
ரிவர்ஸ் வாட்டர் ஃபால்ஸ் ஆ! ஆமாம். மேலிருந்து கீழே விழும் நீர்வீழ்ச்சி, கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும் அதிசயத்தை, மகாராஷ்டிராவிலுள்ள நானேகாட் (Nane Ghat) பகுதியில் காணலாம்.
இதுதான் "ரிவர்ஸ் வாட்டர் ஃபால்ஸ்" எனக் கூறப்படும் அதிசயம்.
புனே ஜுன்னாருக்கு அருகே அமைந்துள்ள நானேகாட்டிற்கு, மும்பையிலிருந்து சாலை வழியாக 3 மணி நேரத்தில் சென்று விடலாம்.
நானேகாட் (Nane Ghat)
நானேகாட், கொங்கண் கடற்கரை மற்றும் தக்காண பீடபூமிக்கு அருகேயுள்ள கம்பீரமான ஒரு மர்மமான மலைத்தொடராகும். அங்கிருந்து ஒரு நீர்வீழ்ச்சி தலைகீழ் திசையில் பாய்கிறது. அதற்குக் காரணம், மேலிருந்து கீழ் நோக்கி பாய்ந்துவரும் நீரை, மறுபடியும் மேல்நோக்கித்தள்ளும் காற்றின் வலுவான சக்திதான். வெள்ளை நிறத்திரை காற்றில் பறப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. ரிவர்ஸ் வாட்டர் ஃபால்ஸ் காண மலையேறிச் செல்லவேண்டும்.
நானேகாட்டின் அதிசயத்தைக்காண, சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்கின்றனர். மழைக் காலமாகிய ஜூன் முதல் செப்டம்பர் வரை ரிவர்ஸ் வாட்டர் ஃபால்ஸ்ஸை கண்டு ரசிக்கலாம். ஆனால், மழைக்காலத்தில், நானேகாட் மலையேறுவது சற்று கடினமாக இருக்கும். மழை காரணம், பாதைகள் வழுக்கும். மேலும், வானிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படுகையில், பயணம் தடைப்படும்.
நானேகாட் மலையேற்றப்பாதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்பட்டது என்றும், சத்ரபதி சிவாஜி மகாராஜா ஆட்சி காலத்தில் இப்பாதை உபயோகத்தில் இருந்தது என பழங்கால குகைகள் மற்றும் பாறைகளில் வெட்டப்பட்டுள்ள பானைகளும் சாட்சியாக உள்ளன.
புவி ஈர்ப்பு விதியை அறியாத அழகிய வெள்ளை நிற அருவியைக் கண்டுமகிழ, ஐந்துமணி நேரம் ட்ரெக்கிங் செய்து வருபவர்கள் அதிகம்.
கல்யாண் பஸ் நிலையத்திலிருந்து பஸ்ஸில் ஏறி ஜுன்னார் சென்று அங்கிருந்து சாலை வழியே நானேகாட்டை அடையலாம்.
சாலை வழியாக காரிலும் ஜுன்னார் செல்லலாம்.
புனேயிலிருந்து 120 கி.மீ தூரத்திலும், மும்பையிலிருந்து 165 கி.மீட்டரிலும் இருக்கிறது.
நானேகாட்டிற்குச் செல்லும் அநேகர், இந்த இடம் பூமியிலுள்ள ஒரு சொர்க்கம் போன்றது எனக்கூறுகின்றனர்.
நானேகாட் ரிவர்ஸ் வாட்டர்ஃபால்ஸ்ஸை பார்த்த பின், அப்பகுதியிலிருக்கும் மால்ஷேஜ் காட் - (Malshej Ghat) ஐக் காண பலர் செல்கின்றனர். மால்ஷேஜ் -ஜை நாமும் பார்க்கலாமா..!!
மால்ஷேஜ் காட்:
நானேகாட் பகுதியில், மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு மலைப்பாதை மால்ஷேஜ் காட் ஆகும். இங்கே, பசுமையான காடுகள், நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், மற்றும் பலவகை பறவைகளைக் காணலாம். மலையேற்றத்தை விரும்புவர்களுக்கு ஏற்ற இடம்.
ஏரிக்கரையில் முகாம்கள் அமைக்கவும், ஓய்வெடுக்கவும் பல இடங்கள் உள்ளன. புகைப்படப் பிரியர்களுக்கு பிடித்தமான இடங்கள் அநேகம் இருக்கின்றன.
ஹரிஷ்சந்திர காட் கோட்டை:
ஹரிஷ்சந்திர காட் கோட்டை, மால்ஷேஜ் காட்டிலுள்ள பழமையான மலைக்கோட்டை. ஆறாம் நூற்றாண்டில், கலாச்சூரி வம்சத்தின் ஆட்சியின் கீழ் கட்டப்பட்டதெனக் கூறப்படுகிறது. இக்கோட்டை மீதும் ஏறுபவார்கள் பலர்.
கலு நீர்வீழ்ச்சி:
மால்ஷேஜ் காட்டிலுள்ள கலு நீர்வீழ்ச்சி, மகாராஷ்டிராவின் மிக உயரமான மற்றும் பெரிய நீர்வீழ்ச்சியாகும். மலையேற்றப்பாதை வழியாக செல்லவேண்டும். "கடவுளின் பள்ளத்தாக்கு" என அழைக்கப்படும் இடத்தில் உள்ளது. இயற்கையழகு நிரம்பியது.
பிம்பல்கான் ஜோகா அணை:
மால்ஷேஜ்காட் அருகேயுள்ள புஷ்பாவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மண் நிரப்பும் அணையாகும் பிம்பல்கான் ஜோகா அணை. இப்பகுதியில் அழகிய இயற்கை காட்சிகளையும், பச்சைப் புறா, மூர்ஹென், காடை போன்ற பறவைகளையும் காணலாம்.
ஃபிளமிங்கோ பாயிண்ட்:
ஃமால்ஷேஜ்காட்டிலுள்ள ஃபிளமிங்கோ பாயிண்ட், இயற்கையழகு மற்றும் அழகான சூழலைக் கொண்ட இடம் ஃபிளமிங்கோ ரிசார்ட் உள்ளது. ஃபிளமிங்கோ பறவைகளை இங்கே அதிகம் காணமுடியுமென்பதால், ஃபிளமிங்கோ பாயிண்ட் என அழைக்கப்படுகிறது.
இதர தகவல்கள்:
நானேகாட், மால்ஷேஜ்காட் போன்ற இடங்களில் தங்குவதற்கு ரிசார்ட்டுகளும், சாப்பிட உணவகங்களும் இருக்கின்றன.
டிரெக்கிங் செல்கையில், அத்தியாவசிய மருந்துகள், பிஸ்கட் பாக்கெட்டுக்கள், தண்ணீர் பாட்டில் போன்றவைகளை வைத்துக்கொள்வதோடு, நல்ல மலையேற்ற காலணிகளையும் அணிந்து செல்வது அவசியம். மழைக்காலத்தில் டிரெக்கிங் செல்வது என்பது தனி சுகம்தான் என்றாலும், பாதுகாப்பு விழிப்புணர்ச்சி முக்கியம்.