
ஆஸ்திரேலியா தன் நாட்டிற்குள் நுழையும் பொருள்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நாடு. தாவரப் பொருள்கள், விலங்குத் தயாரிப்புகள் மேல் கடுமையான கண்காணிப்பு உள்ள நாடு. நோய்கள் பரவாமல் இருப்பதற்காகவே இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. மேலும், அந்நாடு மண்ணுக்குள் நுழையும் விஷயங்களைப் பற்றி மிகக் கவனமாக இருக்கிறது.
கட்டுப்பாட்டுக்குரிய காரணங்கள்- பல்லாயிரம் கி.மீ. கடலால் சூழப்பட்ட அந்நிலம் அதற்கேயுரிய இயற்கைச் சமநிலை கொண்டது. அங்குள்ள தாவரங்களும் விலங்குகளும் தங்களுக்கே உரிய தனிப்பாதையில் பரிணாமம் கொண்டவை. பல உயிரினங்கள் அங்கே மட்டுமே உண்டாகி வளர்ந்தவை. இதற்குக் கங்காருவை உதாரணமாகச் சொல்லலாம்.
அங்கே குடியேறிய வெள்ளையர்கள் தங்களுக்குரிய தாவரங்களையும் உயிரனங்களையும் அங்கே கொண்டுவந்து சேர்த்தார்கள். புதிய சூழலில் உயிர்ச்சமநிலை இல்லாத நிலையில் பல உயிர்கள் மிதமிஞ்சிப் பெருகின.