போரா குகைகள் எங்கே இருக்கு தெரியுமா?

போரா குகை...
போரா குகை...

கொடைக்கானலில் அமைந்துள்ள குணா குகைகளைப் பற்றி நமக்குத் தெரியும். பிரம்மாண்டமான போரா குகைகளைப் பற்றித் தெரியுமா? இதைப் பற்றி அறியாதவர்களுக்காகத்தான் இந்த பதிவு.

சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இயற்கையான முறையில் உருவான போரா குகைகள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவில் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அனந்தகிரி மலைத் தொடரில் அமைந்துள்ளன. இந்த குகைகளை முதன் முதலில் 1807 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் புவியியல் ஆய்வாளரான திரு.வில்லியம் கிங் ஜார்ஜ் என்பவர் கண்டுபிடித்து அவை சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று அறிவித்தார். போரா குகையானது கடல் மட்டத்திலிருந்து 1450 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இவற்றின் மொத்த பரப்பளவு இரண்டு சதுர கிலோமீட்டர்களாகும். நுழைவாயிலானது நூறு மீட்டர் அகலமும், 75 மீட்டர் உயரமும் உடையது.

போரா குகை
போரா குகை

“போரா குஹாலு” என்று தெலுங்கு மொழியில் அழைக்கப்படும் போரா குகைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள இயற்கை குகைகளில் மிகப்பெரியது. போரா குகைகள் முழுக்க முழுக்கச் சுண்ணாம்புப் பாறைகளைக் கொண்ட சுண்ணாம்புக் கரட்டால் உருவான குகைக்கனிமப் படிவு ஆகும். குகைப்பகுதியின் வெளியே சுற்றிலும் பசுமை நிறைந்த காடுகள், மலைகள், அழகாக வளைந்து ஓடும் கோஸ்தானி ஆறு என அபாரமான இயற்கை சூழ்நிலை சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்கின்றன. கோஸ்தானி ஆறானது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஆனந்தகிரி மலையில் உருவாகி போரா குகைகளின் அடிவாரத்தை வந்தடைகிறது. பின்னர் ஒரிஸா மாநிலம் வரை பாய்ந்து சென்று கடலில் கலக்கிறது.

இந்த பகுதியில் கோஸ்தானி ஆறு பாய்ந்து சென்றது. காலப்போக்கில் தண்ணீர் மட்டம் குறையத் தொடங்க ஆற்று நீரானது கரியமில வாயுவை கிரகித்து ஹ்யூமிக் அமிலத் தன்மையுடைய தண்ணீராக மாறியது. ஹ்யூமிக் அமில நீர் சுண்ணாம்புப் பாறையைக் கரைத்து வெடிப்புகளை ஏற்படுத்தின. இந்த வெடிப்புகளே தற்போதுள்ள குகைகளாக உருவாகின. மேலும் ஹ்யூமிக் அமில நீர் சுண்ணாம்புப் படிமப் பாறையின் மீது ஓடியதால் ஏற்பட்ட வேதிவினைக் கிரியைகளால் ஸ்டலக்டைட் (Stalactite), ஸ்டலக்மைட் (Stalagmite) என்று இரண்டு இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாயின. இந்த ஸ்டலக்டைட், ஸ்டலக்மைட் கனிமப் படிவங்களுக்கு குகைக்கனிமப் படிவம் என்று பெயர். ஸ்டலக்டைட் தொங்குபனி போன்ற வடிவத்தில் உருவாகி குகை விதானத்திலிருந்து தொங்கியபடி காணப்படுகின்றன. பெரும்பாலான ஸ்டலக்டைட்கள் ஊசிமுனை போன்ற வடிவங்களைக் கொண்டுள்ளன.

இயற்கையாக உருவான குகைக் கனிமப் படிவங்கள் சிற்பிகள் உளியைக் கொண்டு செதுக்கிய சிற்பங்கள் போல காட்சியளிப்பது காண்போரை வியக்க வைக்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குகை விதானத்தில் தொங்கியபடி காணப்படும் குகைக்கனிமப் படிவங்களைப் பார்த்து தங்கள் மனதில் பலவித உருவங்களைக் கற்பனை செய்கிறார்கள். இவ்வாறாக சிவன், பார்வதி, வயதான சூனியக் கிழவியின் முகம், மனித மூளை, முதலை, காளான் குடைகள், கோபுரம் முதலான அவர்கள் மனதில் தோன்றும் உருவங்களை கற்பனையால் உருவாக்கி மகிழ்கிறார்கள்.

நுழைவுப் பகுதி
நுழைவுப் பகுதி

போரா குகைகள் நுழைவுப் பகுதி, குறைவான ஒளி புகும் பகுதி, இருண்ட பகுதி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டவை. இதில் குகையின் நடுவில் உள்ள குறைவான ஒளி புகும் பகுதிகளை மட்டும் சுற்றுலா பயணிகள் சென்று பார்க்க அனுமதிக்கிறார்கள்.

போராகுகைகள் விசாகப்பட்டினத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவிலும் அரக்கு பள்ளத்தாக்கிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. விசாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து போரா குகைகளுக்கு ரயில் பயணித்துச் செல்வது வித்தியாசமான அனுபவமாக அமையும். இந்த பாதையில் 30 சுரங்கங்கள் உள்ளன. இதைக் கடந்து செல்வதும் வித்தியாசமான அனுபவமாகும்.

இதையும் படியுங்கள்:
எதிர்மறை எண்ணம் உள்ளவர்களுக்கு குட் பை சொல்லிடுங்க…!
போரா குகை...

போரா குகையானது காலை பத்து மணி முதல் மாலை ஐந்தரை மணி வரையிலும் சுற்றுலா பயணிகளுக்காகத் திறந்திருக்கும். மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை உணவு இடைவேளையாகும். நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு நூறு ரூபாயும் சிறுவர்களுக்கு அறுபது ரூபாயும் பெறுகிறார்கள். இந்த குகைகளை முழுமையாகப் பார்வையிட சுமார் மூன்று மணி நேரம் தேவைப்படும். இந்த குகைகளுக்கு அருகில் அமைந்துள்ள அரக்கு பள்ளத்தாக்கினையும் அவசியம் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com