சுற்றுலா பயணங்களின் முடிவில் நாம் என்னவெல்லாம் கற்கிறோம்; எவையெல்லாம் நமது வாழ்க்கைக்கு உதவும்; பயணங்கள் நமக்கு ஏன் அவசியம் என்பதை விளக்கிக் கூறுகிறது இந்தப் பதிவு.
சுற்றுலாவிற்கு செல்லும் போது தொலைதூரப் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இப்படியான பயணங்களில் வெளியில் வேடிக்கைப் பார்க்கும் போது மலைகள், ஆறுகள், குளங்கள், விவசாய விளைநிலங்கள் மற்றும் இயற்கை காட்சிகளைக் கண்டு ரசிப்போம். சுற்றுலாவில் இதுவும் ஒரு பகுதி தான் என்பதை பலரும் உணர்வதில்லை.
தொலைதூரப் பயணத்தில் நம் கண்ணில் விழுகின்ற ஒவ்வொரு காட்சியும் நமக்கு ஒவ்வொரு அர்த்தத்தை அளிக்கிறது. சில காட்சிகள் நம் மனதிற்கு இனிமையைத் தரும்; சில காட்சிகள் இயற்கையின் அழகை பிரமிக்க வைக்கும்; சில காட்சிகள் நம்மை சிந்திக்க வைக்கும்; சில காட்சிகள் நமக்கானப் பாதையை தேர்ந்தெடுக்கவும் உதவும். ஆகையால் ஒவ்வொரு பயணமும் நமக்கு ஏதோ ஒன்றை கற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.
சமூகத்தின் மீதான புரிதல்:
பொதுவாக நம்மில் பலரும் நம்மைச் சுற்றிய உலகத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்போம். சமூகத்தில் மற்றவர்களைப் பற்றிய புரிதல் அவ்வளவாக இருக்காது. ஆனால், நெடுந்தூரப் பயணத்தில் சமூகத்தைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும். சுற்றுலாவிற்கு ரயிலிலோ, பேருந்திலோ சென்றால் அந்த வாகனத்தில் செல்லும் அனைவருமே சுற்றுலாவிற்கு செல்ல வாய்ப்பில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேலைகள் இருக்கலாம். புதியவர்களுடன் பேசும் போது சமூகத்தின் பார்வையை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.
அதிகரிக்கும் அறிவாற்றல்:
வெளியூர்களில் புதிய கலாச்சாரம், புதிய உணவுகள் மற்றும் புதிய காலநிலை என அனைத்தையும் ரசித்து மகிழ்ந்தால், மூளை சிறப்பாகச் செயல்படும். புதுவிதமான கலாச்சாரங்கள் நம் வாழ்வியலுக்குப் புதிய அனுபவத்தைத் தரும். நமது சிந்தனையை விரிவாக்கவும், நினைவுத் திறனை அதிகரிக்கவும் பயணங்கள் உதவுகின்றன. அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
ஆளுமைத் திறன் மேம்படும்:
யாரென்று அறியாத நபர்களிடம் பழகுவதற்கு பெரிதும் கைக்கொடுப்பது பயணங்கள் தான். இதன் மூலம் மிக எளிதாக நம்மால் மற்றவர்களின் மனநிலையைக் கணிக்க முடியும் என்பதால், ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.
புதிய சிந்தனைகள் பிறப்பெடுக்கும்:
நம் வாழ்வின் கடினமான காலங்களில் சரியான முடிவை எடுக்கவும், சிந்தனையை விரிவுபடுத்தவும் பயணங்கள் துணைபுரிகின்றன. மேலும், உங்களின் படைப்பாற்றல் திறனும் அதிகரிக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்பவர்களால் பயணத்தில் காண்பதை வரையவும், எழுதவும் முடியும் என்பது முற்றிலும் உண்மை.
தகவமைத்துக் கொள்ளுதல்:
சுற்றுலா செல்லும் போது, சில அத்தியாவசியத் பொருள்கள் கிடைக்காமல் போகலாம். மேலும் கடினாமான சூழல்களை எதிர்கொள்ள நேரலாம். அப்போது அதனைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களைத் தயார்படுத்திக் கொள்வீர்கள் அல்லவா! இந்தப் பண்பு இடத்திற்கும், காலத்திற்கும் ஏற்ப உங்களைத் தகவமைத்துக் கொள்ளும் தன்மையைக் கற்றுக் கொடுப்பதோடு, எதையும் எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ளவும் சிறு துரும்பாக உதவுகிறது.
புத்துணர்ச்சி:
அடிக்கடி பயணம் மேற்கொண்டு மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொண்டால் இதய நோய் வருவதைத் தடுக்கலாம். சுற்றுலா செல்வது வெறும் பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் மட்டுமே என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், கவலைகளை மறக்கச் செய்து மனதையும், உடல் வலியை மறக்கடித்து உடலையும் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது இந்தச் சுற்றுலா.