
வணிகப் பயணம் என்பது நவீன கார்ப்பரேட் உலகின் ஒரு முக்கிய பகுதியாகும். இது வேலை அல்லது வியாபார காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் பயணமாகும். இதில் பணியாளர்கள் தங்களது அலுவலக வேலைகள் தொடர்பாக சந்திப்புகள், மாநாடுகள், கூட்டங்கள், வர்த்தக நிகழ்ச்சிகள், விளக்கக் காட்சிகள் மற்றும் பிற தொழில்முறை நிகழ்வுகளில் பங்கேற்கச் செல்லும் பயணமாகும்.
இது தனிப்பட்ட பயணங்களில் இருந்து வேறுபட்டது. மேலும் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் பயணங்களை நிர்வகிக்க விமான முன்பதிவுகள், தங்குமிடங்கள் மற்றும் பிற ஏற்பாடுகளை திட்டமிடுகின்றன. வணிகப் பயணத்தில் தொழில்முறை பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும், நிறுவன பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கும் தேவையான வகையில் திட்டமிட்டு தயாராக செல்லவேண்டும்.
ஆடைகள்:
வேலைக்குத் தேவையான மற்றும் நாம் கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்குப் பொருத்தமான ஆடைகளை பேக் செய்ய வேண்டும். நிறுவனத்தின் கலாச்சாரம் அல்லது நாம் செல்லும் நாட்டின் ஆடை குறியீட்டையும் கவனத்தில் கொண்டு உடைகளை எடுத்துச்செல்ல வேண்டும்.
பேக்கிங்:
வணிகப் பயணங்கள் திட்டமிட்டும் அமையும், சில நேரங்களில் திடீர் பயணமாகவும் இருக்கும். எதுவாக இருந்தாலும் பயணத்திற்குத் தேவையான பொருட்களை சரியாக எடுத்து வைத்து கொள்ளவில்லை என்றால் அந்த ஒட்டுமொத்த பயணமே சொதப்பலாகிவிடும். எனவே வணிகப் பயணம் மேற்கொள்பவர்கள் பயணம் சார்ந்த பேக்கிங்கில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
வணிக பயணத்தின் நோக்கங்கள்:
புதிய வணிக வாய்ப்புகளைப் பற்றி விவாதிக்கவும், தொழில்முறை உறவுகளை வளர்த்துக்கொள்ளவும், வலுப்படுத்தவும் வாடிக்கையாளர்கள் அல்லது பங்குதாரர்களுடன் சந்திப்பது.
புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்துதல் மற்றும் வணிக உறவுகளை உருவாக்குவது. கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் மூலம் புதிய அறிவையும், தொழில்நுட்பங்களையும் பெறுவது.
ஒரு புதிய சந்தையை ஆராய்ந்து அங்கு வணிக வாய்ப்புகளைக் கண்டறிவது.
ஊழியர்களுக்கு புதிய திறன்களையும், அறிவையும் வழங்குவதற்கான பயிற்சிகளை அளிப்பது.
வணிகப் பயணத்தின் சாதக பாதகங்கள்:
வணிகப்பயணம் பல நேர்மறையான நன்மைகளைக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் சார்பில் உலகின் சில பகுதிகளை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பல வணிகப்பயணிகள் தங்கள் பணி பயணத்தில் ஓய்வு பயணத்தை இணைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் சில சமயம் வேலைக்காக தொடர்ந்து பயணம் செய்யும்பொழுது பெரும்பாலும் தனிமை, மனச்சோர்வு போன்றவற்றை அனுபவிக்கவேண்டி இருக்கும். நீண்ட நேரம் வீட்டை விட்டு வெளியே இருப்பது முக்கியமான குடும்ப நிகழ்வுகளை தவறவிட வழிவகுக்கும். தொடர்ச்சியான பயணம் என்பது தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.