
நீங்கள் வாழ்க்கையில் எத்தனையோ இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்து இருப்பீர்கள். ஆனால் மனதுக்கு உற்சாகமும் அமைதியும் ஆனந்தமும் தரும் இடம் என்றால் அது பிச்சாவரம் மட்டுமே. கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது முழுக்க முழுக்க வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. படகுத்துறையை தமிழ்நாடு சுற்றுலா கழகம் நடத்தி வருகிறது. கடலும், பூமியின், நீர்ப்பறப்பும் சேர்ந்த முகத்துவாரத்தில் இந்த நீர் தேக்கம் அமைந்துள்ளது.
பிச்சாவரம் என்றாலே நினைவுக்கு வருவது இதயக்கனி படம் தான். இந்தப் படத்தில் கடைசியில் வரும் படகு சண்டை காட்சிகள் இந்த இடத்தில்தான் படமாக்கப்பட்டுள்ளன. இந்த சண்டைக் கட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். அப்போதே இந்த இடம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
1100 ஹெக்டேர் பரப்பளவில் அடர்ந்த அலையாத்தித் தாவர காடுகள். இதனை சுரபுண்ணை மரங்கள் என்று இந்த பகுதியில் கூறுகிறார்கள்.
உப்பள கழிவுகள் நிறைந்த நீர்நிலைப் பகுதி. பறவைகளின் ரீங்காரம் அமைதியான சூழ்நிலை என மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் இந்த இடம் அமைந்துள்ளது.
நாலாயிரத்து ஐநூறு கால்வாய்கள் இடையே அடர்ந்த மரங்கள் உள்ளன. படகு போக்குவரத்து துறை எந்திர படகுகளும், துடுப்பு படகுகளும் பயன்படுத்தி வருகின்றன. 14 மோட்டார் படகுகளும் 70 துடுப்பு படகுகளும் இங்கு செயல்பட்டு வருகிறது. எந்திர படகில் சுமார் பத்து முதல் 15 நபர்கள் செல்லலாம். காலை 9:00 மணி முதல் 5 மணி வரை படகு போக்குவரத்து நடைபெறும். படகு குழாமிற்கு வெளியே இரண்டு மூன்று கேண்டின்கள் உள்ளன. பசியாற இளைப்பாற அருமையான பொழுது போக்கும் இடமாகும். வங்காள விரிகுடாவின் கரையில் ஒருபுறம் கடலும் மறுபுறம் நீர் நிரம்பிய சூரபுன்னை காடுகளும் நிறைந்த அற்புதமான இடமாகும்.
உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக்காடுகள் என்ற பெயரை பிச்சாவரம் ஏரி பெற்றுள்ளது. இந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் நிறைய பறவை இனங்கள் உள்ளன. குறிப்பாக மீன் கொத்தி பறவைகள் பெலிக்கன் பறவைகள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.
இந்த இடத்துக்கு வந்து படகில் சென்றால் மனதுக்கு மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் அமைதியையும் தரும் அற்புதமான இடமாகும். அனைவரும் வாழ்க்கையில் ஒருமுறை ஏனும் இந்த இடத்திற்கு வந்து செல்ல வேண்டும்.