

நான்காம் நாள்:
பாரிஸில் நாங்கள் சென்றது, வெர்சயில்ஸ் (Versailles) எனும் மிகப் பிரம்மாண்டமான அரண்மனை. இதை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அந்தக்கால மன்னரும், அவரின் வாரிசுகளும் தொடர்ந்து கட்டி வந்து இந்த அளவு பிரம்மாண்டத்தைக் கொண்டு வந்துள்ளனர் என்று வரலாறு கூறுகிறது.
இதனுள் மன்னருக்காகக் கட்டப்பட்டிருந்த எண்ணிலடங்கா ஆடம்பர அறைகள், முழுவதும் கண்ணாடிகளாலான அரங்கம் (Hall of Mirrors), மியூசிகல் கார்டன், பிரான்ஸின் வரலாற்றைக் கூறும் மியூசியம், அதில் பதவியேற்பு விழா, திருமணவிழா போன்றவற்றைத் தத்ரூபமாகப் பிரதிபலிக்கும் ஓவியங்கள், மன்னர்கள் உபயோகித்த வகைவகையான கோச்களின் அணிவகுப்பு, வழிபாட்டுத் தலம் என பார்த்து ரசிக்க இருந்தவை மிக ஏராளம்! அதிலிருந்து வெளியேற மனமின்றி, லஞ்சுக்குக் கிளம்பினோம்.
சாப்பிட்டபின் சென்ற இடம் லூவ்ரே மியூசியம் (Louvre Museum). பிரம்மாண்டங்களின் அணிவகுப்பில் இதற்கு முதலிடம் என்றால் மிகையாகாது. உலகத்திலேயே மிக அதிகமான பார்வையாளர்களைத் தன்பால் ஈர்த்த மியூசியம். அகலமான படிக்கட்டுகளையும், அநேக மாடிகளையும் கொண்ட இக்கட்டடத்தின் உள்ளே முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை நினைவுபடுத்தும் கலைநயம் மிக்க சிற்பங்கள், மற்றும் பெயிண்ட்டிங்ஸ் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஓவியர் டா வின்ஸியின் ஈடு இணையற்ற உலகப் புகழ் வாய்ந்த ஓவியமான 'மோனா லிசா இங்குதான் உள்ளது. தேனடையை மொய்க்கும் தேனீக்கள் போல் அதன் முன்பு மக்கள் கூட்டம் கூடி, போட்டோ எடுக்க முண்டியடித்துக் கொண்டிருந்தனர். சிறிது தொலைவில் நின்று பார்த்து, மனதுக்குள் படம் பிடித்துக்கொண்டு, அந்த இடத்தைவிட்டு நகர்ந்தோம் நாங்கள்.
இங்கு வைக்கப்பட்டுள்ள, புகழ்பெற்ற, மற்றொரு சிலை, கிரேக்க நாட்டு பழைமை வாய்ந்த "வீனஸ் டி மிலோ" (Venus de Milo) வாகும். இதை அலெக்சான்ட்ரோஸ் என்ற சிற்பி, மார்பிளில் மிக அழகாக செதுக்கியுள்ளார். அதையும், அதுபோன்ற மற்ற சிலவற்றையும் பார்த்தோம். மூன்று மணி நேரம் ஆனாலும் முழுசும் பார்க்கமுடியாது, எனர்ஜியும் பத்தாது. பிறகு கீழே வந்து, ஷாப்பிங் சென்றோம்.
