தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

Do you know about the Taj Mahal in South India?
South India tajmahal
Published on

லக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலைப் பற்றி நமக்குத் தெரியும். அது வட இந்தியாவில் உள்ளது. ஆனால், தென்னிந்தியாவில் உள்ள தாஜ்மஹாலைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது தக்காணத்தின் தாஜ்மஹால் என்று அழைக்கப்படுகிறது. அது அவுரங்காபாத் என்ற ஊரில், மகாராஷ்டிராவில் உள்ளது. 

இந்த தாஜ்மஹாலின் பெயர் பீவி கா மக்பாரா அதாவது பெண்மணியின் கல்லறை.  இந்த தாஜ்மஹால் ஆனது அவுரங்கசீப்பின் மகன் ஆஸம் ஷா என்பவரால் தனது தாய் தில்ரஸ் பானு பேகம் அவர்களுக்காக கட்டப்பட்டது.

கி பி 1637 இல் அவுரங்கசீப் அவர்களை மணந்த பாரசீக இளவரசி தில்ரஸ் பானு பேகம் ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அவரது ஐந்தாவது பிரசவத்தின்போது, அவரது மாமியார் மும்தாஜ் மகல் போலவே, பிரவசத்தின் பிறகு இறந்தார். அதாவது கிபி 1657-இல் ஐந்தாவது குழந்தையின் பிறப்பின்போது ஏற்பட்ட கருப்பை அழற்ச்சி காய்ச்சலால் ஒரு மாதம் கழித்து உயிரிழந்தார். அவர் அவுரங்கசீப்பின் பட்டத்து ராணியாக இருந்தார். மேலும், அவர் அவுரங்கசீப்பின் முதல் மனைவி ஆவார். அவரது மறைவுக்குப் பின்னர் ஒரு கல்லறை மாடம் கட்ட வேண்டும் என்று  அவுரங்கசீப் யோசித்தார். இந்தப் பணி 1660 இல் தொடங்கப்பட்டது.

கிபி 1668 ல் கட்டி முடிக்கப்பட்டது.  இந்தக் கல்லறை மாடமானது அதவுல்லா மற்றும் அன்ஸ்பத் ராய் அவர்களால், அதாவது கட்டுமான நிபுணர் மற்றும் பொறியியல் வல்லுனரால் கட்டப்பட்டது என்று பிரதான நுழைவாயிலில் கல்வெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த அதவுல்லா தாஜ்மஹாலை வடிவமைத்த உஸ்தாத் அஹமத் லாகூரி அவர்களது மகன்.

இதைக் கட்ட அவுரங்கசீப் ஏழு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி இருந்தார். இதை கட்டி முடிப்பதற்கு 6 லட்சத்து 68 ஆயிரத்து 203 ரூபாய் 7 அணாக்கள் செலவானது. அவுரங்கசீப் பணம் செலவழித்தலில் சிக்கனத்திற்கு பெயர் போனவர். இந்த நிதிக்குள் இதனைக் கட்ட வேண்டும் என்று கூறியதால் இந்த கல்லறை மாடத்தில் பல்வேறு சமரசங்கள் செய்யப்பட்டன. அதன் காரணமாக இது தாஜ்மஹாலை விட சற்று குறைவாக மதிப்பிடப்படுகிறது. ஆனாலும் கூட இது மிகவும் அருமையானதொரு கல்லறை மாடம்.

458 மீட்டர் நீளமும், 275 மீட்டர் அகலமும் உடைய பிரம்மாண்ட வெளியில் இந்தக் கல்லறை மாடம் கட்டப் பட்டுள்ளது.  தாஜ்மஹாலைப் போலவே சார்பாக் அதாவது நான்கு தோட்டங்கள் உடைய பாரசீக தோட்டத்தைக் கொண்டு பெரிய மேடையைக்  கொண்டு அதன் மீது நான்கு கோபுரங்கள் சூழ தாஜ்மஹாலை போலவே நடுவில் கல்லறை மாடம் உள்ளது. இந்தக் கல்லறை மாடத்திற்குச் செல்ல மூன்று பக்கங்களில் படிக்கட்டுக்கள் உள்ளன. இதுவும் பளிங்கினால் கட்டப்பட்ட ஒரு கல்லறை மாடமே. ஆனால் முழுக்க முழுக்க பளிங்கினால் கட்டப்படவில்லை. சுவரில் அடிப்பகுதி சலவைக் கற்களும், பின்னர் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டு, பூச்சு வேலை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
நிதானமாக இருப்பதால் கிடைக்கும் லாபம் என்ன தெரியுமா?
Do you know about the Taj Mahal in South India?

மறுபடி, வெங்காய வடிவலான குவிமாடம் சலவைக் கற்களால் கட்டப் பட்டுள்ளது.  இதற்கான சலவைக் கற்கள் ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள சலவைக் கற்குவாரி களிலிருந்து கொண்டுவரப்பட்டன. இங்கு அவுரங்கசீப்பின் மனைவி தில்ரஸ் பானு பேகம் புதைக்கப்பட்டுள்ளார். இறப்பிற்கு பின் இவர் ரபியா-உல்-துர்ராணி என்று அழைக்கப்பட்டார். அவுரங்கசீப் அவர்களும் கூட சில கிலோ மீட்டர்கள் தள்ளி குல்தாபாதில் புதைக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிராவிற்கு நீங்கள் சென்றால் அவுரங்காபாதிலுள்ள இந்த பீபி கா மக்பாரா அதாவது தக்காணத்தின் தாஜ்மஹாலைக் காண தவறாதீர்கள். கிட்டத்தட்ட தாஜ்மஹாலைப் போலவே வடிவமைக்கப்பட்ட இந்த தாஜ்மஹால் மிகவும் அருமையானதொரு கட்டடக் கலைக்கு சான்றாக விளங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com