
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மாநிலம் மிசோரம் (mizoram). இம்மாநிலம் நாட்டின் முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலமாக சமீபத்தில் மாறியுள்ளது. இம்மாநிலத்தில் அனைவருக்கும் கல்வி வழங்கும் முயற்சி, மத்திய, மாநில அரசுகளால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதன் விளைவாக அங்கு மாநில எழுத்தறிவு மையம் நிறுவப்பட்டது.
புதிய இந்தியா எழுத்தறிவு திட்டத்திற்கான சர்வேயர்களாக, 'கிளஸ்டர்' எனப்பட்ட வள மைய ஒருங்கிணைப்பாளர்கள் பணியாற்றினர். இதன்படி, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 3,026 படிப்பறிவில்லாத நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஆனால், அவர்களில், 1,692 பேர் மட்டுமே கல்வி கற்பதில் ஆர்வம் காட்டினர்.
அவர்களுக்கு கல்வியளிக்க 292 தன்னார்வ ஆசிரியர்கள் மாநில அரசினால் பணியமர்த்தப்பட்டனர். மத்திய அரசின், ’உல்லாஸ்’ எனப்படும், 'சமூகத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றலை புரிந்துகொள்ளுதல்' திட்டம் அறுமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, பள்ளிகள், சமூக அரங்குகள், நுாலகங்கள் மற்றும் தேவைப்படுபவர்களின் வீடுகளில் அவர்களுக்கு வசதியான நேரத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக, முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக இப்போது மிசோரம் மாநிலம் மாறியுள்ளது.
இம்மாநிலத்தின் தலைநகர் அஸ்வால் ஆகும். 'உல்லாஸ்' தரநிலைகளின்படி, 95 சதவீத கல்வியறிவு விகிதத்தை இம்மாநிலம் தாண்டியுள்ளது. இதனால், மிசோரம் முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக தற்போது மாறியுள்ளது. இம்மாநிலம் தற்போது 98.2 சதவீத கல்வியறிவு விகிதத்தை அடைந்துள்ளாதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம், கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, எழுத்தறிவில் 91.33 சதவீதம் பெற்று மூன்றாவது இடத்தில் இருந்த மிசோரம் தற்போது முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது பாராட்டத்தக்கது.
இம்மாநிலத்திற்கு மேலும் ஒரு பெருமை உள்ளது. இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், பொதுப்போக்குவரத்தில் ரயில் போக்குவரத்து முக்கியமான பங்கினை வகிக்கிறது. ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான பொது மக்கள் தங்களது பல்வேறு அன்றாடப் பணிகள் சார்ந்து இரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்தியா முழுவதிலும் 7,349 ரயில் நிலையங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 13,198 ரயில்கள் இந்திய இரயில்வேத்துறையால் இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில், நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 1173 ரயில் நிலையங்கள் உள்ளன.
மக்கள் தொகையும் இந்த மாநிலத்தில் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தியாவில் ஒரே ஒரு மாநிலத்தில் ஒரே ஒரு ரயில் நிலையம் மட்டுமே உள்ளது.
இந்தியாவில் ஒரே ஒரு ரயில் நிலையம் கொண்ட மாநிலம் மிசோரம் ஆகும். மிசோராமின் கோலாசிப் மாவட்டத்தில் உள்ள பைராபி(Bairabi) நகரில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம், BHRB என்ற ரயில் நிலைய குறியீட்டை கொண்டுள்ளது. மிசோராமின் மொத்த மக்கள் தொகை 14.10 லட்சம் என மதிப்பிடப்படும் நிலையில், இந்த ஒரு ரயில் நிலையமே மொத்த மாநிலத்திற்கும் சேவை செய்து வருகிறது.
4 ரயில் பாதைகள் மற்றும் 3 ரயில் மேடைகள் இந்த ரயில் நிலையத்தில் உள்ளன. 2016 ஆம் ஆண்டில் இந்த இரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டது. அதிகரித்து வரும் மக்களின் எழுத்தறிவுக் காரணமாக விரைவில் இம்மாநிலம் விரைவான பொருளாதார வளர்ச்சியையும் அடையும் என திடமாக நாம் நம்பலாம்.