மஹாராஷ்டிராவில் ஒரு எவரெஸ்ட்! விசிட் அடிக்கலாம் வாங்க!

கல்சுபை மலை...
கல்சுபை மலை...

லையேற்றம் செய்வதில் இருக்கும் அலாதி இன்பம் என்னவென்று தெரியுமா? கடினமான பாதைகளை கடந்து மேலே ஏறிச்சென்று பார்க்கையில், அங்கே காணக்கூடிய அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் அழகுதான். அப்படி மலையேற்றம் செய்து கடைசியாக காணும் காட்சி நாம் இதுவரை மலையேறி வந்த கஷ்டத்தை மறக்கடித்து விடும். ‘உழைத்தால் பலன் உண்டு’ என்பதை உணர்த்தும் சிறந்த உதாரணமாகவும் இருக்கிறது.

இந்தியாவில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருப்பதுதான் கல்சுபை மலை. இதுவே மகாராஷ்ட்ராவில் உள்ள உயரமான மலையாகும். இந்த மலை 5400 அடி உயரம் கொண்டது. அதனாலேயே இந்த கல்சுபை மலையை மகாராஷ்ட்ராவின் எவரெஸ்ட் என்று அழைப்பார்கள்.

இந்த மலைத்தொடரானது கல்சுபையிலிருந்து ஹரிஸ்சந்திரகாட் வனவிலங்கு சரணாலயம் வரை அமைந்துள்ளது. இந்த மலைக்கு வருடம் முழுவதும் வனவிலங்கு ஆர்வலர்கள், மலையேற்றம் செய்பவர்கள், கல்சுபை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வருகிறார்கள்.

மலை உச்சியில் அமைந்திருக்கும் கல்சுபை கோவிலில் இருக்கும் கல்சுபை தேவியின் தரிசனத்தை பெறுவதற்காகவே ஏராளமான மக்கள் வருகிறார்கள். முன்பொரு காலத்தில் இம்மலையில் கல்சுபை என்ற பெண் வாழ்ந்து வந்திருக்கிறார். அவள் இங்குள்ள கிராமத்து மக்களின் நோய்களை குணமாக்குவது, அவர்களுக்கு உதவுவது என்று இருந்து வந்துள்ளார். ஒருநாள் அவள் இந்த மலைக்கு சென்றுவிட்டு திரும்பவேயில்லை. அந்த கல்சுபை என்னும் பெண்ணின் நினைவாகவே இம்மலையில் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்சுபை கோவில்
கல்சுபை கோவில்

கல்சுபை மலையேற்றமானது சற்று கடினமானதேயாகும். இருப்பினும் மலையேற்றம் செய்பவர்கள் இம்மலைக்கு விரும்பி வருகிறார்கள். இம்மலையை சுற்றியுள்ள கோட்டையான ஹரிஹரகாட், ஹரிசந்திரகாட், ரத்னாகாட் ஆகிய கோட்டைகளையும் இங்கிருந்து காண முடியும். இம்மலையை ஏறுவதற்கு இரவிலே நிறைய பேர் வருவது வழக்கம். ஏனெனில் காலையில் சூரிய உதயம் பார்ப்பது இங்கே மிகவும் பிரபலமான பொழுதுபோக்காகும்.

கல்சுபை மலையிலிருந்து தெரியும் இயற்கை அழகானது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். அங்கிருந்து பார்க்கையில், அலங், மதன், ரத்னகாட், குலங், அஜோபா போன்ற மலைத்தொடர்களை காணலாம். சுற்றுலாப்பயணிகள் வேண்டுமென்றால் அந்த மலைகளிலும் மலையேற்றம் செய்யலாம்.

மலையேற்றம் செய்ய தொடங்கும் இடத்தில் அமைந்திருக்கும் பரி கிராமம் விவசாய நிலங்களை கொண்டது. அங்கே இயற்கை அழகை ரசித்தபடி நடந்து செல்வது மனதிற்கு ரம்மியமாக இருக்கும். இந்த மலையில் அமைக்கப்பட்டிருக்கும் ஏணியில் ஏறி இறங்குவது என்பது மிகவும் சவாலானது. அதுவும் இரண்டு பக்கத்திலிருந்துமே மக்கள் கூட்டம் வருவதால், இந்த ஏணியில் ஏறுவதை சற்று கடினமாக்குகிறது.

ஏணியில் ஏறி இறங்குவது...
ஏணியில் ஏறி இறங்குவது...

இங்கே அமைந்துள்ள கல்சுபை கோவிலை மிகவும் புனிதமாக கருதுகிறார்கள். வருடம் முழுவதும் திறந்திருக்கும் இக்கோவிலில் கல்சுபாய் தேவியை தரிசனம் செய்ய நிறைய பக்தர்கள் வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
முட்டைக்கோஸ் சாற்றில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்!
கல்சுபை மலை...

கல்சுபை மலைக்கு வருவதற்கான சிறந்த மாதம், ஏப்ரல் முதல் நவம்பர் ஆகும். இந்த மாதங்களில் வரும் போது எந்த வானிலை பிரச்னைகளும் இன்றி சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை தெளிவாக காண முடியும்.

கல்சுபை மலை மிகவும் பிரபலமடைய காரணம் இங்கு அமைந்திருக்கும் அருவிகள், பச்சைபசேலென்று இருக்கும் வயல்வெளி, அடர்ந்த காடு, பழமையான கோட்டைகள் ஆகியன ஒருசேர அமைந்திருப்பதேயாகும். வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டியது இந்த கல்சுபை மலை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com