ஆந்திர பிரதேசம் ஒரு வளமான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ள இடமாகும். இங்கு அழகான கடற்கரைகள், பள்ளத்தாக்குகள், ஆன்மீகத் தலங்கள், மலைப்பிரதேசங்கள் மற்றும் பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அனுபவிக்க முடியும்.
ஆந்திராவில் இயற்கை அழகு மற்றும் நகர வசதி இரண்டும் ஒருங்கே கொண்ட இடம் இந்த விசாக் எனப்படும் விசாகப்பட்டினமாகும். இது ஆந்திராவின் மிகவும் உயிரோட்டமான நகரங்களில் ஒன்றாகும். விசாகப்பட்டினத்தில் உள்ள ராமகிருஷ்ணா கடற்கரை மற்றும் ரிஷி கொண்டா கடற்கரை ஆகியவை தேனிலவு செல்லும் தம்பதிகளுக்கு ஏற்ற இடங்களாகும். அழகிய கடற்கரைகள், பசுமையான மலைகள் கைலாசகிரி மற்றும் சிம்மாசலம் கோவில் போன்றவை பார்க்க வேண்டிய இடங்களாகும்.
கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள வரலாற்று, மத மற்றும் கலாச்சார பொக்கிஷமான அமராவதி புத்த ஸ்தூபி உள்ளது. இது கிமு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது இந்தியாவில் காணப்படும் மிகப் பழமையான பௌத்த கட்டமைப்புகளில் ஒன்றாகும். அமராவதி தொல்லியல் அருங்காட்சியகம், அமரலிங்கேஸ்வரர் கோவில், தியான புத்தர் சிலை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொண்டப்பள்ளி, கொண்டவீடு கோட்டை, பத்திப்ரோலு பௌத்த ஸ்தூபி ஆகியவை பார்க்க வேண்டிய இடங்களாகும்.
அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள லேபாக்ஷி கோவில் விஜயநகர பேரரசின் குறிப்பிடத்தக்க கட்டிடக்கலை எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். லேபாக்ஷி வீரபத்திர சுவாமி கோவில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் அந்தரத்தில் தொங்கும் தூண்(மர்மத் தூண்) ஒரு முக்கியமான ஈர்ப்பாகும். சிறந்த சிற்பங்களும், துடிப்பான ஓவியங்களும் விஜயநகர கட்டிடக்கலையின் சிறந்த படைப்பாகும். கோவில் வளாகத்திற்கு அருகில் உலகின் மிகப்பெரிய நந்தியின் 70 அடி உயர ஒற்றை கல் சிலை நம்மை பிரமிக்க வைக்கும்.
'ஆந்திர பிரதேசத்தின் காஷ்மீர்' என்று அழைக்கப்படும் லம்பா சிங்கி மூடுபனி நிறைந்த காலையையும், குளிர்ந்த காலநிலையையும் வழங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 1000 மீ(3280 அடி) உயரத்தில், சுற்றியுள்ள சமவெளிகளை விட இந்தப்பகுதி குளிர்ச்சியானது. இது ஈரப்பதமான இலையுதிர் காடுகளால் சூழப்பட்டுள்ளது. இந்தப் பகுதியைச் சுற்றி பல காபி, பைன் மற்றும் யூகலிப்டஸ் தோட்டங்களும், ஆப்பிள் ஸ்ட்ராபெரிகளையும் பார்க்க முடியும்.
ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஹார்ஸ்லி மலைகள் ஆந்திர பிரதேசத்தின் பிரபலமான மலைவாச ஸ்தலங்களில் ஒன்றாகும். அமைதியான மற்றும் அழகிய மலைவாச ஸ்தலமான இது குளிர்ந்த வானிலை மற்றும் அழகிய காட்சிகளுடன், பைன் மற்றும் யூகலிப்டஸ் மரங்கள் நிறைந்த பகுதி இது. இது இனிமையான காலநிலை மற்றும் அழகிய காட்சிகளைக் கொண்டுள்ளது. அமைதியை விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம் இது. ஹார்ஸ்லி ஹில்ஸ் மற்றும் லம்பசிங்கி ஆகியவை அமைதியான, அதிக கூட்ட நெரிசல் இல்லாத இடங்களாகும். தனிமையைத் தேடிச்செல்லும் காதல் தம்பதிகளுக்கு ஏற்ற இடமிது.
'இந்தியாவின் கிராண்ட் கேன்யன்' என்று அழைக்கப்படும் காந்திகோட்டா, கடப்பா மாவட்டத்தில் பெண்ணாற்றுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கோட்டை கிராமமாகும். இது பெண்ணாற்றால் உருவாக்கப்பட்ட கண்கவர் பள்ளத்தாக்கு மற்றும் பழங்கால கோட்டையின் கலவையாகும். இந்தக் கோட்டை 1123 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. தனித்துவமான பாறை அமைப்புகளையும், ஆற்றங்கரை கோட்டையையும் கொண்டுள்ளது. இது மறக்க முடியாத அனுபவத்தை தரும். அக்டோபர் முதல் மார்ச் வரை வானிலை குளிர்ச்சியாகவும், வெளிப்புற நடவடிக்கைகளுக்கு இனிமையாகவும் இருக்கும். இந்த நேரத்தில் சுற்றுலா செல்வது சிறந்ததாக இருக்கும்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பெலும் குகைகள் இந்திய துணைக் கண்டத்திலேயே இரண்டாவது பெரிய குகையாகும். இந்தியாவின் மிக நீளமான குகைகள், அவற்றின் ஸ்டாலாக்டைட்டுகள், ஸ்டாலாக்மைட் அமைப்புகள் மற்றும் நீண்ட குறுகிய பாதைகளுக்கு பெயர் பெற்ற கர்னூல் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பேலம் குகைகள்.
இந்த சுண்ணாம்பு குகைகள் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக உருவாகி 3 கிலோ மீட்டருக்கும் அதிகமாக நீண்டுள்ளன. இருப்பினும் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த குகையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் புத்த மற்றும் சமணத் துறவிகள் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. 2002இல் ஆந்திர அரசு இந்த குகையை சுற்றுலாத்தலமாக மேம்படுத்தியது.