
எங்கள் சுற்றுப்பயணத்தின் நான்காம் நாள் மெல்பர்னைவிட்டு `குவண்டாஸ் ஏர்வேஸ்` மூலம் சிட்னிக்குப் புறப்பட்டோம். ஆகவே அன்று அதிகாலை 6.30 மணிக்கே எங்களது அறையைக் காலிசெய்துவிட்டு, காலை உணவை பொட்டலம் கட்டிக்கொண்டு சுமார் 7.30 மணிக்கு மெல்போர்ன் விமான நிலையத்தை அடைந்தோம். விமான நிலையத்தில் செய்ய வேண்டிய சட்டப்பூர்வ சடங்குகளை எல்லாம் முடித்துக்கொண்டு காத்திருந்தோம்.
குவண்டாஸ் ஏர்வேஸ் விமானம் காலை 9.45 மணிக்குப் புறப்பட்டு சரியாக 11.30 மணிக்கு சிட்னி விமான நிலையத்தை அடைந்தது. வெகுவிரைவில் எங்களது பயணப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு பேருந்து மூலம் சிட்னியைச் சுற்றிவந்து துறைமுகம் அருகிலுள்ள ஒரு மேற்கத்திய உணவகத்தை அடைந்தோம். அங்கு எங்களது பகல் உணவு வாட்டிய ரொட்டி, அதன் மேல் பொரித்த தக்காளி, சுட்ட கத்தரிக்காய், தயிர். பகல் உணவை முடித்துக்கொண்டு சிட்னி நகரைச் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டோம்.