ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழ ஒரு வழி: உங்கள் சுற்றுலா திட்டத்தை மாற்றிக் கொள்ளுங்கள்!

வருடம் முழுவதும் சேமித்து ஒரேமுறை செல்வதை விட, அடிக்கடி பயணம் செய்வதே புத்திசாலித்தனம்.
சுற்றுலா பயணம்
சுற்றுலா பயணம்AI image
ஜெயகாந்தி மகாதேவன்

என் பெயர் ஜெயகாந்தி. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து பள்ளி இறுதி வகுப்பு வரை அங்கு பயின்று வந்தேன். பிறகு என் பதினெட்டாவது வயதில் சென்னைக்கு குடி பெயர்ந்தேன். அங்கு தட்டெழுத்து சுருக்கெழுத்து பயின்று சுமார் நாற்பது ஆண்டுகள் வெவ்வேறு இடங்களில் பணி புரிந்து, ஓய்வு பெற்றுள்ளேன். அதன் பின் எழுத்தில் ஆர்வம் கொண்டு சில பெண்கள் பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன். கல்கி குழுமத்தினரின் ஊக்குவிப்பால் சிறுகதை, கவிதை, கட்டுரை என பல தலைப்புகளிலும் எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Updated on

நாம் வாழ்ந்து வரும் இடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்கு சென்று வருவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கவும் உடலுக்கு புத்துணர்ச்சி தரவும் உதவும் என்பது பலரும் அறிந்ததே. இதற்காக சிலர் வருடம் ஒருமுறை வரும் கோடை விடுமுறையில் குடும்பத்தோடு, அவரவர் வசதிக்கேற்ப வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளி நாடுகளுக்கோ சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இது அவர்களை வேலைப் பளுவிலிருந்து முழுவதுமாக விலகியிருந்து மகிழ்ச்சியான நாட்களை அனுபவிப்பதற்குக் கிடைத்த வரம் போன்ற சந்தர்ப்பம் என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் மனோதத்துவ நிபுணர்கள், "இல்லை... இல்லை.. அவ்வாறு கிடைக்கும் சந்தோஷமும் நினைவலைகளும் வெகு விரைவிலேயே மங்கிவிடும்" என்று வாக்குவாதம் செய்கின்றனர்.

வருடம் ஒருமுறை விடுமுறையில் செல்ல திட்டமிடும்போதும், விடுமுறை நாட்களை கழிக்கும்போதும் அவர்களின் மனம் அதிகப்படியான மகிழ்ச்சி பெறுவது உண்மைதான் என்றாலும், அந்த மகிழ்ச்சியானது வேலைக்குத் திரும்பிய ஒரு வார காலத்திற்குள் முழுவதுமாக மறைந்துவிடுகிறதென நெதர்லாந்தின் Applied Scientific Research அமைப்பினை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், நிஜ்மேகன் (Nijmegen) யூனிவர்சிட்டியுடன் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு எப்பவோ ஒருமுறை வெகேஷனில் கூடுதல் நாட்கள் பயணம் மேற்கொண்டு வருவதை தவிர்த்து, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, இரண்டு மூன்று நாட்களுக்கு புதியதோர் ஊருக்கு சென்று வருவது மனதிற்கு மகிழ்ச்சி தருவது போன்ற பல உணர்ச்சி பூர்வமான நன்மைகள் தர உதவும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

சிறுகச் சிறுக ஒரு வருடம் முழுக்க பணத்தை சேமித்து, வருடம் ஒருமுறை ஏறத்தாழ இரண்டு வாரம் வரை ஒருமுறை வெகேஷனில் சென்று வரும் திட்டம் வைத்திருப்பவர்கள் பல மாதங்கள் தொடர்ந்து வேலைப்பளுவில் மூழ்கிக்கிடக்கும் நிலையில் இருப்பார்கள். அவர்களின் மனம் மற்றும் மூளையானது அதிகப்படியான ஸ்ட்ரெஸ்ஸினால் மிகவும் சோர்வடைந்து சக்தியற்றுப் போயிருக்கும்.

இம்முறையை இவர்கள் மாற்றியமைத்து, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, சனி ஞாயிறு விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களுடன் சேர்ந்து வரும் லாங் வீக் என்ட் தினங்களில் சுற்றுலா பயணம் மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் மூளைக்கு தேவைப்படும் புத்துணர்வு அடிக்கடி கிடைக்கும்.

சுற்றுலா பயணம்
சுற்றுலா பயணம்AI Image

பொறுப்புகளிலிருந்து விடுபட்டு, எடுத்துக்காட்டாக, மூணாறு டீ எஸ்டேட்டில் மலையேற்றம் செய்வது, பழங்குடியினர் வசித்து வரும் பாரம்பரிய வீடுகள் அமைந்த தெருக்களை சுற்றி வருதல், ஏரிகளில் படகு சவாரி செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது மூளையின் ஸ்ட்ரெஸ் குறைந்து, மென்டல் ரீசெட் நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள்:
காலங்களைக் கடந்து நிற்கும் கலை: உங்களை வியக்க வைக்கும் உலக ஜவுளித் தேசம்!
சுற்றுலா பயணம்

அடிக்கடி பயணம் மேற்கொள்வது, உடல் முழுவதுமாக சோர்வடைவதை தடுத்து நிறுத்தும். உடலும் மனமும் ரிலாக்ஸாகி புத்துணர்வு பெற உதவும்.

ஐடி, நிதி மேலாண்மை மற்றும் மருத்துவ துறைகளில், ஓய்வின்றி பணியாற்றுபவர்களுக்கு இப்பயணங்கள் உல்லாசத்திற்காக அல்ல உடல் நலம் பாதுகாப்பற்கு என தாராளமாகக் கூறலாம். இப்படியான குறுகிய கால பிரேக் அப், அடுத்த ட்ரிப் பற்றின எதிர்பார்ப்புகளை மனதில் அசை போடச்செய்யும். அதுவே மகிழ்ச்சியின் அளவு அதிகரிக்க உத்தரவாதம் அளிக்கும்.

அமெரிக்கர்கள் எல்லா வார இறுதி நாட்களையும் "get away" என்றே அழைக்கின்றனர். வீட்டைப் பூட்டிவிட்டு குழந்தை, வளர்ப்புப் பிராணி என அனைத்துடனும் சிறிது தொலைவில் உள்ள மரங்கள் நீர் நிலைகள் நிறைந்த ரிசார்ட்களுக்கு காரில் சென்று, ரெஸ்டாரன்ட்களில் தங்கி இரண்டு நாட்களைக் கழித்துவிட்டு வருவதை வழக்கமாகவே வைத்துள்ளனர். அதுபோல் நாமும் நம் பயணத் திட்டத்தை மாற்றி அமைப்போம்; மன நிறைவு கொள்வோம்.

இதையும் படியுங்கள்:
உலகைச் சுற்றி வந்த அதிசயம்: தண்டவாளத்தில் பறக்கும் ஃப்ளையிங் ஸ்காட்ஸ்மேன்!
சுற்றுலா பயணம்

இந்த வாழ்க்கை முறை மாற்றத்தின் வாயிலாக, எந்நேரமும் சோர்வடையாமல், எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கவும், அடுத்தடுத்து வரும் பயணங்களின் எதிர்பார்ப்பிலேயே வாழ்வின் மகிழ்ச்சியைப் பலமடங்கு பெருக்கவும் உங்களால் முடியும்.

logo
Kalki Online
kalkionline.com