தமிழ்நாட்டின் உப்பங்கழிகள் மற்றும் கடற்கரையோர பகுதிகளில் பல்வேறு நீர் சார்ந்த சாகச விளையாட்டுகளான ஸ்கூபா டைவிங், கயாக்கிங், விண்ட்சர்ஃபிங், படகு சவாரி போன்ற விளையாட்டுகள் பிரபலமான இடங்கள் நிறைய உள்ளன.
சென்னையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரை சாலையில் (ECR) அமைந்துள்ளது முட்டுக்காடு. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகு இல்லம் (TTDC) அனைத்து நீர் சாகசங்களுக்கும் தேவையான வசதிகளையும், சில சமயங்களில் பயிற்சி வகுப்புகளையும் வழங்குகிறது.
அழகான, அமைதியான உப்பங்கழியின் இயற்கையின் அழகை ரசிப்பதுடன், உற்சாகமான நீர் விளையாட்டு களிலும் ஈடுபட இது ஒரு சிறந்த இடமாகும். நீரில் படகு சவாரி செய்வது இனிமையான அனுபவமாகும். துடுப்புகளை பயன்படுத்தி படகில் செல்வதான கயாக்கிங், காற்றுடன் இணைந்து படகில் செல்ல உதவும் விண்ட்சர்ஃபிங் விளையாட்டிலும், கேனோயிங் (Canoeing) போன்ற நீர் சாகசங்களிலும் ஈடுபடலாம்.
மன்னார் வளைகுடாவில் ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெலிங், படகு சவாரி மற்றும் இயற்கை நடைப்பயணம் போன்ற நீர் சார்ந்த சாகசங்கள் மற்றும் செயல்பாடுகளை அனுபவிக்கலாம். மேலும் மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்காவிற்குச் சென்று குருசடை போன்ற தீவுகளில் உள்ள பவளப்பாறைகள், பல்வேறு தாவரங்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை பற்றிய சுவாரசியமான விஷயங்களை அறிந்து கொள்ளலாம். இந்த பூங்காவில் அழிந்து வரும் கடல் ஆமைகளும், கடல் குதிரைகளும் வாழ்கின்றன. அவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். நீருக்கடியில் உலகம் மற்றும் கடல் உயிரினங்களைக்காண ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நோர்கெலிங் செய்ய சிறந்த இடமாகும்.
தமிழகத்தின் சென்னைக்கு அருகில் சோழமண்டலக் கடற்கரையில் பாராசெயிலிங், ஜெட் ஸ்கீயிங் மற்றும் கயாக்கிங் போன்ற பல்வேறு நீர் சார்ந்த சாகசங்களை செய்யமுடியும். இங்குள்ள சில நிறுவனங்கள் பயிற்சி பெற்ற ஊழியர்களுடன் பாதுகாப்பான நீர் சார்ந்த நடவடிக்கைகளை வழங்குகின்றன. பாய்மர படகின் மீது பறக்கும் அனுபவத்தை வழங்கும் பாராசெயிலிங் (Parasailing), வேகமான நீர் விளையாட்டான ஜெட் ஸ்கையிங் (Jet Skiing), துடுப்புகளின் உதவியுடன் கயாக் என்ற சிறிய படகில் பயணம் செய்வதும் (Kayaking), பலகையுடன் இணைக்கப்பட்ட பாய் மரத்தைப் பயன்படுத்தி நீரின் மேல் சறுக்கி செல்லும் விளையாட்டான விண்ட்சர்ஃபிங் (Windsurfing) போன்ற விளையாட்டுகளுக்கு பிரபலமான இடமாகும்.
சிதம்பரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பிச்சாவரம் இந்தியாவின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக் காடாகும். இங்கு படகு சவாரி செய்வது உப்பங்கழிகள் மற்றும் கால்வாய்களின் வலையமைப்பை ஆராய்வதற்கான மிகச் சிறந்த வழியாகும். பார்வையாளர்கள் 400க்கும் மேற்பட்ட நீர் வழிகளில் படகு சவாரி செய்து சதுப்பு நிலங்களின் அழகிய காட்சிகளை அனுபவிக்க முடியும்.
ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நீர் வழிகள் மற்றும் தனித்துவமான சதுப்புநில மரங்களைக் கொண்ட இந்த இடம் கயாக்கிங், கனோயிங் மற்றும் ரோயிங் போன்ற நீர் விளையாட்டுகளுக்கு புகழ்பெற்றது. அமைதியான நீர் மற்றும் பசுமையான மயக்கும் காட்சிகளுடன், பலவகையான பறவைகளையும், பறவைகளின் விதவிதமான ஒலிகளையும் கேட்க முடியும்.