அன்றிரவு, செய்ன் (Seine) நதியில் க்ரூய்ஸில் சென்றோம். இரு கரையோரங்களில் அமைந்திருந்த புராதன நினைவுச் சின்னங்களையும், கட்டடங்களையும் கண்டு வியந்தோம். பாரிஸ் நகரில் பஸ்ஸில் பயணிக்கையில் பல டனல்கள் வழியாகவும் பஸ் சென்றது. அப்படி ஒரு டனல் வழியே செல்கையில், எங்கள் கைடு, "இந்த இடத்தில்தான் உலகையே உலுக்கிய அந்தக் கார் விபத்து நேர்ந்தது. அதில்தான் முன்னாள் இளவரசி டயானா தன் கடைசிப் பயணத்தை முடித்துக்கொண்டார்," என்றார். அதைக் கேட்டு, சில நிமிடம் மெளனமாகி, மானசீகமாக அவருக்கு அஞ்சலி செலுத்தினோம்
ஐந்தாம் நாள்:
பாரிசிலிருந்து புறப்பட்டு, யூரோப்பியன் யூனியனின் தலைநகரமான பிரஸ்ஸல்ஸ் (Brussels) சென்றடைந்தோம். அங்கு, உலகப் புகழ்பெற்ற, கிராண்ட் பேலஸ், வரலாற்று முக்கியத்துவம் பெற்ற மன்னேகின் பிஸ் சிலை (Mannekin Pis Statue) ஆகியவற்றைப் பார்த்தோம்.
பின், செயின்ட் மைகேல்ஸ் சர்ச் பார்க்கச் சென்றோம். போகும்வழியில், பிரஸ்ஸல்ஸில் 1958ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் திருவிழா (World's Fair)வின் நினைவாக நிறுவப்பட்ட 'அடோமியம்'(Atomium) அருகில் போட்டோ எடுத்துக்கொண்டோம்.
ஆறாம் நாள்:
நாங்கள் சென்றது ஹாலந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம். அங்குள்ள மறுராடாம் என்ற ஊரில் 1:25 என்ற அளவில் ஹாலந்து நாடு முழுவதையும் ஒரு மாடலாகச் சுருக்கி, அங்கே 'மினியேச்சர் ஹாலந்து' என்ற பெயரில் காட்சிப்படுத்தி வைத்துள்ளனர். அந்தச் சிறிய மாடலை, அங்குலம் அங்குலமாகப் பார்த்து, ரசித்துப் புரிந்துகொண்டால், முழு ஹாலந்து நாட்டையும் புரிந்துகொண்ட நிறைவு ஏற்படும்.
பின் வோலண்டம் என்றொரு ஊருக்குச் சென்றோம். மரத்திலான வீடுகளைக்கொண்டு, மிகப் பழமையான கலாச்சாரத்தைப் பின்பற்றும் சிறிய ஊர் அது. அங்கு வீடுகளின் அருகில் மாட்டுத் தொழுவம் அமைத்து மாடுகள் வளர்க்கின்றனர். அந்தப் பகுதியில் ஒரு பண்ணை உள்ளது. அதில், நீண்டநாள் உபயோகிக்கும்படியான பக்குவத்தில் சீஸ் தயாரிக்கப்பட்டு, அங்கேயே விற்பனையும் செய்யப்படுகிறது. மரத்திலான ஷூக்கள் தயாரிக்கும் உட் (wood) ஃபேக்டரி ஒன்றையும் அங்கு பார்க்க முடிந்தது. அங்கிருந்தவர்கள், மரத்துண்டுகளைச் செதுக்கி ஷு தயாரிக்கும் முறையை செயல்வடிவில் விளக்கிக் காட்டினர். அமேஸிங்!!
பின் ஆம்ஸ்டர்டாம் வந்து அங்குள்ள பிரம்மாண்ட கால்வாயில், மேற்கூரை கண்ணாடி ஷீட்களாலான படகில் அமர்ந்து, பல பாலங்களின் கீழே பயணித்து, இரு கரைகளிலும் அமைந்திருந்த பழமை மாறா வீடுகளைக் கண்டு மகிழ்ந்தோம்.
டாம் ஸ்கொயர் என்ற இடத்தில் அமைந்துள்ள ராயல் பேலஸ், வார் மெமோரியல் ஆகியவற்றைப் பார்த்து முடிக்கையில் அந்த நாளும் முடிந்திருந்தது.
