இந்திய கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கட்டிடக்கலை, நுணுக்கமான செதுக்கிய சிற்பங்கள், பிரம்மாண்ட கட்டமைப்பு நிறைந்த கோவில்கள் தென்னிந்தியாவில் அதிகம் இருக்கின்றன. அந்த வகையில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தென்னிந்தியாவின் 7 பிரம்மாண்ட கோவில்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
சோழ மன்னர் ராஜராஜ சோழனால் தஞ்சாவூரில் கட்டப்பட்ட சிவன் கோவிலான தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் மிகவும் நுட்பமான கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது .இந்த கோவிலில் இருக்கும் பிரம்மாண்ட லிங்கமும், நந்தியும் விண்ணை முட்டும் கோபுரமும் யுனெஸ்கோ அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது.
பிரம்மாண்ட கோவில் தேர் போன்ற அமைப்பில் அமைந்துள்ள தாராசுரத்தில் உள்ள சிவன் கோவிலான ஐராவதேஸ்வரர் கோவிலின் சுவர்களில் பண்டைய இந்திய புராணங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் வழிபீடத்திற்கு செல்லும் ஏழு படிகள் ஏழு ஸ்வரங்களை இசைக்கும் இன்னிசை படிகளாக இருப்பது அதிசயமான ஒன்றாகும். கோவிலில் காணும் இடங்களில் எல்லாம் காணப்படும் யானை சிற்பங்களும் நாயன்மார்களின் சிற்பங்களும் யுனெஸ்கோ அங்கீகாரத்திற்கு பொருத்தமானவையாக இருக்கின்றன.
பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் சிவபெருமான் ,விஷ்ணு ஆகிய இரு தெய்வங்களின் சன்னதிகளையும் கொண்டுள்ளது. ஏழு கோவில்கள் வரிசையில் இந்த கோவில் மட்டுமே நம்மால் பார்க்க முடிவதாக உள்ளது. மற்ற ஆறு கோவில்களும் கடலில் மூழ்கி இருப்பதாக நம்பப்படுகிறது.
பல்லவர் காலத்தில் பாறையில் வெட்டப்பட்ட கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் மகாபலிபுரத்தில் உள்ள மகிஷாசுர மர்த்தினி மண்டபம் மலையில் அமைந்துள்ள ஒரு பாறையில் வெட்டப்பட்ட குகை கோயில் ஆகும். பல சுவாரஸ்யமான கட்டிடக்கலை அம்சங்கள் உள்ள மூன்று கருவறைகளின் குகை சுவர்களில் நேர்த்தியாக செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்கள் முக்கியத்துவம் பெற்ற கோவிலாக உள்ளது.
ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹம்பியில் கம்பீரமான கோபுரத்தை கொண்ட பம்பாபதி என்று அழைக்கப்படும் சிவபெருமானின் விருபாட்ச பகவான் பிரதான கோபுரத்தின் நிழல் தலைகீழாக கோவிலுக்குள் உள்ள சுவரில் விழுவது அதிசயமான நிகழ்வாகும். பெங்களூருவில் இருந்து 350 km உள்ள ஹம்பி துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள பாரம்பரிய யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற கோவிலாக திகழ்கிறது.
ஹம்பியின் துங்கபத்ரா நதி கரையில் அமைந்துள்ள விஷ்ணு பகவானின் விட்டலா கோவில் அழகிய சிற்பங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற கல் தேருக்கு உலகப் புகழ் பெற்றது. கோவிலின் சுவர்களில் மற்றும் தூண்களில் உள்ள நுணுக்கமான சிற்பங்கள் பண்டைய இந்திய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி யுனெஸ்கோ அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது.
ஹம்பியில் உள்ள பிரம்மாண்டமான 15 அடி உயரம் கொண்ட ஒரே பாறையில் செதுக்கப்பட்டு செம குட மலையின் சரிவில் அமைந்துள்ள விநாயகர் சிலையை கொண்ட கடலேகலு விநாயகர் கோவில் இயற்கை அழகை ரசிக்கவும் நல்ல வாய்ப்பை வழங்குவதால் யுனெஸ்கோ அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
மேற்குறிப்பிட்ட ஏழு கோவில்களும் இந்தியர்களின் கலாச்சாரத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக இருக்கின்றன.