பிச்சாவரம் போவோமா? இருங்க, இருங்க... இந்த 12 விஷயங்களைப் படிச்சிட்டு கிளம்புங்க…

பிச்சாவரம்...
பிச்சாவரம்...

-வித்யா குருராஜன்

 

பித்தர்புரம் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்டு வந்த பகுதியே தற்போது பிச்சாவரம் என்று அழைக்கப் படுகிறது. கடலூர் மாவட்டத்தில் கிள்ளை என்ற கிராமத்தில் உள்ள பகுதியே பிச்சாவரம். சிதம்பரத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இப்பகுதி அமைந்துள்ளது.

வங்கக்கடலை ஒட்டியிருக்கும் பிச்சாவரம்,  அலையாத்தி காடுகள் அடர்ந்து வளர்ந்துள்ள பகுதியாகும். மேங்குரூவ்ஸ் எனப்படும் சதுப்பு நில தாவரம் சுமார் 2800 ஏக்கர் பரப்பளவில் இங்கே அடர்ந்த காடாக வளர்ந்துள்ளது. இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும்.

எம்ஜிஆர் நடித்த ‘இதயக்கனி’ படத்தின் உச்சகட்ட காட்சி இந்த இடத்தில்தான் படமாக்கப்பட்டது. கமல் நடிப்பில் வந்த ‘தசாவதாரம்’ படத்தில் கல்லை மட்டும் கண்டால் பாடலில் கூட இந்த இடம் வரும். விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படம் உட்பட இன்னும் பல திரைப்படங்கள் இப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன.  இப்பகுதி ஒரு அருமையான சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கே சுற்றுலா சென்று வருவதற்கு பயனுள்ள 12 டிப்ஸ் இதோ..

1. பேருந்து வசதி பெரிதாக இல்லை. தனிப்பட்ட வாகனங்களில் செல்வதே சிறப்பு. கிள்ளை நகராட்சி சார்பில் வாகனம் நிறுத்தும் கட்டணமாக ரூபாய் நூறு வசூலிக்கப்படுகிறது. பார்க்கிங் செய்ய பெரிய ஏரியா இருக்கிறது. வசதியாகத்தான் உள்ளது.

2. குழந்தைகளோடு போவதற்கு ஏற்ற இடம். காலை 9.30 மணி அளவில் அங்கே இருப்பதுபோல் சென்றால் நேரம் சரியாக இருக்கும். கூட்டம் அதிகமாக இருந்தால் ஒரு நாளைக்கான டிக்கெட்டுகள் மதியவாக்கிலேயே விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. மற்றவர்களைத் திரும்பிப் போகச் சொல்கிறார்கள்‌.

3. பிச்சாவரம் பறவைகள் வலசை வரும் பகுதியாகும். பல வெளிநாட்டு பறவைகள்கூட இங்கே வலசை வருகின்றன. செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை இங்கே அருமையான சீசன். குறிப்பாக நவம்பர் முதல் ஜனவரி வரை பறவைகளின் வரத்து அதிக அளவில் இருக்கிறது. அந்த நேரத்தில் உங்கள் சுற்றுலாவை நீங்கள் திட்டமிட்டால் அலையாத்தி காடுகளோடு சில அரிய வகை பறவைகளையும் காணலாம்.

4. பிச்சாவரம் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய அலையாத்தி காட்டுப்பகுதி ஆகும். இந்த அலையாத்தி தாவரம் சதுப்பு நிலத்தில் வளர்வதால் வித்தியாசமான வேர் அமைப்பினைக்கொண்ட தாவரமாக விளங்குகிறது. பொதுவாக, தாவரங்களின் வேர்கள் நிலத்தடியில்தான் இருக்கும். ஆனால் இந்த அலையாத்தி தாவரங்களுக்கு கூடுதலாக மேலிருக்கும்  கிளைகளிலிருந்து சிறப்பு வகையான வேர் தொங்குகிறது. இந்த வேரில் உள்ள துளைகளின் மூலமாகத்தான் இந்த தாவரம் சுவாசிக்கிறது. படிக்கும் பிள்ளைகளை இங்கே அழைத்துப் போய் நேரடியாக இந்த மூச்சு விடும் வேர்களை காணச் செய்யும்போது அவர்களுக்கு நிச்சயம் இது  ‘தாவரவியலில் ஆர்வமூட்டும்’ மறக்க முடியாத பயணமாக இருக்கும்.

 பிச்சாவரம் ...
பிச்சாவரம் ...

