யூரோப் சுற்றுலா (8) - கூழாங்கல் கடற்கரையும் அழகு பதுமைகளின் சூர்ய குளியலும்!

Europe Tour - French Riviera Pebbles beach
Europe Tour - French Riviera Pebbles beach
Updated on

நைஸ் (Nice):

நைஸ்...."உண்மையாவே வெரி நைஸ் பிளேஸ்"ன்னு நாலு வார்த்தையில் சொல்லிட்டு விடமுடியாது! இதன் அழகையும் இங்குள்ள அற்புதங்களையும், கூட நாலு பத்தி (para) விவரித்தால்தான் விளங்கும்.

'Queen of the French Riviera' என்றழைக்கப்படும் நைஸ், ஆல்ப்ஸ் மேரிட்டைம்ஸ் டிபார்ட்மென்டின் (Alpes-Maritimes Department) தலைநகரமாகும். இங்கு வருடம் முழுவதும் இதமான வெப்ப நிலையுடன் இனிமையான காலநிலை நிலவுவதால், பன்னாட்டுப் பணக்காரர்களும் சங்கமிக்கும் இடமாக உள்ளது.

பத்துக்கும் மேற்பட்ட அழகிய, பொது மற்றும் பிரைவேட் பீச்களைக்கொண்டுள்ளது. அனைத்து பீச்களிலும் வழக்கமான ரெஸ்ட் ரூம்ஸ் மற்றும் குளிக்க, உடை மாற்ற, உண்ண, 'குடி'க்க, என சகல வசதிகளும் உண்டு. பிரைவேட் பீச்களில் நவீன உணவகம், விதவிதமான நீச்சல் உடைகள் விற்குமிடம், மசாஜ் சென்டர் என அதிகப்படியான வசதிகள் உண்டு.

இங்குள்ள பீச்களும் மத்திய தரைக்கடலோரப் பகுதிதான். ஆனால், "பீச்" என்றாலே அனைவருக்கும் கண்முன் விரியும் அகன்ற, அழகிய மணற்பரப்பு இங்கு கிடையாது! பின் என்னங்கிறீங்களா? சொல்றேன். பீச், ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே சைஸ்ஸிலான கூழாங் கற்களால் (Pebbles) நிறைந்து, விரிந்து கிடக்கிறது. இப்படி எங்குமே கண்டதில்லை. பெரிய ஆடம்பரக் கட்டடங்களின் முகப்பில் கொஞ்சம் அழகுக்காகப் பதித்திருப்பார்கள். பார்த்திருப்போம்... இங்கு பீச் முழுக்கப் பார்த்ததும், திறந்த வாய்மூட சிறிது நேரமானது. கடலில் குளித்துவிட்டு வருவோர்க்கு, கால்களிலும், ஆடைகளிலும் மண் ஒட்டிக்கொள்ளும் அவஸ்தை இல்லை.

நீலக் கலரில் ஜொலிக்கும் ஆழ்கடலை ரசிக்கவா, அல்லது, 'இருக்கிறதா? இல்லையா' என்று தேடும் அளவுக்கு நூல் அளவு பிகினி அணிந்து அலைகள் மீது ஆட்டம் போடும், உலகெங்கிலிருந்தும் வந்து நிறைந்திருக்கும் அழகுப் பெண்களை ரசிப்பதா என்ற சந்தேகம் நம்மவர்களுக்கு எழுவது இயற்கை! பல பெண்கள், உடலின் மேல் பகுதியில் துணியின்றி, அரை நிர்வாணத்தில் குளிக்கவும் செய்கின்றனர். பின் கரைக்கு வந்து, பெரிய சைஸ்ஸிலான, கலர் கலர் துண்டுகளைத் தரையில் விரித்து, வானத்தைப் பார்த்தபடி மல்லாக்கப் படுத்துக்கொள்கின்றனர். கடல் நீர் குளியலிலிருந்து விடுபட்டு, கிரீம்களை உடல் முழுக்க தடவிக்கொண்டு, சூரியக்குளியலைத் தொடர்கின்றனர். அவரவர் துணையுடனோ, குடும்பமாகவோ வருகின்றனர்.

