முட்டைக்கோஸ் சாற்றில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்!

முட்டைக்கோஸ் ஜூஸ்
முட்டைக்கோஸ் ஜூஸ்

முட்டைக்கோஸ் கீரை வகையைச் சேர்ந்த ஒரு உணவாகும். இதில் உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள், பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்றவை அதிகமாக உள்ளன. முட்டைக்கோஸில் மட்டுமே உள்ளது வைட்டமின் ‘யூ’ எனும் அபூர்வ சத்து. இது பெப்டிக் அல்சரை குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது என்பதை ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் 1950ல் நடைபெற்ற ஆய்வில் கண்டறிந்தார்கள். பிரஷ்ஷான முட்டைக்கோஸ் சாறு 7 நாட்கள் பருகி வந்தாலே அது அல்சரை குணப்படுத்தும்.

தையோசயனேட்டு, கார்பினால், லுடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட்டு போன்ற ரசாயன மூலக்கூறுகள் முட்டைக்கோஸில் உள்ளன. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன. குறிப்பாக, நோய் எதிர்ப்பு பொருட்களாக செயல்படுகிறது. மார்பகம், தொண்டை, குடல் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படுகிறது. புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முட்டைக்கோஸ் முற்றிலும் தடுக்கிறது. மேலும், உடலிலுள்ள கெட்ட கொழுப்பான எல்.டி.எல் கொழுப்பை குறைப்பதில் பங்காற்றுகிறது. முட்டைக்கோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பகப் புற்று நோய் வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

முட்டைக்கோஸை வேகவைத்து சாப்பிட்டால் அதிலிருந்து 7 முதல் 26 சதவீதம் இரும்புச்சத்து கிடைக்கும். எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைக்கோஸ் அல்லது முட்டைக்கோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

உடலில் அழற்சி அல்லது உட்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைக்கோஸை சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட் குளுட்டமைன், அவற்றை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும். இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.100 கிராம் முட்டைக்கோஸில் 37 மில்லி கிராம் வைட்டமின் சி கிடைக்கிறது.

வைட்டமின் பி1 மற்றும் பி6 போன்ற அத்தியாவசியமான வைட்டமின்களும் முட்டைக்கோஸில் உள்ளன. இதில் பீட்டா கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண் புரையை தடுக்கிறது. தற்போது மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் சிவப்பு நிற முட்டைக்கோஸ் சாப்பிட்டால், அல்சைமர் நோயை தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள வைட்டமின் கே மற்றும் ஆந்தோசையனின் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள், மூளையில் ஏற்படும் பிளேக்கை குறைக்கும். எலும்பு வளர்சிதை மாற்றத்தில் பங்கேற்கும், அல்சைமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்பை கட்டுப்படுத்தும்.

முட்டைக்கோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்னையை குணமாக்கும். முட்டைக்கோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசைகளில் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து சிறந்த நிவாரணம் தரும். முட்டைக்கோஸ் வேக வைத்த தண்ணீரில் தலை முடியை அலசுவதால் அது வளர்ச்சியைத் தூண்டும். முட்டைகோஸ் தண்ணீரில் சல்ஃபர் இருப்பதால் இது தலைமுடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. அதோடு, இதில் பொட்டாசியம், மாங்கனீசு, மக்னிசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ இருக்கிறது. இவை உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. அதோடு இரும்புச்சத்து, ஃபோலேட் இதில் உள்ளன. இவை எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மனநல பிரச்னைகளையும் தடுக்க உதவுகிறது. இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
‘ஆயிரம் காய்ச்சி அதிசய பலா மரம்’ எங்குள்ளது தெரியுமா?
முட்டைக்கோஸ் ஜூஸ்

மாசு மருவற்ற பொலிவான சருமம் கிடைக்க எல்லாருக்கும் வரப்பிரசாதமாக இருப்பது முட்டைக்கோஸ் ஜூஸ்தான். இதில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன் ஆகியவை நிறைந்திருக்கிறது. இதை அருந்துவதால் விரைவில் வயதான தோற்றம் உண்டாவது தடுக்கப்படுகிறது. முட்டைக்கோஸை உணவில் பொரியலாக, கூட்டு , சூப்பாக கூட எடுத்துக் கொள்ளலாம். முட்டைக்கோஸில் உள்ள சத்துக்கள் தீங்கு விளைவிக்கும் பிரீ ரேடிக்கல்களை சுத்தப்படுத்தும். 100 கிராம் முட்டைக்கோஸ் 500 மைக்ரான் ரேடிக்கல்களை விரட்டி அடிக்கும்.

முட்டைக்கோஸ் சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது என்றாலும், சில பக்க விளைவுகளும் இதில் உள்ளன. முட்டைக்கோஸை அதிக அளவில் சாப்பிடுவது அதில் உள்ள கோய்ட்ரோஜன்கள் எனப்படும் பொருட்கள், தைராய்டுக்கு அயோடின் செல்வதை தடுப்பதன் மூலம் தைராய்டு சம்பந்தமான கோளாறுகளை ஏற்படுத்துகிறது. அதிகமாக உட்கொள்வது வாய்வு, செரிமானம் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தலாம். முட்டைக்கோஸ் சாற்றில் உள்ள சில சத்துக்கள் சில மருந்துகளுடன் தொடர்பு கொள்வதாக சொல்லப்படுகிறது. எனவே, அளவாக சாப்பிட்டு முட்டைக்கோஸின் பலன்களைப் பெற்று கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com