
டெல்லியில் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் கட்டியும், கொட்டியும் கிடைக்கின்றன. அவற்றில் பார்த்து ரசித்ததும் சிலிர்க்க வைத்த அனுபவங்களும் இதோ:
இந்தியா கேட்:
முதல் உலகப்போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் நினைவு சின்னமாக அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமானோர் வருகை தருகிறார்கள். மேலும் அங்குள்ள நிலப்பரப்புகளில் குழந்தைகள் குடும்பத்துடன் வந்து விளையாடி மகிழ்வதை மாலை நேரங்களில் கண்டு களிக்கலாம்.
அக்ஷர்தாம் மந்திர்:
இந்த மந்திர் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. டெல்லியில் இருக்கும் இந்த கோயில் குஜராத்தின் காந்தி நகரில் இருக்கும் அக்ஷர்தாம் மந்திரின் பிரதிபலிப்பு. இது வண்ணமயமான மகத்துவம் நிறைந்த இந்து மதத்தை பிரதிபலிக்கும் கோயில் என்று சொல்லலாம். இந்தக்கோயில் அமைதியான யமுனை நதி கரையில் 100 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதற்குள் நீரூற்றுகள் மற்றும் செதுக்கப்பட்ட மண்டபங்கள் அலங்கரிக்கப்பட்ட பரந்த பசுமையான அழகுபடுத்தப்பட்ட புல்வெளிகள் ஆகியவை உள்ளன.
இந்த பிரம்மாண்டமான வழிபாட்டுத்தளத்தில் கட்டுமானத்திற்காக இரண்டு பில்லியன் டாலர் செலவிடப்பட்டது என்றாலும் எஃகை பயன்படுத்தாமல் கட்டப்பட்டது என்பதும் இதன் சிறப்பாகும்.
எவ்வளவு வெயிலில் நாம் இந்த கோவிலை பார்க்க சென்றாலும் வெளியில் இருந்து கோயிலுக்குள் நுழையும் வாசல் வரை சூடு ஏற்படாத வகையில் கற்களை பதித்திருப்பதும் சிறப்பு. அந்த கோயில் முழுவதும் மணற்கல் மற்றும் பளிங்கு கற்களால் ஆனது. அந்தக் கோயிலை சுற்றிப் பார்த்தவர்கள் அனைவரையும் இது போன்ற வேலைபாடுகள் சிலிர்க்க வைப்பது இயல்பு. இதற்கு முன்பு பிர்லா மந்திரத்தை மிகவும் வியந்து கூறுவோம். இப்பொழுது அதையும் மிஞ்சிவிட்டது அக்ஷர்தாம்.
பஹாய் மந்திர்:
இது தாமரை வடிவத்தில் உள்ளதால் தாமரை கோவில் என்று போற்றப்படும் பஹாய்மந்திர் தெற்கு டெல்லியில் உள்ளது. இது ஒரு பாஹாய் வழிபாட்டுத்தலம். இது பகாய் சமூகத்தினரால் கட்டப்பட்டது. என்றாலும் ஜாதி, இன, மத பிரிவு எதுவும் இன்றி எல்லோரும் வந்து வழிபடலாம் என்பதுதான் இதன் சித்தாந்தம். எல்லாவிதமான சாதி மற்றும் மத இனங்களுக்கு மரியாதை செலுத்தும் ஒற்றுமை மிகுந்த கட்டிடம் ஆக இந்த பஹாய் பாணியில் கட்டப்பட்ட கோவில் விளக்குகிறது என்பது இதன் சிறப்பு. இந்த கட்டிட அமைப்பின் சிறப்பை கலை நுட்பத்தை கண்டுகளிக்கவே ஏராளமான மக்கள் குவிகிறார்கள்.
செங்கோட்டை:
சிவந்த மணற்கல் சுவர்களால் கட்டப்பட்டதால் இது செங்கோட்டை என்று பெயர் பெற்றது. நாதிர்ஷா படையெடுப்புக்கு பிறகு 1857 ல் சிப்பாய்க் கலகம் ஏற்பட்ட பொழுது ஆங்கிலேயர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. என்றாலும் அதன் சுவர்களில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்ததால் அதற்குள் ஆங்கிலேயர்கள் தங்களின் பீரங்கிகளை பதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள்.
