
இடதுபுறம் நீண்ட கடல்; வலதுபுறம் மலை; இடையிடையே பள்ளத்தாக்குள்; பசுமையான மேய்ச்சல் நிலங்கள்; அவற்றில் செம்மறி ஆடுகளும் பசுக்களும் கூட்டம் கூட்டமாய் மேய்ந்தன. ஆங்காங்கே மலைச்சரிவுகளில் சிறு சிறு வீடுகள். ஒருபுறம் நெய்தல்; மறுபுறம் குறிஞ்சியும் முல்லையும் கலந்த நிலஅமைப்பு. என்னே! இயற்கையின் அற்புதம்! இத்தகைய காட்சிகளைக் கண்டு களித்தவாறே இரண்டுமணி நேரம் பயணம் செய்தோம்.
ஓரிடத்தில் இறங்கி சுமார் அரைமணி நேரம் இயற்கையை ரசித்தவாறே நடைப்பயணம் மேற்கொண்டோம். ஆங்காங்கே சில பறவைகளையும் சிறு சிறு விலங்குகளையும் பார்த்து ரசித்தோம். ஒரு நீண்ட மரத்தின் உச்சியில் ஆஸ்திரேலியாவிற்கே உரிய கோலா கரடி ஒன்று தூங்கிக்கொண்டிருந்தது. அதைப் புகைப்படம் பிடித்துக்கொண்டு வாகனத்தில் ஏறினோம். மீண்டும் வளைவுப்பாதைப் பயணம். ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி அழகிய இயற்கைக் காட்சிகளைப் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.