
பாபநாசம் அணை:
குற்றாலத்திலிருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில் பாபநாசம் அணை உள்ளது. இது திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு முக்கிய அணையாகும். 1942 ஆம் ஆண்டு முதன் முதலில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கட்டப்பட்ட அழகிய அணை இது. இந்த அணையிலிருந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆறு பாய்கிறது. இதன் மூலம் பாசன வசதி பெறுவதுடன் ஆண்டு முழுவதுக்குமான குடிநீர் தேவையையும் இந்த அணை தருகிறது.
காரையாறு அணை:
நெல்லை மாவட்டத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அருகில் அமைந்துள்ளது இந்த காரையாறு அணை. அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணைக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் படகு சவாரிகள் செய்வதற்காக இங்கு வருகின்றனர்.
பாம்பு பூங்கா:
குற்றாலத்தில் ஐந்தருவிக்கு அருகில் அமைந்துள்ளது பாம்பு பூங்கா. இங்கு பல்வேறு வகையான பாம்புகள் காணப்படுகின்றன. இதற்கு அருகில் சிறுவர் பூங்கா மற்றும் மீன் பண்ணைகளையும் பார்த்து ரசித்து விளையாடி மகிழ்வதற்காக நிறைய சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
படகு குழாம்:
குற்றாலத்தில் ஐந்தருவிக்கு அருகே மேலவெண்ணமாடை குளம் செல்லும் வழியில் படகு குழாம் உள்ளது. இது பிரதான அருவிக்கும் ஐந்தருவிக்கும் இடையில் படகு சவாரியில் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்வதற்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது.
சுற்றுச்சூழல் பூங்கா:
குற்றாலத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா என அழைக்கப்படும் குழந்தைகள் பூங்கா தமிழத்தில் உள்ள பூங்காக்களில் மிகப்பெரியது. சலசலக்கும் காற்று, இயற்கை ததும்பிய அழகு, சுற்றிலும் மலைகள் என இந்த இடத்தை கண்டுகளிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குலுங்கும் பல வண்ண மலர்களும், விதவிதமான வண்ணத்துப்பூச்சிகளின் அழகும் அனைவரையும் ரசிக்கும்படி செய்கின்றன.
மணிமுத்தாறு:
குற்றாலத்தில் இருந்து 51 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அருவி இது. ஆண்டு முழுவதும் அருவியில் நீர் விழுகிறது. தொடர்ச்சியாக கொட்டிக்கொண்டே இருக்கும் மணிமுத்தாறு அருவி, பசுமையான பரப்பு, மலைகள், தேயிலைத்தோட்டம் மற்றும் அணைக்கட்டு ஆகியவற்றுடன் கூடிய இந்த இடத்தின் இயற்கை அழகு மணிமுத்தாறு அருவியை மிகவும் விரும்பப்படும் சுற்றுலா தலங்களில் ஒன்றாக ஆக்குகிறது.
குண்டாறு அணை:
தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்துக்கு அருகில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் குண்டாறு அணை உள்ளது. இது ஒரு இயற்கை நீர் தேக்கமாகும். இயற்கை எழில் சூழ்ந்த இந்த இடம் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக உள்ளது. குண்டாறு அணை தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் சாலையில் அமைந்திருப்பதால் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இதன் அருகில் அதிக அளவில் தனியார் அருவிகளும் உள்ளன. அதற்கு செல்ல விரும்பினால் தனியார் ஜீப்புகளில் செல்லலாம்.
அகஸ்தியர் அருவி:
குற்றாலத்தில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள இந்த அருவி மக்களை அதிகம் கவர்கின்றது 25 அடி உயரத்தில் இருந்து கொட்டுகின்ற இந்த அறிவின் அழகை காண்பதற்காக ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். அருவிக்கு அருகில் அகஸ்தியருக்கு கோவில் ஒன்று உள்ளது. அருவியின் மேற்பகுதியில் கல்யாண தீர்த்தம் உள்ளது. அகஸ்தியருக்கு சிவன் காட்சி தந்த இடமாக நம்பப்படுகிறது.
தோரணமலை முருகன் கோவில்:
தென்காசி மாவட்டத்தில் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இக்கோவில். 800 அடி உயரம் கொண்ட தோரணமலை உச்சியில் அருள்பாலிக்கும் முருகனை தரிசிக்க வேண்டுமானால் 1193 படிகள் ஏறவேண்டும்.
இவை தவிர குற்றாலம் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி போன்ற நிறைய இடங்கள் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை அதிகம் ஈர்க்கின்ற இடங்களாகும்.