ஆமைத் தீவு எங்கிருக்கிறது தெரியுமா?

toronto island
toronto island
Published on

ட அமெரிக்க கண்டத்திற்கு,  வட அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளில் வசித்த பழங்குடி மக்கள் வைத்த பெயர் “ஆமைத் தீவு” இங்கு பழங்குடி மக்கள் அல்கோன்குவியன், இராகுவேயன் என்ற மொழியைப் பேசுகின்றனர். இவர்களுடைய பழங்கதைகளின்படி ஆமை வாழ்க்கையின் சின்னம், ஆமை நாம் வாழும் உலகை ஆதரிக்கிறது. ஆமைத் தீவு, படைப்பின் பின்னணி பற்றிய அவர்களுடைய ஆன்மீக நம்பிக்கையின் எதிரொலி. இன்னும் பலர் ஆமையை வாழ்க்கையின் அடையாளம், கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாவலன் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்.

ஆமைத் தீவின் கதை பழங்குடி மக்களிடையே வெவ்வேறு விதங்களில் இருந்தாலும், அதனுடைய மையம் ஆமையைச் சுற்றியும், பூமியை மீட்பதைப் பற்றியும் சொல்கிறது.

ஒஜிப்வே பழங்குடி மக்களின் கதை வெள்ளத்தில் சூழ்ந்த பூமியிலிருந்து தொடங்குகிறது. உலகில் ஓயாமல் சண்டை நடந்து கொண்டிருப்பதால், உலகைப் படைத்த இறைவன், சண்டையிடும் மக்களை அழித்து, புது உலகை உருவாக்க முற்படுகிறார். அதற்காக உருவாக்கப்பட்ட பிரளயத்தில் லூன், கஸ்தூரி, ஆமை போன்ற விலங்குகள் மட்டும் தப்பிப் பிழைக்கின்றன. உலகை உருவாக்கும் வல்லமை படைத்த நானாபுஷ் என்ற கடவுள் இந்த விலங்குகளுடன் சேர்ந்து புது உலகை உருவாக்க முற்படுகிறார்.

நானாபுஷ், விலங்குகளை தண்ணீரில் மூழ்கி, ஆழமான பகுதியிலிருந்து, உலகை உருவாக்குவதற்கான மண்ணை எடுத்து வரும்படி பணித்தார். ஒன்றன் பின் ஒன்றாக இந்த முயற்சியில் இறங்கிய விலங்குகள் மண்ணைச் சுமந்து வரமுடியாமல் திரும்பி வந்தன. கடைசியாக முயற்சி செய்த கஸ்தூரி, வெள்ளத்தில் அதிக ஆழத்தில் சென்று திரும்பி வருவதற்கு வெகு நேரம் எடுத்துக் கொண்டது. அதனுடைய பாதங்களில் மண்ணைச் சுமந்து வந்த கஸ்தூரி, அந்த முயற்சியில் உயிர் துறந்தது. கஸ்தூரி பாதங்களிலிருந்த மண்ணை நானாபுஷ் எடுத்து, ஆமையின் முதுகில் வைக்க, அந்த மண்ணைத் தன்னுடைய முதுகில் சுமந்து, புதிய உலகம் உருவாக ஆமை உதவியது. அதனால், படைப்பின் மையமான இந்த இடத்திற்கு, “ஆமைத் தீவு” என்ற பெயர் ஏற்பட்டது.

ஆமைத் தீவு
ஆமைத் தீவுImage credit - pixabay

மற்றுமொரு பழங்குடிப் பிரிவினர், “ஆமைத் தீவு” பெயர் காரணத்திற்கு மற்றுமொரு கதை சொல்கிறார்கள். இந்தக் கதை தேவ லோகத்திலிருந்து ஆரம்பிக்கிறது. தேவ லோகத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருத்தி அங்கிருந்து தவறி பூமியில் விழ ஆரம்பித்தாள். இதைப் பார்த்த பறவைகள், தேவலோகப் பெண்ணை பத்திரமாக பூமியில் இறக்கி, ஆமையின் முதுகில் அமர வைத்தனர். தனக்கு உதவி செய்த விலங்குகளை வெகுவாகப் பாராட்டினாள் தேவ மங்கை. அவளை மையப்படுத்தி, பூமி வளர்ந்து ஆமைத் தீவு உருவானது.

மற்றுமொரு கதையில், தேவப் பெண் உலகம் உருவாக கடலின் ஆழத்திலிருந்து மண்ணை எடுத்து வரச் சொல்கிறாள். அவளின் சொல்படி, விலங்குகள் மண்ணை எடுத்து வர, தேவப் பெண் அதனை ஆமையின் முதுகில் வைக்கிறாள். அவை வளர்ந்து தேவப் பெண் மற்றும் அவளின் சந்ததியினர் வசிக்க புதிய உலகம் உருவானது. அதன் பெயர் ஆமைத்தீவு.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்குத் தேவை லட்சமல்ல, லட்சியம்!
toronto island

மற்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் “ஆமைத்தீவு” என்ற பெயரை மாற்றி ஆங்கிலத்தில் வட அமெரிக்கா என்று மாற்றினார்கள் என்ற கருத்து கனடிய மக்களிடம் இருக்கிறது. “ஆமைத் தீவு” என்பதை மறக்கக் கூடாது என்று “ஆமைத் தீவு செய்திகள்”, “ஆமைத் தீவு பாதுகாப்பு திட்டம்” என்று அமைப்புகள் உள்ளன. பள்ளி பாடப் புத்தகத்தில் ஆமைத் தீவு பற்றிய கதைகள் இடம் பெற்றுள்ளன. டொராண்டோ நகரின் மையப்பகுதியில், “நாதன் பிலிப்ஸ் ஸ்கொயர்” என்ற சதுக்கத்தில், வண்ண விளக்கொளியில் டொராண்டோ என்று நகரின் பெயர் செல்ஃபி எடுத்துக்கொள்ள அமைக்கப்பட்டுள்ளது. இதில் கடைசியில் உள்ள “ஓ’ என்ற ஆங்கில எழுத்தில் ஆமையின் உருவத்தை வரைந்துள்ளார்கள்.

“ஆமைத்தீவு” பற்றிப் படித்தபோது என்னுடைய மனதில் தோன்றியது மகாவிஷ்ணுவின் “கூர்மாவதாரம்”.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com