
உலகின் ஒரே இந்து நாடாக இருக்கும் நேபாளத்தில் அண்மையில் புரட்சி வெடித்தது. நேபாள நாட்டில் சுமார் 30 மில்லியன் மக்கள் வசிக்கின்ற நிலையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்பது பெரிய குற்றச்சாட்டாக உள்ளது. உணவு மற்றும் வேலை வாய்ப்புக்காக நேபாள மக்கள் ஒருபுறம் போராடும் நிலையில் போக்குவரத்து வசதிகள் குறித்த நிலையினை இப்பதிவில் காண்போம் .
வறுமை, வேலையில்லா திண்டாட்டம் அடிப்படை வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் நம்முடைய அண்டை நாடான நேபாளத்தில் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மறுபுறம் சாலைகள் போக்குவரத்து மற்றும் ரயில்வே போன்ற நவீன வசதிகளுக்காகவும் காத்திருக்கும் நிலை உள்ளது அதாவது 30 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நாட்டில் ஒரே ஒரு பயணிகள் ரயில் மட்டும் இயங்குவது அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியுள்ளது.
நேபாளத்தில் உள்ள 38 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டும் செல்லும் இந்த ரயில் மிக மெதுவாக செல்லக்கூடியது. அதாவது 38 கிலோமீட்டர் தூரத்தை கடக்க இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகும் என்பதுதான் வியப்பான செய்தியாக உள்ளது. நாம் சாதாரணமாக பேருந்து அல்லது ஆட்டோவில் பயணம் செய்தாலே இந்த தூரத்தை அதற்கு முன்பாக அடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாளம் முழுவதும் இரண்டு ரயில் பாதைகள் மட்டுமே இயங்குகின்றன. ஒன்று பயணிகள் ரயிலாகவும் மற்றொன்று சரக்கு ரயிலாகவும் உள்ளது. பயணிகள் ரயில் ஜெயநகர்- பங்காபாதையில் இயங்கும் அதே வேளையில் சரக்கு ரயில் ரக்சால் -சிர்ஷியா பாதையில் இயங்குகிறது.
ஜெயநகர் நகரத்திலிருந்து தொடங்கி நேபாளத்தின் பர்த்திபாஸ் வரை ஜெயநகர்-பங்கா பயணிகள் ரயில் பாதை நீண்டுள்ளது. ஆனாலும் ஜெயநகரிலிருந்து குர்தாவிற்கும், பின்னர் பங்காவிற்கும் மட்டுமே இந்த ரயில் தற்போது இயங்குகிறது. குறுகிய பாதையாக இந்த ரயில் பாதை கட்டப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகள் குறைந்த இது டெமு (டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்) ரயில்களை இயக்குகிறது.
வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நேபாளத்தில் உள்ள இந்த ஒரு ரயில் வேகத்தை பொருத்தவரை மணிக்கு அதிகபட்சமாக நாற்பது கிலோமீட்டர் வேகத்தை மட்டுமே அடைய முடியும். ரயில் மிகவும் மெதுவாக ஓடுவதால் பயண நேரம் அதிகரித்து இதன் விளைவாக 36 முதல் 38 கிலோமீட்டர் பயணிக்க இரண்டு மணி நேரம் ஆகிவிடுகிறது. ஆனாலும் இந்தியாவின் உதவியுடன் நேபாளத்தில் உள்ள இந்த பாதைகளை விரிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறப்படுகிறது.
மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத எந்த அரசும் நிலைத்து நின்று நாட்டை ஆட்சி செய்யமுடியாது என்பதற்கு நம் அண்டை நாடான நேபாளம் தற்போதுள்ள சூழ்நிலையில் உதாரணமாக இருக்கிறது.