நந்தி ஹில்ஸ் போரடிச்சிருச்சா? பெங்களூரு பக்கத்துல ஒளிஞ்சிருக்கும் இந்த ரகசிய சொர்க்கம் தெரியுமா!

கூட்டமே இல்லாத ஆவதி ஏரியின் பேரழகும், மலை உச்சி சாகசமும்!
ஆவதி ஏரி|a beautiful view of aavathi lake
ஆவதி ஏரிAI image
Updated on

பிரபலமான இடங்களுக்கு சுற்றுலா செல்லவே அதிகம் பேர் விருப்பம் கொள்கின்றனர். ஆனால் அந்த பிரபலமான இடங்களுக்கு அருகில் மறக்க முடியாத பல்வேறு இடங்கள் இருப்பதை அனைவரும் அறிய மறந்துவிடுகின்றனர். நம்முடைய அண்டை மாநிலமான கர்நாடக தலைநகரான பெங்களூருவில் இருந்து நந்தி மலைக்கு அதிகம் பேர் சுற்றுலா செல்கின்றனர்.

ஆனால் நந்தி மலைக்கு செல்லும் வழியில் இருக்கும் ஆவதி ஏரி (Avathi Lake)பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான சுற்றுலாத்தலமான ஆவதி ஏரி குறித்து இப்பதிவில் காண்போம்.

இயற்கை எழில் கொஞ்சும் மலை அடிவாரம்

பெங்களூருவில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் ஆவதி ஏரி அமைந்துள்ளது. பெங்களூருவில் இருந்து நந்தி மலைக்குச் செல்லும் வழியில் தேவனஹள்ளி தாலுகாவில் ஆவதி கிராமம் உள்ளது. இந்த கிராமம் நந்தி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குதான் மலையைப் பின்னணியாகக் கொண்டு ஆவதி ஏரி அழகுற அமைந்துள்ளது.

மலை உச்சியில் வீற்றிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான கோவில்கள்

பிரம்மாண்டமான மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆவதி ஏரி பரந்து விரிந்து காணப்படுவதைக் காணும்போது மனது மகிழ்ச்சி கொள்கிறது. மலையடிவாரத்தில் காணப்படுவதால் ஆவதி ஏரியின் தண்ணீர் மிகவும் சுத்தமாகவும் மாசு ஏற்படாமல் இயற்கையை தன்னகத்தே வைத்துள்ளது.

இங்கு பிரம்மாண்டமான மலையின் காட்சிகள் பிரதிபலிப்பது பார்ப்பவர்களின் கண்களை விட்டு அகல மறுக்காத காட்சியாக மனதில் என்றென்றும் நிழலாடுகிறது. அதிகாலையில் கீழ்வானம் சிவக்கும் சூரிய உதயத்தின் காட்சிகளையும் மாலை நேரத்து சூரிய அஸ்தமனத்தையும் கண்டு ரசிக்க சிறந்த இடமாக ஆவதி ஏரி உள்ளது.

ஏரியை ஒட்டி மலை உச்சிக்கு செல்லும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுகள் சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவரும் எளிதாக ஏறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் மலை உச்சியை கண்டு ரசிக்கலாம். 20 முதல் 30 நிமிடங்கள் படிக்கட்டுகளில் ஏறி மலை உச்சியை அடைந்தால் பழமையான கோவில்களில் உள்ள அகோரபசிவர் மற்றும் திம்மராய சுவாமியை தரிசிக்கலாம்.

ஆவதி ஏரி|a beautiful view of aavathi lake
ஆவதி ஏரிAI image

மலை உச்சிக்கு செல்லும் பாதை பாறை இடுக்குகளுக்கு நடுவில் அமைந்துள்ளதால் படிக்கட்டுகள் வழியாக மலை உச்சிக்கு செல்லும் அனுபவம் மறக்க முடியாததாக இருக்கும். ஆவதி ஏரியின் முழு அழகையும் மலை உச்சியில் இருந்து பார்ப்பது பிரமிப்பாக இருக்கும்.

மலை உச்சியில் இருந்து கீழே பார்க்கும் பசுமையான விளை நிலங்கள் மனதை வருடி விட்டுச் செல்லும். தூரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களையும் மலை உச்சியில் இருந்து கண்டு ரசிக்கலாம். சீசன் நேரங்களில் சென்றால் பறவைகள் உலா வருவதை உற்று நோக்கி புகைப்படம் பிடிக்கலாம்.

பொறுமையாக குடும்பத்தினருடன் அதிக கூட்டம் இன்றி இயற்கையை கண்டு ரசிக்க புகைப்படம் எடுக்க ஆவதி ஏரி மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். சுற்றுலா பிரபலமாகாத இடமாக இருப்பதால் உண்ண உணவு, குடிக்க தண்ணீர் அவரவர் எடுத்துச் செல்வது நல்லது. அதைவிட எடுத்துச்செல்லும் பொருட்களை குரங்குக ளிடமிருந்து பத்திரமாக பார்த்துக்கொள்ள தனிக் கலை இருக்க வேண்டும். கடைகள் இல்லாததால் இங்கு ஃபர்ஸுக்கு வேலையில்லை.

புகைப்படக் கலைஞர்களின் சொர்க்கமாகத் திகழும் ஆவதி ஏரி

புகைப்படக் கலைஞர்களின் சொர்க்கமாக திகழும் ஆவதி ஏரி, இயற்கை ஆர்வலர்கள், அமைதியை விரும்புபவர்களுக்கு சிறந்த இடமாக இருப்பதோடு பாதுகாப்பான இடமாகவும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
மேகங்கள் தொடும் குந்தாத்ரி மலை: அகும்பே அருகே ஒளிந்திருக்கும் சொர்க்கம்!
ஆவதி ஏரி|a beautiful view of aavathi lake

அதிகம் அறியப்படாத இடங்களுக்கு சுற்றுலா செல்லும் மக்கள் தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களை அங்கேயே விட்டுவிடாமல் இயற்கையை தொந்தரவு செய்யாமல் கண்டு ரசித்தால் நமக்கு பின் வரும் தலைமுறைகள் நம்மை வாழ்த்தும்.

இந்தப் பதிவை வாசிப்பதன் மூலம், வார இறுதி நாட்களில் பெங்களூரின் நெரிசலான சுற்றுலா இடங்களைத் தவிர்த்து, குடும்பத்துடன் அமைதியான முறையில் நேரத்தைச் செலவிடுவதற்கான ஒரு புதிய சொர்க்கத்தைக் கண்டறிவீர்கள். எவ்வித செலவும் இன்றி இயற்கையின் மடியில் மன அமைதியையும், மறக்க முடியாத சாகசப் பயண அனுபவத்தையும் உங்களால் உடனடியாகத் திட்டமிட முடியும்.

logo
Kalki Online
kalkionline.com