இப்படிப்பட்ட காணக் கண் கோடி தேவைப்படும் அழகை எல்லாம் நம் இஷ்டம்போல் ரசிக்கமுடியாது ஆம்... அங்கெல்லாம் சில வினாடிகளுக்குமேல் மற்றவர்களை உற்றுப் பார்ப்பதும், அவர்களின் உருவம் மற்றும் உடைகளைக் கேலி பேசி கிண்டல் செய்வதெல்லாம் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது, அமெரிக்கா உள்பட, இம்மாதிரி நாடுகளிளெல்லாம், வெளியே ஒருவரைப் பார்க்கும்போது, தெரிந்தவரோ தெரியாதவரோ, யாராயினும், கையசைத்து, ஹாய் சொல்லி, 'ஹௌ ஆர் யூ' ன்னு கேட்டுவிட்டு புன்னகையுடன் நகர்ந்து செல்வதுதான் வழக்கம். நாமும் அதே வழக்கத்தைத்தான் பின்பற்ற வேண்டும். எனவே, ஓரக்கண்ணால் சில வினாடிகள் பார்த்துவிட்டு ஒதுங்கிடணும்.

பீச் தவிர்த்து, பார்ப்பதற்கு ஊர் முழுக்க அநேக கலைநயம் மிக்க சர்ச்கள் உள்ளன. 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட St. Reparate D St. Nicholas Russian Orthodox Cathedral குறிப்பிடத்தக்கவை. Castle High Park போன்ற பிக்னிக் ஸ்பாட்களும் நிறைய உண்டு.

Musee Matisse என்னும் ம்யூஸியம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. இதன் உள்ளே, அதிக விலை மதிப்புள்ள பெயிண்டிங்ஸ், ஓவியங்கள், சிற்பங்கள், புகைப்படங்கள் போன்றவை நிறைந்துள்ளன அவற்றின் பெரும் பகுதி, Matisse என்னும் கலைஞரும் அவரின் வாரிசுகளும் நன்கொடையாய் அளித்தவையாகும்.

இந்த ஊரின் அழகில் மயங்கி, நேரம் போனதே தெரியாமல் நாள் முடிந்துவிட, டின்னரை முடித்துக்கொண்டு ஹோட்டலுக்குத் திரும்பினோம்.

16ஆம் நாள்:

நைஸிலிருந்து புறப்பட்டு அடுத்து நாங்கள் சென்ற ஊர் கேன்ஸ். இது French Riviera வில் (மத்தியதரைக் கடலின் வளைவான, அழகிய, பீச்சோரப் பகுதி) அமைந்துள்ள புகழ் வாய்ந்த ஃபிரெஞ் நகரம். இது City of Stars என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு வருடம் தோறும் மே மாதம் 'கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல்' (முன்பு இது இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் என அழைக்கப்பட்டது) நடைபெறுகிறது.

இவ்விழாவில், உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து தயாரிக்கப்படும் திரைப்படங்கள், குறும்படங்கள், டாக்குமெண்ட்ரி போன்றவை, தகுதியின் அடிப்படையிலும், விதிமுறைகளுக்குட்பட்டும், இங்குள்ள Palais des Festivals என்னும் மிகப்பெரிய, அதி நவீன அரங்கம் ஒன்றில் போட்டிக்காகத் திரையிடப்படுகின்றன.

நடுவர் குழு அமைத்து, அதிலுள்ள நீதிபதிகளால், சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், ஒளிப்பதிவாளர் என அனைத்துப் பிரிவிலும் முதன்மையானவர்களைத் தேர்ந்தெடுத்து, விருதுகள் வழங்கி கவுரவிக்கின்றனர்.

