசியா மற்றும் ஐரோப்பியர் அல்லாத மற்ற நாடுகளில இருந்து மக்கள் இங்கு குடியேற ஊக்குவிக்கப்பட்டனர். இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை, பண்பாடு மற்றும் தன்னடையாளம் ஆகியவற்றில் பெரும் மாற்றங்கள் ஏற்படலாயின.