
செவன் சிஸ்டர்ஸ் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் முதல் முறையாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த ரயில் பாதையின் சிறப்புகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
அடர்ந்த வனப் பகுதிகளுடன், இயற்கை எழில் கொஞ்சும் மலைகளையும், கல்வி உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நிரம்பிய மாநிலமாக அறியப்படும் மிசோராமின் தலைநகரான ஐஸ்வாலில் ரயில் போக்குவரத்து இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.
மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை மற்ற பகுதிகளுடன் ரயில் போக்குவரத்தில் இணைக்க வானுயர்ந்த மலைகளே தடையாக இருந்தது. ஐஸ்வாலில் ரயில் போக்குவரத்து ஏற்படுத்த கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இரண்டு முறை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஆனாலும் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் மிசோரம் தலைநகர் ஐஸ்வாலுக்கு பக்கத்து நகரமான சைராங்குடன் இணைக்கும் ரயில் பாதை திட்டத்திற்கான அடிக்கலை நாட்டினார்.
இதனை அடுத்து கொரோனா, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களுக்கு மத்தியிலும் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 11 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றன.
பைராபி - சைராங் இடையிலான மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை இணைக்கும் ரயில் பாதை திட்டப் பணிகள் ஏறத்தாழ 8000 கோடி ரூபாய் செலவில் 51.28 கிமீ தூரம் நிறைவு பெற்றன. 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்கள் மற்றும் 48 சுரங்கப் பாதைகள், 5 ரயில் நிலையங்கள் இந்த ரயில் பாதையில் அமைக்கப்பட்டுள்ளன.
வருகின்ற செப்டம்பர் 13ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிலையில் கடந்த மே மாதம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
அசாம் மாநிலம் கவுகாத்தி - ஐஸ்வால் இடையே உள்ள 18 மணி நேர பயணம் 12 மணி நேரமாக இந்த புதிய ரயில் பாதை பயன்பாட்டுக்கு வரும் நிலையில் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியதாக 8071 கோடி மதிப்பில் மிசோரம் மாநிலத்தில் அமைக்கப்பட்டு இந்திய ரயில்வே வரைபடத்தில் இணையும் இந்த புதிய ரயில் பாதை நாட்டின் ரயில் போக்குவரத்து பாதையில் மற்றொரு மைல் கல்லாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த ரயில் பாதையால் மிசோரம் மாநிலத்தின் பொருளாதாரம் சுற்றுலா மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு மாநிலம் வளர்ச்சிப் பாதைக்கு செல்லும் என்பதிலும் ஐயமில்லை.