யூரோப் சுற்றுலா (7) - ஒரு சாக்லேட் குளியல் போடலாமா?

Europe Tour - French Riviera
Europe Tour - French Riviera
Updated on

இன்றையக் காலகட்டத்தில், நவீன உலக அதிசயங்களில், ஏழாவதாகக் கருதப்படும் இந்தக் கொலோசியத்தை நாங்கள் அனைவரும் வியந்து, சுற்றிப் பார்த்துவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பினோம். வாழ்நாளின் மைல்கல் சாதனையாக, கொலோசியத்தைக் கண்டுரசித்த அனுபவம் எங்கள் மனமெங்கும் நிறைந்திருப்பதில் வியப்பில்லை!

15ஆம் நாள்:

ங்கள் சுற்றுலாவில், நாங்கள் தேர்ந்தெடுத்தப் பயணத் தொகுப்பு (package) இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முதல் பகுதி இரண்டு வாரங்களோடு முடிவடைந்து, 15ஆம் நாள் வீடு திரும்புவது. இரண்டாம் பகுதியில், விரிவாக்கம் செய்யப்பட்ட பயணமாக (extended tour) மேலும், ஒரு வாரம் தொடர்ந்து பயணித்து, மேற்கொண்டு சில நாடுகளைக் கண்டு, பிறகு வீடு திரும்புவது. எங்களுடன் பயணித்த சக பயணிகளில் பாதிப்பேர் 15ஆம் நாள் பிளேன் பிடித்து வீடு திரும்பிவிட்டனர். மீதமிருந்த, எங்களையும் சேர்த்து, சுமார் 25 பேர்களுடன் இரண்டாம் பகுதி பயணம் இனிதே தொடர்ந்தது.

எக்ஸ்ட்டென்டெட் டூரில் நாங்கள் சென்ற நாடுகள் மற்றும் நகரங்கள் - ஜெனோவா, மொனாக்கோ, நைஸ், கேன்ஸ், மார்ஷல், பார்சிலோனா, மாட்ரிட் ஆகியவை. பதினைந்தாம் நாள், ரோமிலிருந்து புறப்பட்டு ஜெனோவா சென்றடைந்தோம்.

ஜெனோவா (Genoa):

டமேற்கு இத்தாலியின் லிகுரியா (Liguria) என்னும் பகுதியின் தலைநகரம் ஜெனோவா. பல நூற்றாண்டுகளாய், இங்குள்ள துறைமுகம், கடல் வழி வணிக வர்த்தகத்தில் சிறந்து விளங்கி, ஜெனோவாவை உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக திகழச்செய்துள்ளது. இங்குள்ள தெருக்களும், சந்துகளும் மிகப் பழமையானவை. குறுகலானாவை.

இத்தாலியின் ஆறாவது மிகப்பெரிய நகரமான இங்கு நடைபெறும் பலவிதமான தொழில்களில் கப்பல் கட்டுதல் முதன்மையானது, பழமையான அரண்மனைகள், ரோமன் கத்தோலிக் தேவாலயங்கள், கலைக்கூடங்கள், அருங்காட்சியகங்கள், நினைவுச்சின்னங்களுடன் கூடிய பொது வெளிகள் நிறைந்த இந்நகரம், கிறிஸ்டோபர் கொலம்பஸ் (1451), போன்ற பல பிரபலங்களின் பிறப்பிடமாகவும் உள்ளது.

கொலம்பஸ் பிறந்த வீட்டுக்கு உள்ளே சென்று பார்க்கும் வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்தது. ஒரு மாடியுடன், மிகச் சாதாரண, சிறிய வீடு அது.

துறைமுகத்திற்குச் சென்று கப்பல்கள் நிறுத்தி வைத்திருப்பதையும் பார்த்தோம். அங்கே, கடற்கொள்ளையர்களின் (pirate ship) கப்பல் ஒன்றும் இருந்தது. அதன் முகப்பு, முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன் கையில் கத்தி, சூலாயுதம் முதலானவற்றை வைத்துக்கொண்டு பயங்கரமா தோற்றமளிக்கும் உருவத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிஜமாகவே பயந்துவிட்டோம்.

Piaggio Aerospace, Costa Cruises, Mediterranean Shipping Company போன்ற இத்தாலியின் பல புகழ்வாய்ந்த கம்பெனிகள், ஜெனோவாவில் மையமான நிலைத்தளம் (Base Station) அமைத்து இயங்கி வருவது பெருமைக்குரியது.