ஏழாம் நாள்:
ஜெர்மனியின் கலோன் (Cologne) நகருக்குச் சென்றோம். அங்கு, வியப்புமிகு 'கோதிக்' கட்டடக் கலையைப் பின்பற்றிக் கட்டப்பட்டுள்ள கலோன் கதீட்ரலை அதே வியப்புடன் கண்டு ரசித்தோம்.
லஞ்சுக்குப் பின், ரைன் (Rhine) நதியில் க்ரூய்ஸில் சென்று, இரு கரைகளிலும் பயிரிடப்பட்டிருந்த, திராட்சைத் தோட்டங்களையும், பசுமையான இயற்கைக் காட்சிகளையும் கண்குளிரக் கண்டு மகிழ்ந்தோம்.
பின், பஸ்ஸில் அமர்ந்து நெக்கர் நதிக்கரையில் அமைந்துள்ள 'ஹைடெல்பெர்க்' (Heidelberg) என்ற சிறிய ஊரை அடைந்தோம். அங்கு காலாற ஒரு ரவுண்டு நடந்துவிட்டு, டின்னருக்குச் சென்றோம். ஏழாம் நாளும் முடிவடைந்தது.
எட்டாம் நாள்:
அடர்ந்த ஃபர் (fir) காடுகள், பூக்கள் பூத்துக்குலுங்கும் ரம்யமான இடங்கள், மேய்ச்சல் நிலங்கள், வன தெய்வங்கள் பற்றிய மந்திரம் தந்திரம் கலந்து கூறப்படும் கற்பனைக் கதைகள் - இவைகளால் சூழப்பட்ட மலைப்பகுதியே 'கருப்புக்காடு' (Black Forest). மேற்கூறிய அனைத்தையும் கடந்து, அந்தக் காட்டுக்குள் சென்றோம்.
அங்குள்ள உலகப்புகழ் பெற்ற, பாரம்பரியம் மிக்க, மரத்தால் செய்யப்படும், 'குக்கூ கடிகாரம்' Cuckoo Clock) தொழிற்சாலைக்குச் சென்றோம். அங்குள்ளவர்கள், கடிகாரங்கள் தயாரிக்கும் முறையையும், அவற்றின் செயல்பாடுகளையும் சுருக்கமாக விவரித்தனர். கேட்கையில் வியப்பின் விளிம்பிற்கே சென்றுவிட்டோம். கிடைத்தற்கரிய அந்த ஒரிஜினல் தயாரிப்புகளை விரும்பியவர்கள் வாங்கிக்கொள்ளவும் செய்தோம்.
பின் அங்கிருந்து, மிகமிக ஆவலுடன் எதிர்நோக்கிய சுவிட்சர்லாந்துக்கு, பயணத்தைத் தொடர்ந்தோம். வழியில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரிலிருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்த, ஐரோப்பாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான 'ரைன் அருவி (Rhine Falls)ஐ பார்த்தோம். அதிலிருந்து கொட்டும் நீரின் அளவைப்பார்த்து அதிர்ந்துப் போனோம் என்றால் அது மிகையில்லை. பின் தைரியத்துடன் படகில் ஏறி, அருவி நீர் பன்னீர் தெளிப்பதுபோல் நம் மீது தெறிக்கும் இடம் வரை நெருக்கமாச் சென்று பார்த்துவிட்டுத் திரும்பினோம்.
அ..ப்...பா ஒவ்வொன்றும் பார்க்கப் பார்க்க பிரமிப்பு!! இந்த அருவி கொட்டும் நீரிலிருந்து உற்பத்தியாகி ஓடுவதுதான் ரைன் ஆறு'(River Rhine). இந்த ஆறு ஐரோப்பாவின் போக்குவரத்துப் பயன்பாட்டுக்கு உதவும் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும்.
(பயணம் தொடரும்... 3)