
பயணம் செல்வது அனைவருடைய வாழ்க்கையிலும் தடுக்க முடியாத ஒன்றாகும். ஒவ்வொரு பயணத்திற்கும் நமக்கு தேவையானதை எடுத்து செல்ல ஒரு பை தேவைப்படும். அது எந்த இடத்திற்கான பயணமோ அதை பொருத்ததாகும். சின்னதாக கடைக்கு செல்ல வேண்டும் என்றாலும் அதுவும் பயணத்தில் தான் அடங்கும். அதற்கு தேவையான சின்ன பையை கையில் கொண்டு செல்வோம். அப்படி பயணத்திற்கு ஏற்ற பைகள் குறித்து பார்க்கலாம்.
முதலில் உங்கள் பயணத்தை விவரித்து கொள்ளுங்கள். குறுகிய பயணமா, நெடுந்தூர பயணமா, அல்லது தொழில் தொடர்பான பயணமாக என முதலில் ஆராய்ந்து கொள்ளுங்கள்.
பைகளை உருவாக்க பயன்படும் மூலப்பொருட்களே அவற்றின் தரத்தையும், நீண்ட ஆயுளையும் நிர்ணயிக்கின்றன. பிளாஸ்டிக், நைலான், பாலி கர்பனேட் அல்லது உயர் டெனியர் பாலியீஸ்டர் போன்ற நீடித்து உழைக்கும் பொருட்களை கொண்டு தயார் செய்த பைகளை தேர்ந்தெடுக்கலாம். இவை உங்கள் பொருட்களை பாதுகாக்கும். ஏனென்றால் இவை எளிதில் சேதம் அடையாது.
வெளிநாடு பயணத்துக்கான பைகளில் முக்கிய பங்கு வகிப்பது அவற்றின் அளவும், திறனும் தான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பை விமான நிலைய பயண பைகளின் கோட்பாடுகளை பூர்த்தி செய்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் பயணத்திற்கான ஒப்புதலை எளிதாக பெறமுடியும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு போதுமான கொள்ளளவு மற்றும் பல அடுக்குகளை கொண்ட பை ஏற்றதாக இருக்கும்.
நீங்கள் மேற்கொள்ளும் பயணம் விமான நிலையங்கள், நெரிசலான தெருக்கள், மக்கள் அதிகம் இருக்கும் பொது போக்குவரத்து, நீண்ட நேரம் நடைபயணம் என பலவிதமாக இருக்கலாம். அத்தகைய பயணத்தில் பயண பைகளின் இயக்கம் முக்கியமானது.
மிருதுவான உருளும் சக்கரங்களும் பொருத்தப்பட்ட பைகள், உறுதியான உள்ளிழுக்கும் கைப்பிடிகளுடன் கூடிய பைகள், பயணம் செய்வதற்கு ஏற்றவையாகும். பணிச்சூழல் காரணமாக பல்வேறு நிலப்பரப்புகளில், சிரமமின்றி பயணிப்பதற்கு இவை உதவியாக இருக்கும்.
பயணத்தின் போது உங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்து கொள்வது மிகவும் அவசியமானதாகும். வலுவான ஜிப்பர்கள் பொருத்தப்பட்ட பைகள் மற்றும் நம்பர் லாக் கொண்ட பூட்டுகளை பயணத்துக்கான பைகளுக்கு பயன்படுத்தலாம். இவை உடமைகளை பாதுகாக்கவும், தொடர் பயணத்துக்கு வசதியாகவும் இருக்கும்.