மொனாக்கோ:

ஃபிரெஞ்ச் ரிவைரா (French Riviera) என்றழைக்கப்படும் மத்தியதரைக் கடலின் அழகிய கரையோரம், கண்கவர் பீச்களுடன் அமைந்துள்ள பகுதியில்தான் மொனாக்கோ என்ற சிறிய நாடும், நைஸ், கேன்ஸ் ஆகிய பிரான்ஸ் நாட்டு நகரங்களும், சுமார் இருபது, முப்பது கிலோமீட்டர் இடைவெளிகளில் அமைந்து உள்ளன.

மொனாக்கோ, இத்தாலியின் லிகுரியா பகுதியின் மேற்கு பக்கம் பத்து மைல் தொலைவில் உள்ளது. இது உலகின் மிகச் சிறிய நாடுகளின் வரிசையில், வாடிகனுக்குப்பின் இரண்டாம் இடத்தில் உள்ளது. இது மிக ஆடம்பரமான சுற்றுலாத்தலமாகத் திகழ்கிறது. மிக அதிக எண்ணிக்கையிலான, உலகப்பெரும் பணக்காரர்கள் ஒரே இடத்தில் குவிந்து, இந்தச் சின்னஞ்சிறு நாட்டை இருப்பிடமாகக் கொண்டு வாழ்வது இதன் தனிச்சிறப்பு!

பெரும்பான்மையான மக்கள் ரோமன் கத்தோலிக்கர்கள். ஆடம்பரக் கேளிக்கை விடுதிகளும், ரெஸ்டாரண்ட்களும் நிறைந்த ஊரான மான்ட்டே கார்லோ (Monte Carlo) என்ற பகுதியில் உள்ள ட்யூ கேசினோ (du Casino) பணம் படைத்தவர்களின் சூதாட்ட விடுதியாய், புகழ் பெற்றுத் திகழ்கிறது. மீட்டிங், மாநாடு நடத்தவும் இங்குள்ள ஆடம்பர ரெஸ்டாரண்ட்களைத் தேடி வருபவர்களும் உண்டு. இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் கார் ரேஸ்களும் இங்கு நடைபெறுவது வழக்கம்.

அழகிய கார்டன்கள், செயின்ட் நிக்கோலஸ் கதீட்ரல் உட்பட்ட தேவலாயங்கள், பீச், ஆடம்பரப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் நிறைந்த அழகிய ஊர் இது. வியாபாரிகள், அதி நவீன ஆடம்பர உடைகள், ஜூவெல்லரிகள், மற்றும் அணிகலன்களைத் தயாரித்தும், விற்பனை செய்தும் வருகின்றனர். கடைகளில் வண்ண வண்ண கலர் பேப்பரில் சுற்றப்பட்ட சுவை மிக்க சாக்லேட்கள் நேர்த்தியாய் தோளுயரம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவற்றைப் பார்க்கையில், குவியலின் உள்ளே குதித்து ஒரு சாக்லேட் குளியல் போடலாம் போலத் தோன்றும்!!

இந்நாட்டு இளவரசர், எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் தெரியக்கூடிய, பசுமையான சிறுசிறு குன்றுகளால் சூழப்பட்ட, ஓர் அழகு நிறைந்த, மலையின் உச்சியில், 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அரண்மனையில் வசித்து வருகிறார். அரண்மனையையும், அதன் அருகில் உள்ள நீர்வாழ் உயிரினங்களின் மியூசியம், மற்றும் இளவரசர் சேகரித்து, உபயோகித்து வந்த கார்களின் வகைகளையும் கண்டு மகிழ சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி உண்டு. அதற்குண்டான டிக்கெட் வாங்கிச் செல்லவேண்டும்.

இங்குள்ள லார்வொட்டோ (Larvotto) பீச் மட்டுமே மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் ஜெல்லி ஃபிஷ் மிக அதிகம் இருப்பதால், மக்களின் நலன் கருதி நீண்ட வலைத் தடுப்பு போடப்பட்டுள்ளது. இந்தப்பக்கம் சன் பாத் எடுக்க, தக தகவென தங்கம்போல் ஜொலிக்கும் மணற்பரப்பு உண்டு. இலவச டாய்லெட், குளிக்க ஷவர், உடை மாற்றும் இடங்கள் ஆகியவை உள்ளன.

பல நாட்டு உணவகங்களின் அணிவகுப்பும், கடலை நோக்கிய மதுவருந்தும் பார்களும் (bar) உண்டு. ஒரு வருடத்தில், ஏறத்தாழ நான்கு மில்லியன் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வதாக்க கூறப்படுகிறது. மொத்தத்தில் ரம்யமான நாடு மொனாக்கோ!

(பயணம் தொடரும்... 8)

logo
Kalki Online
kalkionline.com