
சுமார் 400 ஆண்டுகள் பழமையானது டேனிஷ் கோட்டை. தரங்கம்பாடியின் சிறப்பம்சம் மற்றும் சுற்றுலாத் தலங்களில் காணவேண்டிய ஒரு இடமாகிய டேனிஷ் கோட்டை, தரங்கம்பாடி கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இது வங்கக் கடலை ஒட்டி கட்டப்பட்டுள்ள கோட்டையாகும். இதன் பின்னணி:
தஞ்சை அரசரான, ரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ்கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது. 1620 இல் கட்டப்பட்ட டேனிஷ் கோட்டை, டேனிஷ்காரர்களின் கோட்டைகளில் இரண்டாவது பெரிய கோட்டையாக விளங்கியது.
தரங்கம்பாடி என்கிற பெயருக்கு அலைபாடும் எனப் பெயர்க் காரணமும் உண்டு. இவ்வூரின் கடற்கரையில் ஓசோன் காற்று வீசுவதாகவும் கூறுவார்கள். மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியனால் நிலம் வழங்கப்பட்டு, 1306 ஆம் ஆண்டு மாசிலாமணி நாதர் கோவில் கடற்கரை ஓரம் கட்டப்பட்டது.
டேனிஷ் கோட்டை, தரங்கம்பாடியோடு 1845 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ்காரர்களுக்கு விற்கப்பட்டது, அதன் பிறகு இந்த ஊரும், கோட்டையும் தமது சிறப்பை இழந்தன. 1947 ஆம் ஆண்டு, இந்தியா சுதந்திரமடைந்த பின்னர், டேனிஷ்கோட்டை, தமிழக அரசால் ஆய்வு மாளிகையாக 1978 வரை பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு தமிழக தொல்லியல் துறையின் கட்டு்ப்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது இங்கே அகழ் வைப்பகம் எனும் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.
சமீப காலத்தில், இருமுறை டேனிஷ் கோட்டை புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2001 இல் டேனிஷ் மன்னர் குடும்பத்தின் உதவியுடன், மாநில தொல்லியல்துறை பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டது. அடுத்து 2011 ஆம் ஆண்டில், தமிழக சுற்றுலாத்துறை மூலம் டேனிஷ் கோட்டை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
தரங்கம்பாடி பகுதியில் டேனிஷ் கோட்டை முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும் இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையாகும். மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் ஆகிய இடங்களிலிருந்து கோட்டைக்கு வர பஸ் வசதிகள் உள்ளன.
டேனிஷ் கோட்டையின் சிறப்பம்சங்கள்:
இந்தியாவின் முதல் அச்சகம் 1714 -இல் டேனிஷ் பாதிரியாரால் இங்கே நிறுவப்பட்டது.
தமிழ் மொழியில், முதல் பத்திரிகை வெளியிடப்பட்டது. மேலும் தமிழ் மொழி ஆய்வுகளையும் வெளியிட்ட இடமாகும்.
டேனிஷ் கோட்டையின் கட்டுமான அமைப்பு பெரிய அரங்குகள் மற்றும் உயர்ந்த கூரைகளை கொண்டது.
கோட்டையின் ஒரு பகுதியில் அருங்காட்சியகம் உள்ளது. டேனிஷ் காலத்து பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், டேனிஷ் கோட்டையை சார்ந்த பொருட்களும், டேனிஷ் காசுகள், டேனிஷ் தமிழ் பத்திரங்கள் போன்றவைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கடலோர அரிப்பால் சேதமடைந்த டேனிஷ் கோட்டையின் சில பகுதிகள் சீராக்கப்பட்டு வருகின்றன. அநேக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் பல அரிய விஷயங்களைத் தன்னுள்ளே கொண்டு டேனிஷ் கோட்டை விளங்குகிறது.