உலகின் மகிழ்ச்சியான நாடு பூடான்!

பூடான் நாடு ...
பூடான் நாடு ...

வேகமான நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இமயமலையின் மடியில் இயற்கையின் அழகை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு, பூட்டான் சிறந்த சுற்றுலாத்தலம்  சில வருடங்களுக்கு முன் சிறு குழுவாக நாங்கள் அந்த அழகிய மலைகளடங்கிய மகிழ்ச்சியான தேசத்துக்குபோய் வந்தது இனிய அனுபவம் எங்கள் குழுவில் மருத்துவர்கள் இருந்ததால் உடல் பிரச்னை களைப் பற்றிய கவலையில்லாமல் கடினமான பாதைகளில் கூட போய் வர முடிந்தது. 

பூடானின் பாரோ விமான நிலையம் மிகவும் சிறியது. விமானத்தை அங்கு தரையிறக்க நிபுணத்துவம் மிக்க விமானியால் தான் முடியும். பாரோ விமான நிலையத்தில் இந்திய குடிமக்கள் தங்கள் பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டையையும் பயன் படுத்தலாம்.  பூட்டான் அரசின் குடிவரவு அலுவலகத்திலிருந்து செல்லுபடியாகும் பயண ஆவணத்தின் அடிப்படையில் 'நுழைவு அனுமதி' பெற வேண்டும்

நாங்கள் முதலில் பூட்டானின் தலைநகரமான திம்புவிற்கு சென்றோம். போகும் வழியில் இரண்டு முக்கிய நதிகள் சங்கமிக்கும் இடமான சுசோமில்  மூன்று வெவ்வேறு பாணி திபெத், நேபாளம் மற்றும் பூட்டான் ஸ்தூபிகள் உள்ளன,

புத்தர் டோர்டென்மா சிலை
புத்தர் டோர்டென்மா சிலை

புத்தர் டோர்டென்மா சிலை

இது ஒரு  தியான மண்டபத்தின் மேல் அமர்ந்திருக்கும் ஒரு பெரிய தங்க புத்தர்.சிலை. இந்த 169 அடி புத்தர் டோர்டென்மா சிலையின் உள்ளே 8 முதல் 12 அங்குல உயரம் வரையிலான 125,000 சிறிய புத்தர் சிலைகள் உள்ளன. அதாவது சுமார் 115,000  மக்கள்தொகை கொண்ட திம்புவில் மனிதர்களை விட புத்தர் சிலைகளின் எண்ணிக்கை அதிகம்.

சங்கங்கா லாகாங்

திம்பு நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கங்கா லாகாங் எனும் பழமையான கோயில் உள்ளது, இது ஒரு பாரம்பரிய பூட்டானிய மடாலயமாகும், இது மத்திய திம்பு மலைத்தொடர்களுக்கு மேல் ஒரு கோட்டை தொங்குவது போல காட்சிய ளிக்கிறது.  திம்புவைச் சேர்ந்த மக்கள் தங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பெயரிட இந்த இடத்திற்கு வருகிறார்கள். பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறுவதாகச் சொல்லப்படுகிறது. இங்கிருந்து திம்பு நகரின் அழகைக் கண்டு ரசிக்கலாம்.

திம்பு ஜங்ஷி காகித தொழிற்சாலை 

கையால் உருவாக்கும் காகித தொழிற்சாலை 1990 இல் பூட்டான் அரசாங்கத்தால் நிறுவப்பட்டது,  இங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பூட்டான் மற்றும் பூட்டானுக்கு வெளியே வணிக ரீதியாக விற்கப் படுகின்றன. இது இப்போது ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது, இங்கு கவாஜங்சா என்ற இடத்தில் உள்ள பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பள்ளியில் மாணவர்கள் பூட்டானின் முக்கியமான 13 வெவ்வேறு பாரம்பரிய கலைகளைக் கற்றுக்கொள்கிறார்கள்.

டோச்சுலா கணவாய்

டோச்சுலா கணவாய் பூட்டானில் திம்பு மற்றும் புனாகா இடையே அமைந்துள்ள ஒரு அழகிய மலைப்பாதை ஆகும். பூட்டானின் ராணி ஆஷி டோர்ஜி வாங்மோ வாங்சுக், நான்காவது மன்னரின் நினைவாக கணவாயில் "ட்ரூக் வாங்கியால் சோர்டென்ஸ்" என்று அழைக்கப்படும் 108 நினைவு நாண்களைக் கட்டினார். இங்கிருந்து பூட்டானின் மிக உயரமான சிகரங்களின் அழகிய காட்சியை கண்டு மகிழலாம்.

இதையும் படியுங்கள்:
ஆளுமை தருமே நமக்கு அடையாளம்!
பூடான் நாடு ...

சிமி லாகாங், புனாகா

இந்த மடாலயம் தி ஃபர்ட்டிலிட்டி டெம்பிள் என்று அறியப்படுகிறது  புனாக்கா மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல குழந்தை இல்லாத தம்பதிகள் பெரும்பாலும் வருகை தருகின்றனர்.

புனாகா தொங்கு பாலம்

இந்த வண்ணமயமான மேம்பாலம் பூட்டானின் மிக நீளமான தொங்கு பாலங்களில் ஒன்றாகும். இதில் நடந்த போது திரில்லிங்காக இருந்தது.

புனாகா சோங்

பெரும் மகிழ்ச்சியின் அரண்மனை என்றும் அழைக்கப்படும் புனாகா சோங் கோட்டை மோ சூ மற்றும் ஃபோ சூ நதிகளின் சங்கமத்தில் அமைந்துள்ளது பூட்டானின் மிக அழகிய கோட்டையாகும்.

தக்சாங் மடாலயம்

தக்சாங் மடாலயம் பூட்டானின் மடாலயங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும், இது பாரோவில்  தரையிலிருந்து 900 மீட்டர் உயரத்தில் ஒரு பாறையின் பக்கத்தில் அமைந்துள்ளது. குரு ரின்போச்சே ஒரு புலியின் மீது அமர்ந்து இங்கு வந்து இந்த மடத்தில் தியானம் செய்ததால் இது 'புலிக்கூடு' என்று அழைக்கப்படுகிறது.

பல நாடுகள் தங்கள் கார்பன் உமிழ்வைக் குறைக்கப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், பூட்டான் ஏற்கனவே கார்பன் எதிர்மறையாக உள்ளது காடுகள் நிறைய இருப்பதால் இயற்கை வளம் மாறாமல் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்க அரசு அனைத்து நடவடிக்கை களையும் எடுக்கிறது பூடானின் தேசிய விலங்கான டகினை அதன் அடைப்பு வேலிக்குள் எங்களால் பார்க்க முடிந்தது.

இந்த நாட்டின் மன்னர் முதல் சாதாரண குடிமகன் வரை அனைவரும் ஒரே பாரம்பரிய உடையைத்தான் அணிகிறார்கள். நாங்களும் இந்த உடையை அணிந்து மகிழ்ந்தோம். இங்கு கிடைக்கும் காரமில்லாத பெரிய சைஸ் மிளகாய்களை உணவில் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

பூடான்  பயணத்தின்போது எங்கள் கைடு பூடான் பெயருக்கு அளித்த விளக்கம்.

B   புத்திஸம்

H   ஹிமாலயன்

U   UNO மெம்பர்

T   திம்பு  (தலை நகர்)

A      ஆசிய கண்டம்      

N   நல்ட்ராம்(NGULTRUM)(பூடான் நாணயம்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com