
இந்தியாவில் உள்ள மர்மங்கள் நிறைந்த இடங்களில் பங்கார் கோட்டையும் ஒன்றாகும். இக்கோட்டையை சுற்றியுள்ள நிறைய அமானுஷ்யம் நிறைந்த கதைகளால் மக்கள் இந்த கோட்டைக்கு செல்வதற்கே பயப்படுகிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் 6 மணிக்கு மேல் இக்கோட்டைக்குள் மக்கள் செல்லத் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய பங்கார் கோட்டையின் வரலாற்றைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
பங்கார் கோட்டை 16 ஆம் நூற்றாண்டில் ராஜஸ்தானில் கட்டப்பட்டது. இக்கோட்டையை பகவந்த் தாஸ் என்னும் மன்னன் தன் மகனான மாதோ சிங் என்பவருக்காக கட்டியதாக சொல்லப்படுகிறது.
இக்கோட்டையை சுற்றி இரண்டு கதைகள் மிகவும் பிரபலமாக பேசப்படுகிறது. முதலாவது கதை, இங்கு வாழ்ந்து வந்த துறவி ஒருவரின் வீட்டின் மீது இங்கு கட்டப்படும் கோட்டையின் நிழல் விழக்கூடாது என்று கூறியிருப்பார். அதன்படியே எல்லா அரசர்களும் கோட்டையை கட்டியிருப்பார்கள். ஆனால், மாதோ சிங் மட்டும் அந்த விதிமுறையை மீறி துறவியின் வீட்டின் மீது கோட்டையின் நிழல் படும்படி கட்டிவிட, அன்றிலிருந்து அந்த துறவியின் சாபம் கோட்டையின் மீது விழுந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இரண்டாவது கதை இளவரசி ரத்னாவதியை பற்றியதாகும். ரத்னாவதி மிகவும் அழகு வாய்ந்தவராவார். அவரை திருமணம் செய்து கொள்ள எல்லா நாட்டு இளவரசர்களும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், ரத்னாவதியின் மீது ஒரு மந்திரவாதிக்கு ஆசை ஏற்பட்டது.
அவன் ரத்னாவதியை அடைய வேண்டும் என்று அவர் பயன்படுத்தக்கூடிய வாசனை திரவியத்தில் அவரை மயக்குவதற்காக சில பொருட்களை கலந்து வந்திருக்கிறான். இதை அறிந்துக்கொண்ட இளவரசி ரத்னாவதி அந்த வாசனை திரவியத்தை ஒரு பெரிய பாறையின் மீது தூக்கி எறிய அந்த கல் மந்திரவாதியை நசுக்கி கொன்றதாம். அவன் இறப்பதற்கு முன் இவ்விடத்திற்கு ஒரு சாபம் கொடுத்தான். இவ்விடத்தில் யாராலும் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ முடியாது என்பதேயாகும்.
அதிலிருந்து இக்கோட்டை அமானுஷ்யங்கள் நிறைந்ததாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இங்கே இரவில் பலவிதமான சப்தங்கள் கேட்பதாகவும், இரவில் இக்கோட்டைக்குள் சென்றால், யாரோ தங்களை கண்காணிப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் சொல்கிறார்கள். ‘இக்கோட்டைக்குள் இரவு சென்ற யாரும் திரும்பியதில்லை’ என்பது இங்குள்ள மக்கள் சொல்லப்படுவது.
அதனால்தான் தொல்பொருள் ஆய்வுத்துறை இரவில் இக்கோட்டைக்குள் மக்கள் செல்லத் தடை விதித்துள்ளது. இருப்பினும், ஆர்வம் நிறைந்த சுற்றுலாப்பயணிகள் இக்கோட்டையை இரவில் சுற்றிப் பார்ப்பதற்கு வந்த வண்ணம் உள்ளனர். நீங்கள் இந்த கோட்டைக்கு இரவில் செல்வீர்களா? இதைப்பற்றி உங்களுடைய கருத்தை தெரிவியுங்கள்.