5. இந்தப் பகுதி தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறையின் கூட்டுப் பராமரிப்பில் உள்ளது. வனத்துறையினர் தனியாக படகினை இப்பகுதிக்குள் செலுத்துகிறார்கள். தமிழ்நாடு சுற்றுலா துறையும் படகு சவாரி வைத்திருக்கிறது. வனத்துறையினரிடம் நான்கு படகுகள்தான் உள்ளன. ஆனால் அழகாக பெரிதாக மேல்கூரையோடு அவை உள்ளன. பத்து நபர்கள் கொண்ட ஒரு படகுக்கான வாடகை 1500 ரூபாய் வசூலிக்கிறார்கள். நீங்கள் எத்தனை பேர் சென்றாலும் ஒரு படகிற்கான மொத்த சீட்டுகளையும்தான் வாங்க வேண்டும். ஒருவேளை நீங்கள் 10 பேர் இல்லை என்றால், மீதமுள்ள சீட்டுகளை அங்கே காத்திருக்கும் பிற சுற்றுலா பயணிகளிடம் விற்றுக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.

6. தமிழ்நாடு சுற்றுலாத்துறையிடம் பல படகுகள் உள்ளன. துடுப்பு படகுகள் இயந்திர படகுகள் என்று இருவகையான படகு சவாரியைத் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இப்பகுதியில் வழங்குகிறது. இயந்திரப் படகில் போக வேண்டுமானால் ஒரு படகுக்கான எட்டு சீட்டுகளையும் மொத்தமாக வாங்கிக் கொள்ள வேண்டும். 8 டிக்கெட்டுகளின் விலை 1750 ரூபாய் ஆகும். மீதமுள்ள சீட்டுகளை அங்கே உள்ள சுற்றுலாப் பயணிகளிடம் விற்றுக் கொள்வது உங்கள் இஷ்டம்.

7. படகின் எண்ணையும் சவாரி செய்ய வேண்டிய நேரத்தையும் குறிப்பிட்டு சீட்டுகளை கொடுத்து விடுகிறார்கள். அவர்கள் குறிப்பிட்டுக் கொடுத்திருக்கும் அந்த நேரத்தில் அந்தப் படகில் தான் உங்களால் சவாரி செய்ய முடியும். பேக் வாட்டர்ஸ் எனப்படும் கடலில் இருந்து திரும்பி வரும் தண்ணீருக்குள் 40 நிமிடங்களுக்கு சவாரி அழைத்துப் போகிறார்கள். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் கூடுதல் தொலைவுக்கு உள்ளே போக வேண்டாம் என்று ஆங்காங்கே அறிவிப்பு பலகைகளை வைத்திருக்கிறது அரசு என்பதும் குறிப்பிடத்தக்கது. இயற்கையின் சாம்ராஜ்யத்திற்குள் சென்று வரும் அந்த 40 நிமிட படகு சவாரி மனதை விட்டு நீங்க நிச்சயம்  பல நாட்கள் ஆகும்.

8. உயர்ந்த கோபுரத்தில் ஏறி முழு பிச்சாவர அலையாத்தி காட்டுப் பகுதியையும் காணும்படியான வசதியும் இருக்கிறது. பத்து ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள் இந்த டவரில் ஏறுவதற்கு. I ♥️ Pichavaram என்ற வாசகம் கொண்ட ஃபோட்டோ பாயிண்டும் உள்ளது.

9. தமிழ்நாடு சுற்றுலாத்துறை டிக்கெட் கவுண்டர் பக்கத்தில் டாய்லெட் வசதி இருக்கிறது. நன்றாக பராமரிக்கப்படுகிறது.

10. பார்க்கிங் பகுதி சுற்றி சில உணவகங்கள் இருக்கின்றன. கடல் உணவுகளுக்கென்றே பிரத்தியேக உணவகங்களும் இருக்கின்றன. நீங்கள் உணவு எடுத்துச் செல்வதானால் அமர்ந்து சாப்பிட நிழலான பெரிய இடமும் இருக்கிறது‌.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கு திறமையோடு பொறுமையும் அவசியம்!
பிச்சாவரம்...

11. சிற்றுண்டி தண்ணீர் புட்டிகளுக்கென இரண்டு குட்டிக்கடைகள் உள்ளன. உங்களுக்கும் தெரியாமல் உடலின் நீர்ச்சத்து இப்பகுதியால் உறிஞ்சப்படும். அதனால் தாராளமாக தண்ணீர் எடுத்துப் போய்விடுங்கள்‌. அடிக்கடி நீர் அருந்த வேண்டிவரும்.

12. மொத்தத்தில் கல்வி, குதூகலம் இரண்டும் கேரெண்டி. காலையில் அங்கு இருப்பது போல் சென்றுவிட்டால் தரமான நேரம் செலவிட்டு வரலாம். நிச்சியம் திட்டமிட்டுப் போய் வாருங்கள். அலையாத்திக் காடுகள், பின்னெடுக்கும் தண்ணீர், வலை விரிக்கும் மீனவர்கள், மூச்சுவிடும் வேர்கள், ஏறி இறங்கும் நீர்மட்டம்,  விதவிதமான பறவைகள் என்று அனைத்தையும் ரசித்துவிட்டு வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com