வேளாண் சுற்றுலாவின் அவசியம் அறிவோமா!

Agricultural Tourism
Tour
Published on

சுற்றுலா என்றவுடன் உயர்ந்த மலைகள், நீர்வீழ்ச்சிகள், பனிப்பாறைகள் மற்றும் வரலாற்றுத் தலங்கள் என பல பகுதிகள் பலரது நினைவிலும் எட்டிப் பார்க்கும். ஆனால், நாம் இப்போது காணவிருப்பது முற்றிலும் வேறானது; இருப்பினும் மிகவும் அவசியமானது. அதுதான் வேளாண் சுற்றுலா.

விவசாயம் குறித்த விழிப்புணர்வுகள் இன்றைய காலத்தில் வெகுவாக குறைந்து விட்டன. விவசாயிகள் துன்பப்படுவதை நம்மில் பலரும் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தும், ஷேர் செய்தும் பரிதாபப்படுகிறோம். ஆனால், விவசாயிகள் வேண்டுவது பரிதாபத்தையோ, மரியாதையையோ அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் வேண்டுவது விளைபொருள்களுக்கு நியாயமான விலை மட்டுமே. நாளுக்கு நாள் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், நாம் விழித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இதற்கு வேளாண் சுற்றுலா மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

வெளிநாடுகளில் வேளாண் சுற்றுலாவிற்கு ஏற்கனவே முக்கயத்துவம் தரப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் அதே முக்கியத்துவத்தை கொடுத்தால் தான் வருங்காலம் பசுமையானதாகவும், உணவுப் பஞ்சமின்றியும் இருக்கும். ஆகையால் இந்தியாவில் வேளாண் சுற்றுலாவின் அவசியத்தைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப இதனை மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விரிவுப்படுத்த அரசு முன்வர வேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாயம் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும், கிராமங்களில் இருக்கும் விவசாயப் பண்ணைகளைப் பார்வையிடவும் வேளாண் சுற்றுலா உதவுகிறது. மேலும் கிராமப்புற வாழ்வைப் புரிந்து கொள்வதற்கும், விவசாய அனுபவங்களைப் பெறுவதற்கும் வேளாண் சுற்றுலா ஒரு பாலமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

விவசாய அனுபவங்களை இன்றைய இளைஞர்கள் பெறும் போது, விவசாயத்தின் பக்கம் ஈர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இனிவரும் காலங்களில் பட்டம் படித்து முடித்தவுடன் நிறுவனங்களில் வேலை தேடி அலைவதை விடவும், விவசாயத்தில் களம் காண்பது சிறந்தது எனத் தோன்றும். சமூக வலைதளங்களின் மூலமாக வேளாண் சுற்றுலா பற்றிய தகவல்கள் மிக எளிதாக மற்றவர்களையும் சென்றடையும். இதனால், வேலைக்குச் செல்பவர்களுக்கு கூட விவசாயத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கலாம்.

இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால், அவர்களின் அணுகுமுறை நிச்சயம் புதிதாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால், கிராமப்புறத்தின் பொருளாதாரத்தை உயர்த்தவும் இந்த சுற்றுலா உதவும். வேளாண் சுற்றுலா தொடர்பான கொள்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். கல்வி பயிலும் பருவத்திலேயே பள்ளி, கல்லூரி மாணவர்களை வேளாண் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் போது, அது அவர்களின் மனநிலைமையை இயற்கை சார்ந்த விஷயங்களில் திருப்புதவற்கும் உதவும்.

இதையும் படியுங்கள்:
சுற்றுலா தருவது என்ன ?
Agricultural Tourism

விவசாயிகளை நோக்கி மாணவர்களும், இளைஞர்களும் வரும் போது, அது அவர்களுக்கு ஒரு விதமான புத்துணர்ச்சியை அளிக்கும். வேளாண் சுற்றுலாவில் விவசாயத்தின் ஆரம்ப நிலைகள், பயிர் இரகங்கள், சாகுபடி, அறுவடை மற்றும் விற்பனை குறித்து விவசாயிகள் எடுத்துரைக்கும் போது, பலரது மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அரசு சார்பில் வேளாண் சுற்றுலா மேற்கொள்ளப்படுமாயின், விவசாயிகளுக்கு ஒரு கணிசமான வருமானம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. விவசாயத்தில் ஆர்வம் இருந்தும் இது பற்றி கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்களுக்கு வேளாண் சுற்றுலா வரப்பிரசாதமாக அமையும்.

நாளைய சமுதாயம் விவசாயத்தின் அவசியம் அறிந்து வளர வேண்டுமாயின் வேளாண் சுற்றுலா மிகவும் அவசியமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com