
கலிபோலி போர்:
கலிபோலி என்பது துருக்கியில் உள்ள ஓர் ஊர். இங்கு நடைபெற்ற போர் 'கலிபோலி போர்' என வரலாற்றில் அழைக்கப்படுகிறது. முதல் உலகப்போரில் 1915 முதல் 1916 ஜனவரி வரை அங்கே பிரிட்டன் தலைமையிலான நேசநாட்டுப் படைகளுக்கும் துருக்கி தலைமை வகித்த அச்சுநாட்டுப் படைகளுக்கும் இடையே பெரும்போர் மூண்டது. ஆஸ்திரேலிய வரலாற்றில் அழியா இடம்பெற்ற போர் அது. அந்தப்போர் நேசநாட்டுப் படைகளுக்கு ஒரு பெரிய அடியாக அமைந்தது.
இஸ்தான்புல் அல்லது கான்ஸ்டாண்டி நோபில் என்றழைக்கப்பட்ட துருக்கியின் தலைநகரைக் கைப்பற்றினால் கடல்வழியாகக் கொண்டுவரப்படும் பெரிய இராணுவப் படைகளை அதனூடாக ருஷ்யாவிற்குள் அனுப்பிவிடலாம் என்று நேசநாடுகள் திட்டமிட்டன. ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் நேசநாட்டுப் படையினர் பல்லாயிரக் கணக்கில் மரணமடையவும் நேர்ந்தது. அதில் அதிகமானவர்கள் ஆஸ்திரேலியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.