லாகூர் கேட், டெல்லி கேட் இரண்டும் பொது மக்களுக்கு பயன்படுத்தும் வகையில் திறந்து வைக்கப்பட்டது. கிஸ்ராபாத் கேட் பேரரசர்கள் பயன்பாட்டுக்கு உபயோகப்பட்டதாகும். சட்டா சௌக் அரசர்களின் ஷாப்பிங் இடமாக இருந்ததாக கூறப்படுகிறது.
லாகூர் கேட்டில்தான் முதன் முதலாக இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது நம் பாரத முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள் அதில் சுதந்திரக் கொடியேற்றி உரையாற்றினார். அது முதல் இன்று வரை சுதந்திர தினத்தன்று நம் பாரத பிரதமர்கள் அங்குதான் கொடியேற்றி உரையாற்றி வருகிறார்கள்.
குதுப்மினார்:
தெற்கு டெல்லியில் உள்ள மெஹ்ராலியில் குதுப்மினார் அமைந்துள்ளது. அடிமை வம்சத்தை சேர்ந்த குட்புதீன் ஐபக் என்பவரால் கட்டப்பட்டது.சிவப்பு மணல் கற்களால் ஆன உலகின் மிக உயர்ந்த கல் கோபுரம் என்றால் இதுதான். இதில் வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு நினைவுச் சின்னங்கள் அடங்கி கிடக்கின்றன.
சாந்தினி சௌக்:
பழைய டெல்லியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்றால் இதுதான். செங்கோட்டைக்கு மேற்கே அமைந்துள்ள முக்கியமான ஷாப்பிங் ஏரியா என்றால் சாந்தி னிசௌக்கைதான் சொல்லலாம். ஜும்மா மசூதியும் அங்கேதான் கட்டப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள தரியா கஞ்ச் என்ற இடத்தில்தான் நாங்கள் குடியிருந்தோம். அப்பொழுது சாந்தினி சௌக்கிற்குதான் காய்கறி பழங்கள் மற்ற ஷாப்பிங் எல்லாம் செய்வதற்கு செல்வது வழக்கம். அப்படி செல்லும் பொழுது ஜும்மா மசூதியைத்தாண்டிதான் செல்ல வேண்டும். அப்படி சென்று கொண்டிருக்கும் பொழுது என் கூட வந்த ஒரு வரலாற்று ஆசிரியை கூறினார். இந்த சாந்தினி சௌக் என்பது ஷாஜகானின் மகள் ஷாப்பிங் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட இடம் என்று கூறினார். அது எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியாது. ஆனால் டெல்லியை நினைத்து பார்க்கும்பொழுது இவையெல்லாம் நினைவிற்கு வந்து போகும்.
டெல்லி ரெட் போர்ட்டில் இருந்து நேராக வரும் ரோட்டில் தான் சாந்திவனம், சக்தி ஸ்தல், ராஜ்காட் போன்ற சமாதிகள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு எல்லாம் ஞாயிறுதோறும் குழந்தைகளை அழைத்துச் சென்று விளையாட விட்டு வேடிக்கை பார்த்து கூட்டி வருவோம். அப்பொழுது குளிர்காலமாக இருந்தால் அங்கு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அனைவரும் ரஜாயுடன் வந்து அங்கு குளிர்காய்வார்கள் படுத்து உறங்குவார்கள். அதையெல்லாம் வேடிக்கையாக பார்த்துவிட்டு அங்கு விற்கும் பெரிய டெல்லி அப்பளத்தை வாங்கி ருசித்து விட்டு வீடுதிரும்புவோம்.
இவையெல்லாம் டெல்லியில் கண்டு களித்த இன்ப அனுபவங்கள். உங்களுக்கும் சந்தர்ப்பம் அமையும் பொழுது இவற்றையெல்லாம் கண்டு களித்து இன்புறுங்கள்.