
நாங்கள் வாங்கிய உணவு ஒன்றின் விலை 7.50 ஆஸ்திரேலியன் டாலராகும். பின் அங்குள்ள காய்கறி, பழங்கள் நிறைந்த பகுதிகளையும் ஆயத்த ஆடைகளும் அணிகலன்களும் உள்ள கடைகளையும் பார்வையிட்டுவிட்டு எங்களது பேருந்து நிற்கும் இடத்திற்குச் சென்றோம்.
பல இடங்களில் பழைய கலைப்பொருள்களும் பழைய அரிய நூல்களும் நிறைந்திருந்தன. இவற்றைப் பார்க்கும்பொழுது எனக்கு வெகுகாலத்திற்கு முன்பு சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்திருந்த புகழ்பெற்ற மூர்மார்க்கெட்தான் நினைவிற்கு வந்தது.
மிகப் பழமையான கழிவறைகள்
தொன்மைவாய்ந்த புகழ்பெற்ற விக்டோரியா சந்தையிலுள்ள கழிவறையும் மிகவும் புராதனமாகவே இருந்தது. நவீன வசதிகள் எதுவும் இல்லாமல் சிங்கப்பூரில் சுமார் 30 வருடங்களுக்கு முன் எப்படி கழிவறைகள் இருந்தனவோ அப்படி இருந்தது நாகரிகத்தின் உச்சியில் இருக்கும் ஆஸ்திரேலியாவில். அதைக் கண்டதும் என்னுள் இன்னும் பழைமை மாறாமல் அப்படியே இருக்கின்றதே என்ற வியப்பும் நாகரிகமடைந்த ஒரு தேசத்தில் ஒருசிலவற்றில் முன்னேற்றம் இல்லையே என்ற ஏக்கமும் ஏற்பட்டது. (ஆனால் பிற இடங்களில் நவீன வசதிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.)