கடல் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. காலையும், மாலையும் கடற்கரைக்கு சென்று கடலின் அழகை ரசித்துவிட்டு, கடற்கரை காற்றில் நின்றுவிட்டு வருவது மனதிற்கு ரம்மியமாக இருக்கும். இந்தியாவில் எத்தனையோ அழகிய கடற்கரைகள் இருந்தாலும், இன்று நாம் பார்க்கப் போவது வித்தியாசமான கடற்கரைகளை பற்றித்தான். வாங்க பார்க்கலாம்.
லட்கார் கடற்கரை மஹாராஸ்டிராவில் ரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள டபோலி (Dapoli) மார்க்கெட்டிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. லட்கார் கடற்கரை மிகவும் சுத்தமான கடற்கரையாகும். தண்ணீர் விளையாட்டுக்கு இக்கடற்கரை பிரபலமாகும். இங்கே டால்பின்களையும் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கடற்கரையில் கூட்டங்கள் அவ்வளவாக காணப்படாததால் தனிமை விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும். லட்கார் கடற்கரையில் சிவப்பு நிற கற்கள் இருப்பதால், கடற்கரை சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறது.
கர்நாடகாவில் உத்தாரா கன்னடா மாநிலத்தில் உள்ள கர்வாரில் அமைந்துள்ளது தில்மட் கடற்கரை. இந்த கடற்கரை மணல் கருப்பு நிறத்தில் இருக்கும். கொங்கனியில் ‘தில்லு’ என்றால் எள் விதை மற்றும் ‘மட்டி’ என்றால் மண் என்றும் பொருள். எள் விதை போன்று கருப்பு நிற மணலை கொண்டுள்ளதால் தில்மத் கடற்கரை என்று பெயர் பெற்றது. இந்த கடற்கரை அமைதியாக அழகாக கூட்டம் இல்லாமல் இருக்கும். சூரிய உதயமும், சூரிய அஸ்தமனமும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த கடற்கரையை சுற்றி பாசால்டிக் பாறைகள்(Basaltic rock) இருப்பதால் தான் கடற்கரை மணல் இயற்கையாகவே கருப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.
ராதாநகர் கடற்கரை அந்தமான் நிக்கோபாரில் உள்ள ஹவலாக் தீவில் உள்ளது. இந்த கடலில் அலை அவ்வளவாக இல்லாததால், இங்கே நீந்த தடையில்லை. டைம்ஸ் பத்திரிகையில் 2004ல் ஆசியாவில் சிறந்த கடற்கரை என பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது. நீலநிற கடலும் வெள்ளை நிற மணலும் இந்த கடற்கரையை மேலும் அழகாக்குகிறது. இந்த கடற்கரை மிகவும் புகழ்பெற்றதால், நிறைய சுற்றுலாப்பயணிகள் இந்த கடற்கரையின் அழகை ரசிப்பதற்காகவே வருகிறார்கள்.
ஒடிசாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கடற்கரையில் அஸ்டரங்கா கடற்கரையும் ஒன்றாகும். இக்கடற்கரை பூரியிலிருந்து 91 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நீலமான மணல்கடற்கரையை கொண்டிருப்பதே இக்கடற்கரையின் தனித்துவமாகும். இக்கடற்கரையின் அழகு நிறைய சுற்றுலாப் பயணிகளையும், புகைப்பட கலைஞர்களையும் ஈர்க்கிறது. அஸ்டரங்கா என்பதன் அர்த்தம், வண்ணமயமான சூரிய அஸ்தமனம் என்று பொருள்.
அக்னி தீர்த்த கடல் ராமேஸ்வரம் கோவிலுக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. இக்கடலின் தனித்துவம் எப்போதும் கடல் அலைகள் இல்லாமல் அமைதியாகவே உள்ளதேயாகும். இங்கே கடலில் நீரோட்டங்கள் இல்லையென்பதால் அலைகள் அவ்வளவாக வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடற்கரை சுற்றுலாத்தளமாக மட்டுமில்லாமல் ஆன்மீகத்தளமாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தத்கது. பக்தர்கள் இக்கடலில் வந்து மூழ்கி பாவங்களை போக்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த கோடைவெயிலுக்கு ஆன்மீக பயணமாகவோ அல்லது சுற்றுலாப்பயணமாகவோ இக்கடற்கரைகளுக்கு சென்று அவற்றின் அழகை ரசித்துவிட்டு வாருங்கள்.