இன்றைய காலகட்டத்தில் தனியாக பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவு தான். இருப்பினும் தனிமையான பயணத்தை விரும்புபவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய சில குறிப்புகளை விளக்குகிறது இந்தப் பதிவு.
தனிமையை அதிகம் விரும்பும் நபர்கள் சுற்றுலா செல்லத் திட்டமிட்டாலோ அல்லது தொலைதூர பயணம் ஒன்றை மேற்கொண்டாலோ, அதில் சாதகமான மற்றும் பாதகமான விஷயங்கள் இரண்டுமே அடங்கி இருக்கும். இருப்பினும் தனிமையான பயணம் கூட நமக்கு சில நல்ல விஷயங்களை கற்றுத் தர வல்லது. பொதுவாக யாரும் தனிமையை விரும்புவதில்லை. இருப்பினும் வாழ்வில் நிகழ்ந்த சில கசப்பான சம்பவங்கள் தான் தனிமையான உணர்வை அளிக்கிறது. தனிப் பயணம் மேற்கொள்வதால் மனநிம்மதி கிடைக்கும் என்பது இவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
நெகிழ்வுத் தன்மை:
குழுவாக பயணம் செய்வதைக் காட்டிலும், தனிமையான பயணத்தில் யாருடைய கட்டளைக்கும் செவி சாய்க்காமல் சுதந்திரமாக இருக்கலாம். பயணத்தின் கால அளவை நீட்டிக்கவோ, குறைக்கவோ எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்கலாம். நாம் எங்கு செல்ல நினைத்தாலும் சென்று வர முடியும்.
நேரத்தை செலவிடலாம்:
தனிப் பயணத்தில் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்ய முழு சுதந்திரம் கிடைக்கிறது. பொதுவாக யாரும் நம்மைப் பற்றி நாமே புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குவதில்லை. ஆனால், தனிப் பயணத்தில் இதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
பட்ஜெட்:
தனிப் பயணத்தில் அனைத்து செலவுகளையும் நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், பட்ஜெட் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக வாய்ப்புள்ளது. இதுபோன்ற பயணங்களில் உணவு மற்றும் தங்குமிடத்திற்குத் தான் செலவு அதிகமாகிறது. இப்போது பலரும் சொந்த பைக்கில் தொலைதூரப் பயணத்தை தனியாக மேற்கொள்கின்றனர். இதுமாதிரியான பயணங்களில் பெட்ரோல் செலவு அதிகரிக்கும். பைக்கில் பயணம் செய்வது இன்றைய கால இளைஞர்களுக்கு மிகப் பிடித்தமான விஷயம் என்பதால் பலரும் பட்ஜெட்டை நினைத்து கவலைப்படுவதில்லை.
திட்டமிடுதல்:
பெரும்பாலும் தனிப் பயணத்தில் எந்த இடத்திற்கெல்லாம் செல்ல வேண்டும் என்ற திட்டமிடல் இருக்காது. இருப்பினும் எத்தனை நாள்களுக்கு பயணம் செய்யப் போகிறோம்; எப்போது வீடு திரும்புவோம் என்பதை அவசியம் திட்டமிட வேண்டும்.
அன்பானவர்களை தவற விடுவோம்:
தனிப் பயணத்தில் நமக்கு மிகவும் பிடித்த நபர்கள் நம் அருகில் இல்லையே என நிச்சயமாக எண்ணுவோம். ஆனால் குழுவாக பயணம் மேற்கொள்ளும் போது அன்பானவர்களை உடன் அழைத்துச் செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
பாதுகாப்பு:
தனியாக பயணிக்கும் போது ஏதேனும் ஆபத்துகள் ஏற்பட்டால் உடனே நமக்கு உதவ யாரும் இருக்க மாட்டார்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உதவினால் கூட மேற்கொண்டு பயணத்தைத் தொடர்வதில் ஒருவித பயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குழுவாக பயணிக்கும் போது இதுமாதிரியான பயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
முன்னெச்சரிக்கை: தனியாக எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஆனால், தினந்தோறும் எங்கு இருக்கிறீர்கள் என்பதை உங்கள் மீது அக்கறை கொண்ட ஒருவரிடமாவது தெரிவித்து விடுங்கள். இது உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும்.