
விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு என்பது அதிகமானோர் செய்யும் ஒரு தொழிலாகும். தாங்கள் வளர்க்கும் பசுமாடு மற்றும் எருமை மாடுகளில் இருந்து பெறப்படும் பால்களை பால் நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கோ அல்லது டிப்போ வைத்தோ விற்று வருமானம் ஈட்டுகின்றனர்.
ஆனால் ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கால்நடை வளர்க்கும் மக்கள் தங்கள் பசுக்கள் மற்றும் எருமைகளின் பாலை எந்த ஒரு நிறுவனங்களுக்கோ அல்லது மக்களுக்கோ தலைமுறை தலைமுறையாக விற்பனையே செய்வதில்லை.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்திற்கு வந்த மஹந்த் முனிஜி ஷம்ஷேர்கிரி மஹாராஜ்என்ற துறவி, இந்த கிராமத்திற்கு வந்து தவம் செய்தபோது, அந்த ஊரில் உள்ள பசு மற்றும் எருமைகளின் பாலை மற்றவர்களுக்கு விற்பனை செய்யாமல், வீட்டிலேயே வைத்துக்கொள்ளுங்கள் என்று கிராம மக்களிடம் கூறியிருந்தார். பால் விற்பது உங்கள் குழந்தையை விற்பதற்கு சமம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த போதனையை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள், தங்கள் பாலை மற்றவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டாம் என முடிவெடுத்து நான்கு தலைமுறையாக இந்த நடவடிக்கையை கடைபிடித்து வருகின்றனர்.
200க்கும்மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில், பெரும்பாலான குடும்பங்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு இருந்தாலும் தினமும் அதன் மூலம் கிடைக்கும் 800-ல் இருந்து 1000 லிட்டர் பாலை அவர்கள் விற்பனை செய்வதில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பால் நிறுவனம் இந்த கிராமத்தில் பால் சேகரிப்பு மையத்தை திறக்க விரும்பியது, ஆனால் கிராமவாசிகள் ஷம்ஷேர்கிரி மகாராஜிடம் அளித்த வாக்குறுதிக்காக அந்த நிறுவனத்திற்கு பால் விற்பனை செய்ய மறுத்துவிட்டனர். மேலும், இந்த கிராமத்தில் பசு மற்றும் எருமை மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலை கொண்டு சுத்தமான தயிர் மற்றும் நெய் தயாரிக்கப்படுகிறது.
இதனாலேயே ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்த கிராமம் நெய் வாலா பக் காவ்ன் என்று அழைக்கப் படுவதோடு இங்கு தயாரிக்கப்படும் நெய்யை வாங்க ராஜஸ்தான் மாநில மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள குஜராத்தில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாங்கி செல்கின்றனர். இந்த கிராமத்தில் ஒருவரது வீட்டில் திருமணம் அல்லது சமூக அல்லது மத நிகழ்ச்சிகள் நடந்தால், கிராமத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப் பவர்கள், அவர்களுக்கு இலவசமாக பால் வழங்கி உதவி செய்கிறார்கள்.