நாய்களையே நாம் அதிகம் வைத்துக்கொள்ள மாட்டோம். ஆனால், ஜப்பானின் ஒரு கிராமம் முழுவதும் ஏராளமான நரிகள் அங்கும் இங்கும் சுதந்திரமாகத் திரியுமாம். இதுவே தற்போது ஜப்பானின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக இருந்து வருகிறது.
ஜப்பானின் ஷிரோஷி நகரத்தில் உள்ள ஜோவா மலைக்கு (Mt. Zoa) அருகில் உள்ள கிராமத்தில்தான் அதிகளவு நரிகள் உள்ளன. மலையிலும் கிராமத்திலும் மாறி மாறி சுமார் 100 நரிகள் வாழ்கின்றன. இவை பாதி மலையிலும், அதாவது வனவிலங்காகவும், பாதி கிராமத்தில் வாழும் விலங்காகவும் இருந்து வருகின்றன. இவை மக்களை எந்த விதத்திலும் துன்புறுத்தாது. ஆனாலும், நரிகளிடம் செல்லும்போது பாதுகாப்பு விதிகள் விதிக்கப்படும்.
அழகழகாக குட்டி குட்டி நரிகளிலிருந்து பெரிய நரிகள் வரை ஆங்காங்கே ஓடிக்கொண்டும், அங்கு வசிக்கும் மக்களிடம் கொஞ்சிக் கொண்டும் இருக்கும்.
இந்த கிராமமே ஒரு விலங்கியல் பூங்காதான். ஏனெனில், இங்கு நரிகளை அடைத்து வைக்க மாட்டார்கள். நரிகளைத் தொடக்கூடாது. அதேபோல், குறிப்பிட்ட இடங்களில் மட்டும்தான் உணவு அவற்றிற்கு கொடுக்க வேண்டும். மற்ற இடங்களில் கொடுக்கக்கூடாது. அதேபோல், நரிகள் சுற்றுலா பயணிகளின் காலணியை கடிப்பதால், காலணி அணிந்துச் செல்பவர்கள் கவனமாக செல்ல வலியுறுத்தப்படுகிறார்கள். ஒருமுறை அந்த காலணியை கடித்து அதில் ஒரு துண்டை விழுங்கியதால், ஒரு நரி இறந்தே போய்விட்டது. அதன்பின்னர்தான், இப்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது.
வருடம் முழுவதுமே இந்த இடத்திற்குச் செல்லலாம். ஆனால், குறிப்பாக குளிர்க்காலத்தில் பனி விழும் மலையைப் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும் என்பதாலும், அமைதியான இடமாக இருக்கும் என்பதாலும் அந்தச் சமயங்களில் செல்லலாம்.
நரிகள் அளவிற்கு இல்லையென்றாலும், அங்கு ஆடுகள் சிலவற்றைக் காணலாம். ஆகையால், ஜப்பான் சென்றால், கண்டிப்பாக இந்த இடத்திற்கு சென்று மகிழ்ந்து வாருங்கள்.
நரிகள் அங்கு இவ்வளவு இருந்தாலும், ஏன் அந்த கிராமத்து மக்கள், அவை சுதந்திரமாக உலாவ அனுமதிக்கிறார்கள் தெரியுமா?
அவர்களுடைய பெண் கடவுள் ஒருவரின் தூதுவர்கள் நரிகள் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆகையால், அவை கிராமத்திற்கு வருவது, வாழ்வது அனைத்தும் நல்ல சகுணமாக கருதப்படுகிறது. அதேபோல் அவர்களின் சில கோவிலின் நுழைவாயில்களில் நீங்கள் நரிகளைக் காணலாம்.
ஆகையால்தான், நரிகளால் ஏற்படும் தொந்தரவுகளைக் கூட அவர்கள் வரமாக ஏற்றுக்கொள்கிறார்கள்.