இவ்விழாவினைக் காண, அழைப்பின் பேரில், பல நாடுகளிலிருந்தும், உயர்மட்ட சிறப்பு விருந்தினர்கள், பிரபலங்கள் மற்றும் திரைத்துறை அல்லாது மாடலிங் பிரிவில் முன்னணியிலிருக்கும் ஆண், பெண் என பலரும் வந்து கலந்துகொள்கின்றனர். அரங்கம் முழுவதும் சிவப்புக் கம்பளம் விரித்து விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த அரங்கினுள் பதியப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் கைரேகைகள் காலத்தால் அழியாதவை!!

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா, குறிப்பாக இந்திய சினிமாக் கலைஞர்களின் இதயங்களுக்கு நெருக்கமான, பல இனிய நினைவலைகளை, காலத்தால் அழியாத சுகானுபவங்களைச் சுமந்து நிற்பவை ஆகும்!

உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குனர் சத்யஜித்ரே இயக்கிய முதல் திரைப்படம், 'பதர் பாஞ்சாலி'. அது பங்கேற்ற முதல் சர்வதேசத் திரைப்பட விழா கேன்ஸ்! அதற்கு, முதல் சர்வதேச விருதை அள்ளித்தந்ததும் கேன்ஸ்!

இந்திய உலக அழகி, ஐஸ்வரியா ராய்க்கு 20 ஆண்டு காலம் சிவப்புக் கம்பள வரவேற்பு தந்து மகிழ்ந்ததும் கேன்ஸ். 2022-ல், இந்திய முன்னணி நடிகை, தீபிகா படுகோனேவுக்கு, சர்வதேச திரைப்படங்களின் முக்கிய விருதுகள் தேர்வுப் பிரிவு நடுவர்கள் குழுவில், அவரையும் ஒரு நடுவராக்கிக் கவுரவித்ததும் கேன்ஸ்!

இத்திரைப்பட விழா மட்டுமின்றி, இந்த அரங்கில் Cannes Lions international Festival of Creativity, மற்றும் வர்த்தகக் கண்காட்சி, பலதரப்பட்ட மாநாடுகள் ஆகியவையும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன.

இவ்வாறான ஆடம்பர விழாக்கள் வருடம் முழுக்க நடைபெற்றுக்கொண்டிருப்பதால், அவற்றில் பங்கேற்கவும், காணவும் அகில உலகிலிருந்தும் சூப்பர் மாடல்கள், பணம் படைத்த பிரபலங்கள் இந்த ஊருக்கு வந்து குவிந்தவண்ணம் உள்ளனர்.

ஒரு புறம் அழகிய மணற்பாங்கான பீச் மறுபுறம் கடைகள், ஆடம்பர உணவகங்கள், தங்கும் ஹோட்டல்கள், சூதாட்ட விடுதிகள் என கேன்ஸ் ஊரே வருடம் முழுக்க விழாக்கோலம் பூண்டு ஜொலிக்கிறது.

இவற்றையெல்லாம் பார்த்தபின், ஒரு சிறிய மலை மீதிருக்கும் Eze Village என்னும் ஊருக்குச் சென்றோம். அங்குள்ள வாசனை திரவியம் (French Perfume) தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிற்குச் சென்று, பெர்ஃபியூம் தயாரிக்கும் முறையை அங்குள்ளவர் விவரித்து கூறியதைக் கேட்டோம். மேலும் அவர், "சில வகை பெர்ஃபியூம்களைத் தயாரிக்க இந்தியாவிலிருந்து மல்லிகைப் பூக்களை இறக்குமதி செய்கிறோம்" என கூறியதைக் கேட்டு, பெருமை அடைந்தோம். சில வகை சோப், பெர்ஃபியூம்களை வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

(பயணம் தொடரும்... 9)

logo
Kalki Online
kalkionline.com