
புத்த மதத்தின் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுவது கௌதம புத்தர் ஞானம் பெற்ற புத்த கயாதான். இது பீகார் மாநிலத்தின் வட பகுதியில் பாட்னாவில் இருந்து 110 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்து மதத்தின் மிக முக்கியமான புனித ஸ்தலமான கயா அருகில்தான் புத்தர் ஞானம் பெற்ற இடமும் அமைந்துள்ளது.
இந்த இடத்தில் முதல் மடாலயத்தை அசோகர் கட்டினார். புத்தகயாவில் உள்ள போதி மரத்தின் கீழ் அமர்ந்து சித்தார்த்தர் நீண்ட காலம் தியானம் இருந்து ஞானம் அடைந்து கௌதம புத்தரானார். இங்கு மகாபோதி விஹார் என்ற புத்த மடாலயம் உள்ளது.
இந்த மடாலயம் கிமு 6 ஆம் நூற்றாண்டில் கௌதம புத்தர் ஞானம் பெற்ற அதே இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த விஹாரில் பெரிய தாமரையின் மீது பத்மாசன நிலையில் கௌதம புத்தர் இருப்பது போன்று மிகப்பெரிய சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக உயரமான இந்த புத்தர் சிலை 1989 ஆம் ஆண்டு தலாய்லாமாவால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த சிலை கருங்கல் பாறை மற்றும் சிவப்பு கிரானைட்டை பயன்படுத்தி கட்டப்பட்டது.இந்த பிரம்மாண்டமான புத்தர் சிலை காண்போர் வியக்கும் வண்ணம் சமீப காலமாக சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது. இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெரஞ்சனா நதிக்கு அருகில் அமைந்துள்ள புத்தகயா முன்பு உருவேலா என்று அழைக்கப்பட்டது. இது கி.பி 18 ஆம் நூற்றாண்டு வரை சம்போதி, வஜ்ராசனம், மகாபோதி என்றும் அழைக்கப்பட்டது. தற்போது இது புத்தகயா என்றழைக்கப் படுகிறது.இந்தியாவில் உள்ள குஷிநகர், லும்பினி மற்றும் சாரநாத் உள்ளிட்ட முக்கியமான புத்த தலங்களில் இது முதன்மையானது. புத்தகயாவிற்கு அருகில் உள்ள பூர்வ கயாவின், வடகிழக்கே சுமார் 12 கி.மீ தொலைவில் பண்டைய துங்கேஸ்வரி குகைக் கோயில்கள் உள்ளன.
இந்த துங்கேஸ்வரி குகை கோயில்களில் உள்ள மூன்று குகைகளில் புத்தர் தியானம் செய்ததாக நம்பப்படுகிறது. புத்தர் கயாவை அடையும் முன்னர் இங்கு தான் தியானம் செய்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள குகைகளில் சுஜாதா ஸ்தானம் என்று அழைக்கப்படும் புத்த மடாலயங்களும் உள்ளன.
இங்கு புத்தர் பட்டினி கிடந்து தன்னைத்தானே வருத்திக்கொண்டு மிகவும் பலவீனமடைந்து இருக்கிறார். அந்த நேரத்தில், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண் அவருக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்கினார். அதன் பின்னர்தான் அவர் தனது பயணத்தைத் தொடர்ந்து புத்தகயாவை அடைந்து இறுதியாக ஞானம் பெற்றார்.
இந்த மடாலயத்தில் ஒன்றில் 6 அடி உயரமுள்ள ஒரு அழகான தங்க புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கயா செல்லும்போது இந்த பழங்கால குகைக் கோயில்களைப் பார்வையிட மறக்காதீர்கள். கயாவிற்கு அருகில் ராம்குண்ட் என்ற ஒரு குளம் உள்ளது. அங்கு ராமர் ஒருமுறை குளித்ததாக நம்பப்படுகிறது. இந்த குளத்தில் குளிப்பதால் பக்தர்களின் அனைத்து பாவங்களும் நீங்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான புத்த மதத்தினர் புத்தகயாவிற்கு வந்து புத்தரை வழிபட்டு செல்கின்றனர். அதிலும் குறிப்பாக தாய்லாந்து, வியட்நாம், இலங்கை, மியான்மர், லாவோஸ், கம்போடியா, திபெத் போன்ற புத்த மத நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து செல்கின்றனர்.
இங்கு ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும், உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். புத்த கயாவிற்கு செல்ல விமானம் அல்லது ரயில் மூலம் கயாவிற்கு சென்று அங்கிருந்து டாக்ஸி மூலம் புத்தகயா செல்லலாம்.