கௌரி குண்ட் முதல் சிவ குரோத்ரி வரை: மணிமகேஷ் யாத்திரை தரும் பரவசம்!

kailash-yatra-guide
kailash-yatra-guide
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ம்பா கைலாஷ், மணிமகேஷ் கைலாஷ் என்றும் அழைக்கப்படுகிறது. இது இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள ஒரு புனிதமான மலையாகும். இது 5,653 மீட்டர் உயரத்தில், மணிமகேஷ் ஏரிக்கு மேலே அமைந்துள்ளது. சிவபெருமானின் இருப்பிடமாக நம்பப்படும் இந்த இடம் பஞ்ச கைலாசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இந்த யாத்திரை மானசரோவர் யாத்திரைக்கு இணையாக கருதப்படுகிறது.

எங்குள்ளது?

இந்துக்களின் முக்கிய புனித யாத்திரைத் தலமாக போற்றப்படும் சம்பா கைலாஷ் இமாச்சலப் பிரதேசத்தின் பாரமூரில் (Bharmour) இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் மணிமகேஷ் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி கைலாஷ் சிகரத்தின் (18,564 அடி) அடிவாரத்தில் 13,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஏரியில் திருவிழா ஒன்று மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது.

அந்த சமயத்தில் புனித நீரில் நீராடுவதற்காக ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் இங்கு கூடுகின்றனர். இங்குள்ள பாறை அமைப்பு சிவலிங்கமாக வணங்கப்படுகிறது. ஆண்டுதோறும் குறிப்பாக ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில், பக்தர்கள் புனிதமான மணிமகேஷ் ஏரியில் நீராடி இந்த சிகரத்தை தரிசிக்கிறார்கள்.

இதன் சிறப்பு:

இது ஒரு சவாலான மலையேற்றப் பகுதியாகும். மேலும் இது "ஏற முடியாத சிகரம்" என்றும் உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது. மணிமகேஷ் கைலாஷ் பிரமிப்பூட்டும் இயற்கை அழகுடன் கூடிய ஒரு முக்கிய ஆன்மீகத் தலமாகும். மணிமகேஷ் ஏரியின் ஒரு மூலையில் சிவபெருமானின் பளிங்குச் சிலை ஒன்று காணப் படுகிறது. புனித நீரில் நீராடிய பிறகு பக்தர்கள் ஏரியைச் சுற்றி 3 முறை வலம் வருகிறார்கள். ஏரியின் அமைதியான நீரில், பள்ளத்தாக்கின் மீது உயர்ந்து நிற்கும் பனி முடிய சிகரங்களின் பிம்பங்கள் மிக அழகாக பிரதிபலிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் ஏரி மாவட்டம்: நைனிடால் - ஒரு முழுமையான பயண வழிகாட்டி!
kailash-yatra-guide

புராணக் கதையின்படி சிவபெருமான் பார்வதி தேவியை மணந்த பிறகு இந்த மலையையும் அதன் அடிவாரத்தில் உள்ள ஏரியையும் உருவாக்கியதாகவும், இங்கு பார்வதி தேவி மாதா கிரிஜாவாக வணங்கப்படுகிறாள். மலையின் அடிவாரத்தில் உள்ள பனிப்பரப்பை உள்ளூர் மக்கள் 'சிவனின் விளையாட்டு மைதானம்' என்று பொருள்படும் வகையில் 'சிவனின் சௌகன்' என்று அழைக்கின்றனர். மலையின் முகப்பில் உள்ள சிவலிங்க வடிவிலான பாறை அமைப்பு, சிவபெருமானின் நேரடி வெளிப்பாடு என்று நம்பப்படுகிறது. ஏரிக்கு அருகில் அதன் கரையிலிருந்து சுமார் 11/2 கிலோ மீட்டர் கீழே, கௌரி குண்ட் மற்றும் சிவ குரோத்ரி எனப்படும் 2 புனித நீர்நிலைகள் உள்ளன.

கௌரி குண்ட் மற்றும் சிவ குரோத்ரி:

மணிமகேஷ் ஏரிக்கு சுமார் 11/2 கிலோ மீட்டர் தொலைவில் கௌரி குண்ட் மற்றும் சிவ குரோத்ரி (Krotri) என்ற இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர்நிலைகளில் முறையே கௌரி தேவியும், சிவனும் நீராடுவதாக நம்பப்படுகிறது. பெண்கள் மணிமகேஷ் ஏரிக்கு செல்வதற்கு முன்பு இந்த கௌரி குண்டிலும், ஆண்கள் சிவ குரோத்ரியிலும் புனித நீராடுகின்றனர்.

எப்படி அடைவது?

மணிமகேஷை பல்வேறு வழிகளில் அடையலாம். லாஹௌல்-ஸ்பிதியிலிருந்து (Lahaul-Spiti) குக்தி கணவாய் (Kugti pass) வழியாக, காங்க்ரா மற்றும் மண்டியிலிருந்து (Kangra & Mandi) கவார்சி (Kawarsi) அல்லது ஜல்சு (Jalsu passes) கணவாய் வழியாக வரலாம். இருப்பினும் சம்பாவிருந்து பர்மௌர் வழியாக செல்லும் பாதை மிகவும் எளிதானது. தற்பொழுது பர்மௌர் வழியாக ஹட்சர் (Hadsar) வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் ஏரி மாவட்டம்: நைனிடால் - ஒரு முழுமையான பயண வழிகாட்டி!
kailash-yatra-guide

ஹட்சரைத் தாண்டி மணிமகேஷை அடைய 13கி.மீ. தூரம் மலையேற்றம் செய்ய வேண்டும். ஹட்சருக்கும் மணிமகேஷுக்கும் இடையில் தன்சோ (Dhanchho) என்றழைக்கப்படும் ஒரு முக்கியமான தங்குமிடம் உள்ளது. அங்கு யாத்ரீகர்கள் வழக்கமாக இரவு தங்குவார்கள். இங்கு அழகான நீர்வீழ்ச்சி ஒன்றும் உள்ளது.

முக்கிய குறிப்புகள்:

பர்மௌரிலிருந்து கௌரி குண்டிருக்கு ஹெலிகாப்டர் வசதி உள்ளது. 7 நிமிடங்களில் சென்றுவிடலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்வது நல்லது. பர்மௌர் பகுதியில் பிஎஸ்என்எல், ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நெட்வொர்க் சிக்னல்கள் பலவீனமாக இருக்கும். அதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com