

கர்நாடகாவின் தட்சிணகன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ளது ராணிபுரா மலை. தட்சிணகன்னடா கர்நாடகாவின் கடலோர மாவட்டமாகும். இது சாகச பிரியர்களுக்கு மிகவும் ஏற்றது. இங்குள்ள மலைகளுக்கு அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு ட்ரக்கிங் செல்லலாம். இது அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் பசுமையான புல்வெளிகளைக் கொண்டு மலையற்ற பாதைகளுக்குப் பெயர் பெற்றது. ராணிபுரம் வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியான இந்த பகுதி, சாகச பிரியர்களிடையே மிகவும் பிரபலமானது.
இயற்கையை ரசிப்பவர்களும், மலையேறி சாகசம் செய்ய விரும்புபவர்களும் இந்த ராணிபுரா மலைக்கு சென்று வர திட்டமிடலாம். கடல் மட்டத்திலிருந்து 3,438 அடி(750 மீட்டர்) உயரத்தில் உள்ள இந்த மலை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கிறது.
மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் நடந்து செல்ல அற்புதமான காட்சிகளை கண்டு களிக்கலாம். உடலுக்கு புத்துணர்ச்சியும் மனதுக்கு சந்தோஷத்தையும் தரும் இந்த சாகச பயணம்.
கர்நாடகா மற்றும் கேரள எல்லையில் ராணிபுரா மலை உள்ளது. மங்களூரில் இருந்து 105 கிலோமீட்டர், மைசூரில் இருந்து 193 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதிக்கு முக்கிய நகரங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கு செல்ல காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. நுழைவு டிக்கெட் கொடுப்பது மதியம் 3 மணியுடன் முடிந்துவிடுகிறது.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கும் பச்சை பசேல் என்று காணப்படும் மலையும், மனதையும் உடலையும் வருடும் மென்மையான, குளிர்ச்சியான காற்றும், ஓடும் ஆறுகளும் நம் மனதை கொள்ளை கொள்ளும். இங்கு சுற்றுலா பயணிகள் நிறைய வந்த வண்ணம் உள்ளனர். மலை ஏற்றத்திற்கும் ஏற்ற சிறந்த இடம் இது. இங்கு செல்பவர்கள் தேவையான குடிநீர், உணவு, ஸ்நாக்ஸ் வகைகளை எடுத்துச்செல்வது நல்லது. காரணம் மலைக்குச் செல்லும் வழியில் கடைகள் எதுவும் இல்லை.
முக்கியமாக உணவுப்பொருட்களையும், தண்ணீரையும் பிளாஸ்டிக் டப்பாக்களில் எடுத்துச் செல்வதை தவிர்த்து விடுவது நல்லது. மலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி எடுத்துச் சென்றால் அவற்றை வாங்கி வைத்து விடுகிறார்கள். எனவே கவனம் தேவை.